Published:Updated:

சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை!

சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை!

அந்த அலறலில் வெளியேறியது சாய்னா கொண்டிருந்த இரண்டு ஆண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில் அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்டுமல்ல, தன் தன்மானத்தை வென்றதுக்காக!

Published:Updated:

சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை!

அந்த அலறலில் வெளியேறியது சாய்னா கொண்டிருந்த இரண்டு ஆண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில் அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்டுமல்ல, தன் தன்மானத்தை வென்றதுக்காக!

சாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம்! ஒரு புகைப்படம் சொல்லும் கதை!

சாய்னாவின் அந்தப் புகைப்படம் இன்னும் கண்ணை விட்டு அகலவில்லை. கைகளைத் தூக்கி, கண்களை மூடிக்கொண்டு, வாய்திறந்து கத்துகிறார். மூடியிருந்த அந்தக் கண்களிலும் ஆக்ரோஷம் வெளிப்படுகிறது. அத்தனை செய்தித்தாள்களிலும் அந்தப் புகைப்படம்தான். அந்தக் கட்டுரைகளின் தலைப்பைப் பார்த்தால், அது காமன்வெல்த் சாம்பியனின் மகிழ்ச்சித் தருணமாக மட்டும்தான் தெரியும். ஆனால், நிச்சயம் அது அந்த சந்தோஷத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல. அந்த அலறலில் வெளியேறியது சாய்னாவின் இரண்டாண்டு வலி... ரியோவிலிருந்து தன்னைத் துரத்திய கேள்விகளுக்கும், அவமாரியாதைகளுக்குமான பதில், அந்தச் சத்தம். அந்தக் களிப்பு தங்கம் வென்றதுக்காக மட்டுமல்ல, தன் தன்மானத்தை வென்றதுக்காக!

விளையாட்டு கொஞ்சம் விசித்திரமானது. அதற்காகத் தன்னை அர்ப்பணிப்பவனை ஜாம்பவானாக்கி அழகு பார்க்கும். புகழின் உச்சியில் இருக்கும்போதே, அவன் வீழ்ச்சிக்காக விதையைச் சீக்கிரம் விதைத்திடும். அதுவரை அவனைப் புகழ்ந்து எழுதிய பேனாக்களை, `எப்போ ஓய்வு பெறுவீங்க?' என்று எழுதவைக்கும். அடுத்து இன்னொருவனைத் தேடிப் பிடிக்கும். அவனைக் கொண்டு முன்னவனின் வீழ்ச்சியை அறுவடை செய்யும். ரசிகர்களின் கரகோஷத்தில் மகிழ்ச்சியைக் காணப் பழகியவன், எல்லாம் மாறி அவர்களின் பரிதாபப் பார்வையின் நடுவே நிழலாய் மறைந்துபோவான். விளையாட்டு உலகம் இப்படி எத்தனையோ கதைகளைப் பார்த்துவிட்டது. 

பிட்சுக்கு நடுவே ராக்கெட்டே விட்டாலும் தன்னைத் தாண்டவிடாத டிராவிட், தன் அந்திமக் காலத்தில் கால்களின் நடுவே செல்லும் பந்துகளைத் தடுக்க முடியாமல் திண்டாடியதைப் பார்த்தபோதெல்லாம் கிரிக்கெட்டே வெறுத்துப்போனது. ஃபெர்னாண்டோ டாரஸ் - பெனால்டி ஏரியாவில் மார்க் செய்யப்படாமல் நின்றுகொண்டு, பந்தை போஸ்டுக்கு மேலே அடித்தபோதெல்லாம் செல்சீ ரசிகன் மட்டுமல்ல ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுமே பரிதாபப்பட்டனர். இப்படி எத்தனையோ நட்சத்திரங்கள். 

அந்த வீழ்ச்சி தொடர்ந்துகொண்டே இருக்கும். என்றேனும் ஒருநாள் அந்தப் பழைய நாயகனைப் பார்க்கமாட்டோமா என்ற ஏக்கம் ரசிகர்களின் ஆழ்மனதை ஆட்டிப்படைக்கும். `கம்பேக்' என்ற வார்த்தைக்கான அர்த்தம் தேடுவான். ஆனால், அது எல்லோர் விஷயத்திலும் நடந்திராது. கண்ணீர் மல்க ஓய்வு அறிவுப்பு வெளியாகும். `ப்ச்...இப்படி ஒரு எண்டிங் இல்லாம இருந்திருக்கலாம்' என்ற பரிதாபம் வெளிப்படும். ஆனால், இன்னும் சிலர் அதை உடைப்பார்கள். மலையுச்சியில் தன் அலகை உடைத்து, சிறகுகளைப் புதுப்பித்து, புத்துயிர் பெற்று வானம் தாண்டிப் பறக்கும் ராஜாளியைப் போல், மீண்டும் வருவார்கள்... மீண்டு வருவார்கள்..!

அப்படிப்பட்ட தருணங்கள் ரசிப்பதற்கான தருணங்களாக மட்டும் இருக்காது. அவை கொண்டாட்டங்களாகவே மாறும். தன் ஆஸ்தான நாயகனின் பழைய ஆட்டம்... அந்தப் போராட்டம் பழைய நினைவுகளை நியூரான்கள் வழியே கடத்தும். கார்னியாவின் ஓரத்தில் நாஸ்டால்ஜியா நினைவுகள் நிழலாய் வந்துபோகும். வெற்றியும் தோல்வியும் அங்கு அர்த்தமற்றுப்போகும். இப்படியான சம்பவங்களையும் விளையாட்டு உலகம் அவ்வப்போது கண்டுகொண்டுதான் இருக்கிறது. 

2017 ஆஸ்திரேலிய ஓப்பன் ஃபைனலில் ஃபெடரர் - நடால் மீண்டும் மோதியபோது, சி.எஸ்.கே-வுக்கு எதிரான கடைசிப் போட்டியில் கிறிஸ் கெய்ல் சிக்ஸ்ர்கள் பறக்கவிட்டபோது, அதே போட்டியில் பஞ்சாப் பந்துவீச்சை தோனி வெளுத்துக்கட்டியபோது... வெற்றியையும் தோல்வியையும் பற்றி கவலைப்பட்டவர்கள் எத்தனைபேர்? ஃபெடரர் சாம்பியனாகிவிட்டார். ஆனால், அவர் கோப்பையை முத்தமிடுவதைப் பார்க்கமுடியாமல் கண்ணீர்த் துளிகள் மறைத்து நிற்கின்றன. சி.எஸ்.கே தோற்றுவிட்டது. ஆனால், லாங் ஆன் திசையில் `வின்டேஜ்' தோனி அடித்த அந்த இமாலய சிக்ஸரைப் பார்த்து இன்னும் ரோமங்கள் சிலிர்த்துத்தான் நிற்கின்றன. 

அந்த கம்பேக் ரசிகர்களுக்கு அவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்குமெனில், அந்த வீரருக்கு எப்படி இருக்கும்? தன் அறிமுகப் போட்டியைவிட, தன் முதல் வெற்றியைவிட, தான் படைத்த சாதனையைவிட அந்தத் தருணம் மிகப்பெரியதாய்த் தெரியும். ஆம், தன் மீது சந்தேகம் கொள்பவர்களுக்கு பதிலடி கொடுப்பதைவிட நிம்மதியான தருணம் ஒரு விளையாட்டு வீரனுக்கோ, வீராங்கனைக்கோ இருக்காது. `இதான் நான்' என்று உணர்த்தும் அந்த நிமிடம், அதுவரை அடக்கவைத்திருந்த அவர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளும் உடைத்துக்கொண்டு வெளியேறும். சாய்னாவின் அந்தப் புகைப்படம் அதற்குச் சான்று. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேள்விகளால் துரத்தப்பட்டவர். சிந்துவின் எழுச்சியும், சாய்னாவின் தோல்விகளும் அவரை நோக்கி வந்த கேள்விகளைக் கடுமையாக்கியது. 20 வயதில் ராஜிவ் காந்தி கேல்ரத்னா விருது, 22 வயதில் ஒலிம்பிக் பதக்கம் என்று இந்தியா விளையாட்டின் தவிர்க்க முடியாத முகமாய் இருந்தவர். 26 வயதில் அவரிடம் மூட்டையைக் கட்டிக் கிளம்பச் சொன்னால்..? தொடர் காயங்களால் தன் கனவுகள் நோக்கிப் பயணிக்க முடியாமல் தவித்தவரை அப்படியான கேள்விகள் எப்படித் துளைத்திருக்கும்..? 

ரியோ நகரில் இந்திய ஒலிம்பிக் குழு கால்வைத்தபோது மொத்த இந்தியாவுக்கும் சாய்னா செல்லப்பிள்ளை. காரணம், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றிருந்தார். ஆனால், அவரை ஹைதராபாத்திலிருந்து பிரேசில் வரை துரத்திச்சென்ற மணிக்கட்டுக் காயம், அவரை வாட்டி வதைத்தது. இரண்டாவது லீக் போட்டியில் தோற்று வெளியேறினார் சாய்னா. லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன வீராங்கனை வாங் இஹானை காலிறுதியில் வீழ்த்துகிறார் சிந்து. அன்று சிந்துவும் ஃபேவரிட் ஆகிறார்.

ஆனால், அதற்காக சாய்னாவைப் பழிக்கத் தொடங்கினார்கள். ``சிறந்த வீராங்கனைகளைத் தோற்கடிக்கத் தெரிந்த ஒருவரைக் கண்டுகொண்டோம், நீங்கள் மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்புங்கள்" என்று மறுநாளே சாய்னாவுக்கு ட்வீட் செய்கிறார் ரசிகர் ஒருவர். அதற்கு `நன்றி' என்று ரிப்ளை செய்கிறார் சாய்னா. இதுதான் ஒரு ஒலிம்பிக் சாம்பியனுக்கு... இந்த தேசத்து பேட்மின்டனுக்கு அடையாளம் தந்தவருக்கு நாம் தந்த மரியாதை. அதன்பிறகுதான் காயம் முழுதாகக் குணமடையாமல் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்றது தெரியவந்தது. ஆனால், அவமதித்தது அவர் ஒருவர் மட்டும் இல்லை என்பதும் உண்மை.

அடுத்து உடனே முழங்கால் காயம். விளையாட்டு வாழ்கைக்கே முழுக்குப் போடக்கூடயது. மீண்டு வந்தார். ஆனால், பழைய ஆட்டம் இல்லை. தொடர் தோல்விகள். சாய்னாவின் வீழ்ச்சி தொடர்ந்தது. அதே சமயம் சிந்து வெற்றிகளில் மிதந்துகொண்டிருந்தார். உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி, கொரிய ஓப்பனில் தங்கம் என டாப் கியரில் பயணித்தார். போதுமே நம்மவர்களுக்கு, சாய்னாவைப் பற்றி எழுதித் தீர்த்தார்கள். ஆனால், தொடர்ந்து முயற்சி செய்தார் சாய்னா. வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். சிந்துவைக்கூட ஒருமுறை வீழ்த்தினார். ஆனால், அவர் ஆட்டம் கன்சிஸ்டென்டாக இல்லை. மீண்டும் தோல்விகள் துரத்தின. சீனப் பெண்களின் ஆதிக்கத்துக்கு சவால் தந்த அந்தச் சாய்னா இல்லை. இந்திய விளையாட்டு உலகைப் பொறுத்தவரையில் சாய்னா எனும் சகாப்தம் முடிந்துவிட்டது. 

கோல்ட் கோஸ்ட் போகும்போது சாய்னாவிடம் யாரும் தங்கம் எதிர்பார்க்கவில்லை. கரோலினா மரின், இஹான், ஒகுஹாரா போன்ற வீராங்கனைகள் இல்லாததால் பதக்கம் கிடைத்துவிடும். ஆனால், தங்கம் வாய்ப்பில்லை. சிந்து இருக்கிறாரே! எல்லோரும் எதிர்பார்த்ததைப் போல் சிந்து - சாய்னா ஃபைனல். சிந்துவின் ஆக்ரோஷத்தைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே ரசிகர்கள் தயாரானார்கள். கோல்ட்கோஸ்ட் பேட்மின்டன் அரங்கமும் நிரம்பியது. அன்று அவர்கள் கண்டது வேற லெவல் கம்பேக்!

``They are playing like gladiators. There's lot of blood on the court" என்று வர்ணனையாளர் சிலிர்க்குமளவுக்கு வெறித்தனமான போட்டி. இருவரும் கடைசி நொடி வரை போராடினார்கள். ஆனால், சாய்னா ஆடிய ஆட்டம்.. மெர்சல்! பழைய வேகம், பழைய ஸ்டைல், பழைய ஆக்ரோஷம் எல்லாம் திரும்பியது. சிந்துவின் சர்வீஸை அப்படியே ஸ்மேஷ் அடித்து ரிட்டர்ன் செய்து பாயின்ட் எடுத்தபோதெல்லாம் மிரட்டினார். முதல் செட் வென்றுவிட்டார். ஆனால், அவர் போட்டியை வெல்வார் என்று பெரிய அளவில் யாருக்கும் நம்பிக்கை இல்லை.

``There is possibility for Sindhu to bring out her strong angles and smashes" என்கிறார் வர்ணனையாளர். சாய்னாவின் கை ஓங்கியிருக்கும்போது `கம் ஆன் சாய்னா' என்று ஒரேயொரு கூரல் அந்த அரங்கில் கேட்கிறது. சிந்து புள்ளிகள் எடுக்கும்போது ``சிந்து..சிந்து..சிந்து.." என அரங்கம் அதிர்ந்தது. அந்தச் சத்தமே, அனைவரும் சாய்னா மீது கொண்டிருந்த அபிப்ராயத்தை உணர்த்தியது. அவர்கள் எதிர்பார்த்ததுபோல் இரண்டாவது செட்டில் பின்தங்கினார் சாய்னா. 5-8, 8-13, 14-18 என பெரிய வித்தியாசத்தில் பின்தங்குகிறார். ஆனாலும் அவர் அசரவில்லை. 

19-17 என சிந்து முன்னிலை. ஒரு மிகப்பெரிய ரேலி. இரண்டு பேரும் வெறித்தனமாக ஆடுகிறார்கள். கிராஸ் கோர்ட் ஷாட், டிராப், ஸ்மேஷ்... அனைத்தையும் முயற்சிசெய்கிறார்கள். ஒருவழியாக சாய்னா அந்தப் புள்ளியைத் தன்வசப்படுத்துகிறார். இருவரும் சோர்வில் துவண்டுபோய் நிற்கிறார்கள். ``Saina possibly broke P.V.Sindhu's back with that rally" என்று வர்ணனையாளர் சொன்ன அந்த வார்த்தைகள் சாய்னா ஆடிய ஆட்டத்தைச் சொல்லிவிடும். பின்தங்கியிருந்த நேரத்திலும் பெர்ஃபெக்ஷன் தவறாமல் நேர்த்தியாக ஆடினார். தன் வேரியேஷன்களால் சிந்துவை பெண்டு நிமிர்த்தினார். ``Not many people thought she can put on a show like this in a huge theatre". 

ஆம், யாரும் எதிர்பார்க்கவில்லை.. சாய்னா இப்படி திருப்பி அடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அதே வேகத்தில் அந்த செட்டையும் தங்கத்தையும் தனதாக்கினார். கடைசி பாயின்ட் எடுத்ததும், பேட்டைக் கீழே போட்டு கத்தினார். அப்போது எடுத்ததுதான் அந்தப் புகைப்படம். அதுவரை சாய்னா அப்படிக் கத்தியதில்லை. இதற்கு முன்பு பெரிய தொடர்களில் பதக்கம் வென்றபோதெல்லாம்கூட இப்படிக் கத்தியத்தில்லை. 2010 காமன்வெல்த்தில் தங்கம் வென்றதும் கைகள் கூப்பி, அரங்கத்துக்கு முத்தத்தால் நன்றி தெரிவித்து கோபிசந்திடம் ஓடினார். ஒலிம்பிக்கில், தன்னை எதிர்த்து விளையாடிய வீராங்கனை காயத்தால் விலகி வெண்கலம் கிடைத்தபோது, அவருக்காக வருந்தினார், பேட்டை உயர்த்திக் காட்டினார். ஆனால், ஆர்ப்பரிக்கவில்லை. அங்கு ஒரு அழகான ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பையும் காட்டினார். பதக்கம் தன் கழுத்தில் ஏறி, ஒலிம்பிக் அரங்கில் இந்தியக் கொடி ஏற்றப்பட்டபோதும் ஆர்ப்பரிக்கவில்லை.

அப்படிப்பட்ட சாய்னாதான் அன்று அப்படிக் கத்தினார். ஒலிம்பிக் வெண்கலத்தைவிட, இந்தத் தங்கம் பெரிதல்ல. சிந்துவை வென்றதற்காகவும் அல்ல. ஆனாலும், அப்படி ஒரு மகிழ்ச்சி. இரண்டு ஆண்டுகளாக உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருந்த வலியின், உதாசீனத்தின் வெளிப்பாடு. `சாய்னா அவ்வளவுதான்' என்று சொன்னவர்களுக்கு, `It's just the beginning' என்று சொல்வதற்கான அறைகூவல் அது. ஆம், அந்த ஒற்றைப் புகைப்படத்தில் இத்தனை விஷயங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. அந்தப் புகைப்படம் இன்னொரு விஷயத்தையும்கூடச் சொல்கிறது... `Champions never quit!'