தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த தம்பதி ரவிக்குமார் - சுபிக்க்ஷா. இவர்களின் 6 வயது மகள் டைசா தேனியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வருகிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சிறு வயதில் இருந்தே டைசா நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் 5 மணி நேரம் இடைவிடாது நீரில் மிதக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட பயிற்சி எடுத்து வந்தார்.

யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் என்ற அமைப்பின் நடுவர் கின்னஸ் சுனில் ஜோசப் கண்காணிப்பில், தேனி விளையாட்டு மைதானத்தில் உள்ள நீச்சல் குளத்தில் சாதனை முயற்சி நடைபெற்றது.
தொடர்ந்து 5 மணி நேரம் நீரில் மிதந்து உலக சாதனை படைப்பதற்குத் திட்டமிட்ட நிலையில், மழை காரணமாக முன்கூட்டியே நிறுத்தப்பட்டது. இருந்த போதிலும் 4 மணி நேரம் 18 நிமிடங்கள் இடைவிடாது நீரில் மிதந்து சிறுமி டைசா உலக சாதனை படைத்தார்.
இதற்கு முன்பு மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் 30 நிமிடங்கள் நீரில் மிதந்தது உலக சாதனையாக இருந்தது. தற்போது அவரது சாதனையை சிறுமி டைசா முறியடித்துள்ளார். உலக சாதனை படைத்தற்காக யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்ட் ஃபோரம் அமைப்பினர் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி சிறுமியை கௌரவித்தனர். இதையறிந்த தேனி மக்கள் சமூக வலைதளங்களில் சிறுமிக்குப் பாராட்டு மழையைப் பொழிந்து வருகின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், ’’எங்கள் மகள் 6 மாத குழந்தையாக இருந்த போதே எங்களுடன் ஆற்றில் குளிக்கும் போது நீந்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது ஆர்வத்தை அறிந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் முறையாக நீச்சல் பயிற்சியில் ஈடுபட வைத்தோம். நன்றாக நீந்தக் கற்றுக்கொண்ட டைசா, சாதாரணமாக 3 முதல் 4 மணி நேரம் வரை நீந்தி வந்தார். இன்று 5 மணி நேர உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார். விரைவில் இதேபோன்று கடலில் இடைவிடாது நீரில் மிதந்து உலக சாதனை படைக்க வேண்டும் என்பதே அவருடைய அடுத்த இலக்கு’’ என்றனர்.