கிடாம்பி ஸ்ரீகாந்த் - பேட்மின்டன் உலகின் புது சென்சேஷன். டென்மார்க் ஓப்பன், பிரெஞ்சு ஓப்பன் சூப்பர் சீரிஸ் தொடர்களை அடுத்தடுத்து வென்று, சிந்துவையும் சாய்னாவையும் மட்டும் அறிந்தவர்களுக்கு தன் வருகையை உரக்கச் சொல்லியிருக்கிறார் இந்த ஆந்திரா வீரர். 2017-ம் ஆண்டில் மட்டும் இவர் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டங்களை அசால்டாக வென்றுள்ளார். இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த புல்லேலா கோபிசந்தின் பேட்மின்டன் பட்டறையில் தீட்டப்பட்டிருக்கும் புதிய வைரம்தான் இந்த ஸ்ரீகாந்த். விவசாயியின் மகன், இன்று இந்திய விளையாட்டின் ஸ்டார்!
பேட்மின்டனில் சூப்பர் சீரிஸ், கிராண்ட் பிரிக்ஸ் எனப் பல வகையான தொடர்கள் உண்டு. அவற்றுள் சூப்பர் சீரிஸ் பட்டம் வெல்வது என்பது மிகப்பெரிய கௌரவம். இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ், ஆஸ்திரேலிய ஓப்பன் சூப்பர் சீரிஸ், டென்மார்க் ஓப்பன் சூப்பர் சீரிஸ் தொடர்களை வென்று அசத்திய ஸ்ரீகாந்தின் மகுடத்துக்கு நான்காவது முத்தாக அமைந்துள்ளது இந்த பிரெஞ்சு ஓப்பன் தொடர். பேட்மின்டன் வரலாற்றிலேயே ஆண்கள் பிரிவில், ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் தொடர்களை வென்ற நான்காவது வீரர் இவர்தான். அதுமட்டுமின்றி, ஒரே ஆண்டில் நான்கு சூப்பர் சீரிஸ் பட்டம் வென்ற முதல் இந்தியரும் இவர்தான். ஓர் ஆண்டில் மூன்று பதக்கங்கள் வென்று இந்த லிஸ்ட்டில் முதல் இடத்தில் இருந்த சாய்னாவை அவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார். மொத்தத்தில் இது ஸ்ரீகாந்த் வென்றிருக்கும் ஆறாவது BWF சூப்பர் சீரிஸ் பட்டம். இதன்மூலம் உலக பேட்மின்டன் தரவரிசையில் இவர் இரண்டாவது இடத்துக்கு முன்னேறக்கூடும்!
வெற்றிகள் மற்றும் சாதனைகளுக்கு அப்பாற்பட்டது ஸ்ரீகாந்தின் முன்னேற்றம். 24 வயது ஸ்ரீகாந்தின் ஆட்டத்தில் அவ்வளவு முதிர்ச்சி. பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வெல்ல ஸ்ரீகாந்த் பெரிய அளவில் கஷ்டப்படவில்லை. கால் இறுதி போட்டியும் அரை இறுதிப் போட்டியும் மட்டும் கொஞ்சம் சவால் நிறைந்த போட்டிகளாக இருந்தன. கால் இறுதியில் நான்காம் நிலையில் இருக்கும் சீன வீரர் ஷி யூகியிடம் சற்று போராடவேண்டியிருந்தது. அடுத்த ஆட்டம் இந்தியர் பிரனோயோடு. அவரிடம்தான் சிங்கப்பூர் ஓப்பன் பட்டத்தை வென்றார். முதல் செட்டை இழந்தபோதும் சுதாரித்துக்கொண்டு பிரனோயை வீழ்த்தினார். ஃபைனலில் நிஷிமோடோவை 21 - 14, 21 - 13 என மிக எளிதாக வென்று சரித்திரம் படைத்தார் ஸ்ரீகாந்த். ஆனால், அவரது டென்மார்க் ஓப்பன் வெற்றி எளிதானது அல்ல. அது யாரும் எதிர்பாராதது.
இவரது ஆக்ரோஷ ஆட்டத்தின் முன்பு தாக்குப்பிடிக்க முடியாமல் ஃபைனலில் ஸ்ரீகாந்திடம் சரணடைந்தார் தென் கொரிய வீரர் லீ ஹியூன். ஆனால், கால் இறுதிப் போட்டியின்போதுதான் உலகை உறையவைத்தார் இவர். உலகின் நம்பர் 1 வீரரான விக்டர் ஏக்சல்சனை அந்தப் போட்டியில் எதிர்கொண்டார். இந்திய ஓப்பன், ஜப்பான் ஓப்பன், உலக சாம்பியன்ஷிப் என 2017-ம் ஆண்டு மாபெரும் சக்தியாக உருவெடுத்துக்கொண்டிருந்தார் அவர். முதல் செட்டை இழந்திருந்தபோதும் மீண்டு வந்து ஏக்சல்சனை மிரட்டினார். கடைசி செட்டில் ஏக்சல்சன் ஏழு புள்ளிகள் எடுப்பதற்குள் போட்டியை ஸ்ரீகாந்த் முடிந்துவிட மிரண்டுபோனார் ஏக்சல்சன். மிரண்டது அவர் மட்டுமல்ல, மொத்த பேட்மின்டன் உலகமும்தான்.
நம்பர் 1 வீரர் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுப்பது ஸ்ரீகாந்துக்கு ஒன்றும் புதிதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பேட்மின்டன் உலகின் ஜாம்பவானான லின் டானை வென்று அதிசயம் நிகழ்த்தியிருந்தார். அப்போதுதான் தேசத்தின் கண்கள் இவர்மீது மையம்கொண்டன. இரண்டு முறை ஒலிம்பிக் சாம்பியன், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரான லின் டானை, அவரது சொந்த மண்ணிலேயே நேர் செட்களில் வெற்றிகண்டார் ஸ்ரீகாந்த். அப்போது அவருக்கு 21 வயதுதான் நிரம்பியிருந்தது. `இந்தியாவின் எதிர்காலம்' என அப்போதே புகழப்பட்டார். அதன் பிறகு தொடர்ச்சியான காயங்கள். நீண்ட ஓய்வுகள். ஒருமுறை, கழிவறையிலேயே மயங்கி விழுந்தார். ஆனால், அவற்றையெல்லாம் தன் போராட்டக் குணத்தால் மீண்டு வந்து அசத்தியுள்ளார்.
பேட்மின்டனுக்குப் பெயர்போன கோபிசந்தின் அகாடமிதான் ஸ்ரீகாந்த் பயின்ற குருகுலமும். பி.வி.சிந்து, பாருப்பள்ளி காஷ்யப் ஆகியோரோடுதான் தொடக்கக் காலத்தில் பயின்றார் ஸ்ரீகாந்த். காலை 6 மணி, சர்வதேச வீரர்கள் பயிற்சிக்கான நேரம். அதற்கு முன்பாகவே பயிற்சியில் ஈடுபட்டால்தான் நல்ல முன்னேற்றம் காண முடியும் என்பதால் 4:30 மணியிலிருந்தே தொடங்கியது ஸ்ரீகாந்தின் பேட்மின்டன் பயிற்சி. 4 மணிக்கு எழ வேண்டும். தொடக்கத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். பயிற்சியளிக்க கோபிசந்தே 4:30 மணிக்கு வரும்போது, வெற்றிக்காகப் போராடும் நான் 4 மணிக்கு எழுந்துதானே ஆக வேண்டும்? பிறகு, அதிகாலையில் எழுவது அவருக்குக் கஷ்டமாக இல்லை. காரணம், அவரது கண்கள் உறக்கத்தைவிட வெற்றியைக் காண்பதிலேயே நாட்டம்கொண்டிருந்தன.
ஆரம்பத்தில், இரட்டையர் பிரிவில்தான் விளையாடினார் ஸ்ரீகாந்த். 2011-ம் ஆண்டு யூத் காமன்வெல்த் போட்டியில், இரட்டையர் பிரிவில் வெண்கலமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும் வென்றார். ஆனால், ஜூனியர் பிரிவிலிருந்து சீனியர் பிரிவுக்கு மாறும்போது ஒற்றையர் பக்கம் இவரைத் திருப்பிவிட்டார் கோபிசந்த். எப்படி சாய்னா, சிந்து ஆகியோரின் வெற்றிக்கு அச்சாணியாக விளங்கினாரோ, அதுபோல் ஸ்ரீகாந்துக்கும் இவரே துணை. ``கோபி சார் மட்டும் சரியான சமயத்தில் என்னை சிங்கிள்ஸுக்கு மாற்றாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும் என்றே தெரியவில்லை. என் மீது அவருக்கு அளவு கடந்த நம்பிக்கை இருந்தது" என்று கூறும் ஸ்ரீகாந்த், ஒவ்வொரு தொடரிலும் தன் ஆசானின் நம்பிக்கையை மெய்ப்பித்துவருகிறார். அவரது ஆக்ரோஷ ஆட்டத்தைப் பார்த்து, ஹாலந்து ஜாம்பவான் பீட்டர் கேட் போல் இவர் ஆடுவதாகச் சொல்கிறார்கள் நிபுணர்கள். வென்ற பட்டங்களைவிட, இது ஸ்ரீகாந்துக்கு மிகப்பெரிய கௌரவம். ஸ்ரீகாந்த் சொல்வதுபோல் கோபிசந்த் உதவாமல் இருந்திருந்தால், அவரது வாழ்க்கை வேறு மாதிரிதான் இருந்திருக்கும். ஒருவேளை இந்நேரம் குண்டூர் மாவட்டத்தில் அவர் விவசாயம் செய்துகொண்டிருக்கக்கூடும்.
குண்டூரில் வசித்த விவசாயி கிருஷ்ணனுக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் ஸ்ரீகாந்த். தந்தை, தன் இளமைக்காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர். அந்த விளையாட்டால் அவரது வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை. மகன்களை நல்ல நிலைக்குக் கொண்டுவர, கல்வியில் நாட்டம் கொண்டிருக்கச் செய்திருக்கலாம். ஆனால் அவர் செய்யவில்லை. விளையாட்டு, ஒருவரின் கேரக்டரை நன்கு மேம்படுத்தும் என உணர்ந்திருந்தார். அதனால் தன் மகனின் விருப்பத்துக்கு அவர் தடை போடவில்லை. “அது மிகவும் கடினமான முடிவு. ஆனால், கடந்த 16 ஆண்டுகளில் நான் எடுத்த சிறந்த முடிவு அது” என்று தன் மகனின் வெற்றிகளால் மகிழ்கிறார் ஸ்ரீகாந்தின் தந்தை.
தனக்கு 7 வயது இருக்கும்போது, வீட்டு அருகே புதிதாகக் கட்டப்பட்ட நகராட்சி மைதானம்தான் ஸ்ரீகாந்துக்கு பேட்மின்டன் மீது காதல் மலர காரணம். அந்தக் காதல் தீவிரமடையவே அதுவே வாழ்க்கை எனப் பயிற்சி செய்தார். ஓரிரு ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் அகாடமிக்குத் தேர்வானார். அங்கிருந்து கம்மம் என, தன் அண்ணனோடு தொடர்ந்தது ஸ்ரீகாந்தின் பேட்மின்டன் பயணம். ஆம், அவரின் அண்ணனும் பேட்மின்டன் வீரர்தான். நந்தகோபால் - ஸ்ரீகாந்தின் வளர்ச்சிக்கு அவரும் ஒரு காரணம். ஸ்ரீகாந்த், இரட்டையரிலிருந்து ஒற்றையருக்கு மாறிய சமயம், ஒற்றையர் பிரிவிலிருந்து டபுள்ஸுக்கு மாறினார் நந்தகோபால். சிங்கிள்ஸ் பிரிவின் நுணுக்கங்களை, அதிலுள்ள சிரமங்களை ஸ்ரீகாந்துக்குக் கற்பிக்க, தடுமாற்றம் இல்லாமல் சிங்கிள்ஸ் பயணத்தைத் தொடங்கினார் ஸ்ரீகாந்த். இன்று சாம்பியனாக மாறி நிற்கிறார்.
“விசாகப்பட்டினம், கம்மம், ஹைதராபாத் என சிறுவயது முதலே வெளியே தங்கிவிட்டேன். வீட்டையும் வீட்டு உணவையும் அடிக்கடி மிஸ்செய்வேன்" என்னும் ஸ்ரீகாந்த், ``சில விஷயங்களை விட்டுக்கொடுத்தால்தான் சிலவற்றை அடைய முடியும். வெற்றிக்கான விலையாக அந்தத் தியாகங்களைச் செய்வதில் மகிழ்ச்சிதான்" என்கிறார் மனநிறைவாக.
உண்மைதான் ஒரு வெற்றி, அதுவும் தேசத்துக்காக நீ தேடித் தரும் வெற்றிக்காக எதையும் இழக்கலாம். அது நமக்கு அந்த இழப்பைவிடப் பெரிதான ஒன்றைக் கொடுக்கும். ஸ்ரீகாந்துக்கு அந்த வெற்றி கொடுத்தது - இன்று அவர் நனைந்துகொண்டிருக்கும் புகழ் மழை!