Published:Updated:

`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி

`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி
`தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிந்து’ - பேட்மின்டன் வேர்ல்டு டூர் ஃபைனலில் அதிரடி

லகின் முன்னனி பேட்மின்டன் வீரர் வீராங்கனைகள் கலந்துகொள்ளும் பி.டபிள்யூ.எஃப் ’ வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ்’ சீனாவில் நடைபெற்று வருகிறது. 2018-ல் சிறப்பாக விளையாடிய வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடருக்குத் தேர்வு செய்யப்படுவர். இந்தியாவிலிருந்து பி.வி.சிந்து, சமீர் வர்மா என இரண்டு பேர் மட்டுமே தேர்வாகியுள்ளனர்.

தொடர்ந்து மூன்றாவது முறையாக, வேர்ல்டு டூர் ஃபைனல்ஸ் தொடருக்கு முன்னேறியுள்ள பி.வி.சிந்து, உலகின் டாப் பேட்மின்டன் வீராங்கனைகளை எதிர் கொள்கிறார். `ஏ’ பிரிவில், பேட்மின்டன் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சீன தைபேவின் தாய் சூ யிங், இரண்டாம் இடத்தில் இருக்கும் அகானே யமாகுச்சி, அமெரிக்காவின் பேய்வென் சாங் ஆகியோருடன் பி.வி.சிந்து இடம் பெற்றுள்ளார். இதே போல `பி’ பிரிவில், ஜப்பானின் நோசோமி ஓக்குஹரா, சீனாவின் சென் யூஃபேய், தாய்லாந்தின் ரட்சானக், கனாடாவின் மிச்சல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தப் பிரிவில், முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அரை இறுதிக்கு முன்னேறுவர்.

டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில், ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார் சிந்து. 2018-ம் ஆண்டு, சிந்து - யமாகுச்சி மோதிய ஐந்து போட்டிகளில், 4 முறை சிந்து வெற்றி பெற்றுள்ளார். யமாகுச்சிக்கு எதிரான வேர்ல்டு டூர் ஃபைனலின் முதல் போட்டியில் 24 - 22, 21 -15 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் நம்பர்-1 வீராங்கனை தாய் சூ யிங் உடன் மோதினார் சிந்து.

2018 ஆசிய விளையாட்டு இறுதிப் போட்டியில், தாய் சூ யிங்கிடம் தோல்வியடைந்த சிந்து, தங்கம் வெல்லும் வாய்ப்பை நழுவவிட்டார். அதனால், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடந்த இந்தப் போட்டியில், சிந்து பதிலடி கொடுத்தார். 14 - 21, 21 - 16 என முதல் இரண்டு செட்களையும் வீராங்கனைகள் மாறி மாறிக் கைப்பற்றினர். பரபரப்பான மூன்றாவது செட்டில், கடைசிவரை போராடிய சிந்து 21 - 18 என்ற புள்ளி கணக்கில் தாய் சூ யிங்கை தோற்கடித்தார். தாய் சூவிடம் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து வந்ததற்குச் சிந்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வேர்ல்டு டூர் ஃபைனல் தொடரின் அடுத்த போட்டியில், அமெரிக்காவின் பேய்வென் சாங்கை சிந்து எதிர்கொள்கிறார். இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம், அரை இறுதிப் போட்டிக்கு சிந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. உலகின் டாப் வீராங்கனைகளை வீழ்த்தியது, சிந்துவின் 2018-ம் ஆண்டின் இயர் எண்டை அதிரடியாக்கியுள்ளது.