Election bannerElection banner
Published:Updated:

`சில்வர்’ சிந்து டு `கோல்டு’ சிந்து... பேட்மின்டன் சாம்பியனின் பயணம்! #VikatanInfographics

`சில்வர்’ சிந்து டு `கோல்டு’ சிந்து... பேட்மின்டன் சாம்பியனின் பயணம்! #VikatanInfographics
`சில்வர்’ சிந்து டு `கோல்டு’ சிந்து... பேட்மின்டன் சாம்பியனின் பயணம்! #VikatanInfographics

இந்த ஆண்டின் most consistent பேட்மின்டன் ப்ளேயர் சிந்து.. ஏனென்றால்...

``இரண்டாம் இடம் பிடித்தவர்களை இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. ஒருபோதும் நான் இரண்டாம் இடத்தவனாக இருக்கப் போவதில்லை” என்றார் ஃபெர்ராரி நிறுவனர் என்சோ ஃபெர்ராரி.  இத்தாலியைச் சேர்ந்த ஃபெர்ராரி நிறுவனம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் கார்களை தயாரிப்பதில் உலகின் முன்னணி நிறுவனமாக இருக்கக் காரணம், `முதல் இடம்’ எனும் இலக்கை விரட்டிச் செல்வதால்தான்!

என்சோ ஃபெர்ராரி சொன்னது மறுக்க முடியாத உண்மை. `முதல் இடம்’ என்ற அந்தஸ்து, நமக்கு மிகவும் பழக்கப்பட்டது. பள்ளிக்கூடம், கல்லூரி, வேலை இடம்,  பிசினஸ், சினிமா, ஆட்சி என எங்கும் எதிலும் `நம்பர் 1’ தான் உச்ச நட்சத்திரம். அதுவும் விளையாட்டைப் பொறுத்தவரை, ஒரு வீரர் வீராங்கனை சாம்பியன் என்றால் இந்த உலகம் கொண்டாடும். இரண்டாம் இடத்தைப் பிடித்தவருக்கு அதிருப்தியையும், அனுதாபங்களுமே பரிசு. 

 

பி.வி சிந்து! பேட்மின்டனில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம். 2013-ம் ஆண்டு முதல் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் சிந்து, சர்வதேச அரங்கில் தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர். 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி! ஒலிம்பிக் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்காக வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தபோது, பேட்மின்டன் உலகமே இந்த இளம் வீராங்கனையைத் திரும்பிப் பார்த்தது.

`சிந்து..சிந்து..’ என இந்திய ரசிகர்கள் கொண்டாடினர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிறகு அவர் ஓய்வெடுக்கவில்லை. தங்கப்பதக்கம் வென்று சாம்பியனாவதே அவரது இலக்காக இருந்தது! அடுத்தடுத்து நடைபெற்ற சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்ற சிந்து, உலக தரவரிசை பட்டியலில் முன்னேறினார். ஆனால், `தங்கப்பதக்கம்’ மட்டும் கைகூடவே இல்லை.  ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப், காமன்வெல், ஏசியன் கேம்ஸ், வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் என ஏழு பெரிய டோர்னமென்ட் ஃபைனல்களில் அவருக்கு இரண்டாம் இடமே! தோல்வியை எதிர்கொண்ட பிறகு, ஒவ்வொரு முறையும் சிந்து பேசும் போது, `சாம்பியன் இன் மேக்கிங்' என்பதை உணர்த்துவார். 

குறிப்பாக, 2018-ம் ஆண்டு கடினமாகவே இருந்தது.  ஜனவரி மாதம் நடைபெற்ற இந்தியன் ஓப்பன் பேட்மின்டன் ஃபைனலில், அமெரிக்காவின் பெய்வான் சங் - சிந்து மோதினர். முதல் செட்டை சிந்துவும், இரண்டாவது செட்டை பெய்வானும் கைப்பற்றியிருந்தனர்.  விறுவிறுப்பான மூன்றாவது செட்டில் கடைசி வரை போராடிய சிந்து, 20-22 என்ற புள்ளிக்கணக்கில் இழந்தார். ``முயற்சி செய்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். இந்தமுறை வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்த முறை மீண்டும் முயற்சி செய்வேன்” என்றார் சிந்து.

இந்தியன் ஓபனை தொடர்ந்து, தாய்லாந்து ஓபன், காமன்வெல்த் போட்டிகள் என அடுத்தடுத்து இரண்டாம் இடம். இறுதிப் போட்டியில் தோற்பது குறித்து அப்போதே விமர்சனங்கள் எழுந்தன. 2018 உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் தங்கத்தை நழுவவிட்ட போது, விமர்சனங்கள் வலுவாயின. ``இறுதிப்போட்டிகள்ல உங்களது மனநிலை என்னவாக இருக்கும்?” , ``ஃபைனலை எதிர்கொள்ளும் பக்குவம் சிந்துவுக்கு இல்லை”, ``தங்கப்பதக்கம் வென்றால்தான் சாம்பியன். சிந்து எப்படி சாம்பியனாக முடியும்?” என வறுத்தெடுத்தனர்.

எதற்கும் அசராத சிந்து,  ``2018-ல் தொடர்ந்து நான்காவது முறையாக ஃபைனலில் தோற்பது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம். தீவிரப் பயிற்சிக்கு மீண்டும் தயாராக உள்ளேன். அடுத்து வரும் தொடர்களில் கவனம் செலுத்த உள்ளேன்” என்றார் அமைதியாக. தோல்வியை ஒப்புக்கொள்ளும் மனநிலை கொண்டவரால்தான் அடுத்த முறை எப்படிப் பெற முடியும் எனத் திட்டமிடும் பக்குவம் அதிகமாக இருக்கும். சிந்து அதைச் சரியாகச் செய்து காட்டினார். ஒவ்வொரு முறை ஃபைனலில் தோற்கும் போதும், முன்பைவிட  இன்னும் வலிமையாக, தைரியமாக, தெளிவான இலக்குடன் அடுத்த போட்டிக்குத் தயாராகிறார்

உலகின் முன்னணி பேட்மின்டன் வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்ளும் பி.டபிள்யூ.எஃப் `வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ்’ சமீபத்தில் சீனாவில் நடைபெற்றது. 2018-ல் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடருக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்தியாவிலிருந்து பி.வி.சிந்து, சமீர் வர்மா என இரண்டு பேர் மட்டுமே தேர்வாகினர். 

வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் முதல் போட்டியில், தரவரிசைப் படியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார் சிந்து. இந்தப் போட்டியில், 24 - 22, 21 -15 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில், நம்பர் 1 இடத்தில் உள்ள டாய் சூ யிங் உடன் மோதினார். 2018 ஆசிய விளையாட்டுப் போட்டி ஃபைனலில் டாய் சூ யிங்கிடம் தோல்வியடைந்த சிந்து, இம்முறை ஏமாறவில்லை. பரபரப்பான இந்தப் போட்டியில், 14-21, 21-16, 21-18 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார்.

அமெரிக்காவின் பெய்வான் சங் எதிரான மூன்றாவது போட்டியிலும், சிந்து ஆதிக்கம் செலுத்தினார். 21-9, 21-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். 2018 இறுதிப் போட்டிகளில் தான் எதிர்கொண்ட வீராங்கனைகளிடம் தோல்வியைத் தழுவிய சிந்து, வேர்ல்டு டூர் ஃபைனலில் பதிலடி கொடுத்தார். ஜப்பானின் ஒகுரா நாஸோமிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும், 21-19, 21-17 என எளிதாக வெற்றி பெற்றார். 

2018-ம் ஆண்டில், வெற்றித்தோல்வி என பெஸ்டாக அமையவில்லை என்றாலும், ஒவ்வொரு தொடரிலும் சிந்துவின் விளையாட்டு மெருகேறி வருவது உறுதி. ஒவ்வொரு ஃபைனலிலும் சிந்து எதிர்கொள்ளும் வீராங்கனைகள் வெவ்வேறாக இருந்தாலும், 6 ஃபைனலிஸ்டுகளுக்குமே சிந்து மட்டும்தான் எதிராளி! இந்த ஆண்டின், most consistent பேட்மின்டன் ப்ளேயர் சிந்து என்பதில் நோ டவுட். 

வெள்ளியோ, தங்கமோ, வெற்றியோ, தோல்வியோ..``வாட் நெக்ஸ்ட்” என்பதே சாம்பியனின் சிந்தனையில் கலந்துள்ள சீக்ரட் மந்திரம்!

You Go Sindhu! 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு