
ஒரு துளி தண்ணீருக்காகவும், மரத்துக்காகவும் மனிதரும் விலங்குகளும் இடம்பெயர்ந்து செல்லும் காலம் வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை.
சமீபகாலமாக ஆன்லைனில் விளையாடப்படும் பலவிதமான மோசடி விளையாட்டுகளால் பல குடும்பங்கள் நிம்மதியையும் பணத்தையும் இழந்துவருகின்றன. இளைய தலைமுறையினரும் மொபைல் கேமுக்கு அடிமையாகி வாழ்க்கையைத் தொலைக்கின்றனர். இந்நிலையில், சமூகநீதியை வலியுறுத்தும்வகையில் ஒரு கேம் விளையாடக் கிடைத்தால் எப்படியிருக்கும்? மதுரையைச் சேர்ந்த 29 வயது அப்துல் ரஹ்மான் அப்படி ஒன்றைக் கண்டுபிடித்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். அதன் பெயர் அஸ்யூடு (Asude). வெற்றி, தோல்வி என்ற அளவீடு இல்லாமல் அன்பு, சமத்துவம், விட்டுக்கொடுத்தல் போன்ற வாழ்க்கைப் பண்புகளைக் கற்றுக்கொடுக்கும் விளையாட்டுதான் அஸ்யூடு. இது கேம் மட்டுமல்ல, உளவியல் சிகிச்சை என்றும் சொல்கிறார். இந்த விளையாட்டின் விதிகளும் நோக்கமும் வியப்பை ஏற்படுத்துகின்றன.
மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில் வசிக்கும் அப்துல் ரஹ்மானைச் சந்தித்தேன். “அஸ்யூடு என்ற ஜப்பானிய வார்த்தைக்கு ‘உலக தினம்’ என்று அர்த்தம். உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் அமைதியாக வாழும் நாளைக் குறிப்பது. இந்த விளையாட்டை எப்படிக் கண்டுபிடித்தேன் என்று சொல்வதற்கு முன் என்னைப்பற்றிச் சொன்னால்தான் அதன் காரணம் சரியாகப் புரியும். தந்தையால் கைவிடப்பட்ட நிலையில் என்னையும் தங்கையையும் அம்மாதான் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து ஆளாக்கினார். வறுமையும், உறவுகளால் கைவிடப்பட்ட கொடுமையும் மனதை அழுத்திக்கொண்டிருந்தது. எல்லோரும் பாராட்டும் வகையில் உருவாகவேண்டும், மற்றவருக்கு முன்மாதிரியாக வாழவேண்டும் என்ற வைராக்கியம் ஏற்பட்டது.

தியாகராஜர் கல்லூரியில் பி.பி.ஏ முடித்து, ஹெச்.ஆர் படிப்பையும் முடித்தேன். ஒரு தொண்டு நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். எனக்கு கராத்தே தெரியும் என்பதால் தனியார் பள்ளியில் அதைக் கற்றுக்கொடுக்க வாய்ப்பளித்தார்கள். ஆனால், யாரும் ஆர்வம் காட்டவில்லை. அதையே, ஆல்டோ என்ற புது விளையாட்டாக மாற்றிக் கற்றுக்கொடுத்தபோது மாணவர்கள் அதிகமாகச் சேர்ந்தனர். எதையும் புதுமையாகவும், விளையாட்டாகவும் கற்றுக்கொடுத்தால் வரவேற்பு உள்ளது என்பது புரிந்தது.
அந்த நேரத்தில்தான் புளூவேல் உள்ளிட்ட மோசமான கேம்களால் மாணவர்கள் அடிக்ட் ஆகி, தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எல்லோரும் குழந்தைகளை கேம் விளையாடக்கூடாது என்று சொன்னார்களே தவிர எதை விளையாடலாம் என்று சொல்லவில்லை. அப்படி யோசித்து அவர்களுக்காக நான் உருவாக்கியதுதான் அஸ்யூடு கேம்.
ஒரு துளி தண்ணீருக்காகவும், மரத்துக்காகவும் மனிதரும் விலங்குகளும் இடம்பெயர்ந்து செல்லும் காலம் வந்தால் என்னவாகும் என்பதுதான் இந்த விளையாட்டின் அடிப்படை. உலக மேப் பிரின்ட் செய்யப்பட்டுள்ள போர்டில் பத்து-பத்துக் காய்களை வைத்து விளையாடவேண்டும். செஸ் போல் தெரிந்தாலும் இந்த விளையாட்டின் விதிகள் வேறு. யாரையும் அடித்து முன்னேற முடியாது. எதிரே விளையாடுபவர் வழிவிடுவார். அதுபோல் நாமும் அவருக்கு வழி விடவேண்டும். இப்படி விட்டுக்கொடுத்து விளையாடும்போது நம் மனநிலை மகிழ்ச்சியாக மாறுவதுடன் சகிப்புத்தன்மையும் உருவாகும்.
ஆரம்பத்தில் இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்கப் பள்ளிகளை அணுகியபோது அவர்களுக்குப் புரியவே இல்லை. விளையாடிக் காண்பித்த பின் அனுமதித்தார்கள். இன்று இதைப் பல பள்ளி மாணவர்கள் விளையாடி வருகிறார்கள். ஆரம்பத்தில் ஒரேயொரு லெவலில் மட்டும்தான் விளையாட முடிந்தது. அதை நூறு லெவலாக மாற்றி, இப்போது ஒரே நேரத்தில் ஒரே போர்டில் நாற்பது பேர், ஆயிரம் லெவல் வரை விளையாடும் வகையில் உருவாக்கியுள்ளேன்.
இதை விளையாடிய மாணவர்களிடம் நல்ல மாற்றங்களைப் பார்த்துவருகிறேன். பலர் மரம் நடவும் பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கவும் ஆரம்பித்துள்ளனர். அதுமட்டுமன்றி பாடம் படிப்பதில் ஷார்ப்பாகவும், பொறுப்பாகவும் இருப்பதாக ஆசிரியர்கள் கூறினார்கள்.
டி.வி.எஸ் நிறுவனம், கிராமப்புறக் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக்கொடுக்கச் சொன்னார்கள். போலீஸ் அதிகாரிகளிடம் இதைப் பற்றி எடுத்துச்சொன்னேன். டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதை விளையாடிப் பார்த்து, போலீஸ் பயிற்சிப் பள்ளியில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்வதாக உத்தரவாதம் அளித்தார்.

இந்த கேமை சிலர் விலைக்குக் கேட்டார்கள், சிலர் இதை ஆன்லைனில் கொண்டு வர ஆலோசனை சொன்னார்கள். கமர்ஷியலாகக் கொண்டு போக எனக்கு விருப்பமில்லை. சமூக நோக்கோடு அரசுத்துறைகள் மூலம் மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். ஆகவே, அரசுப்பள்ளிகள், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்கிறேன். சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் மத்தியில் நல்ல மனமாற்றத்தை இது ஏற்படுத்துகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து சிறைக் கைதிகளுக்கும் இந்த விளையாட்டைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்வதாகக் கூறியுள்ளார்கள். மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் விளையாடிப் பார்த்து ஆச்சரியப்பட்டதுடன், மாவட்டத்திலுள்ள அரசுப்பள்ளிகளில் கற்றுக்கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
விவாகரத்துக்கு விண்ணப்பித்த 50 ஜோடிகளுக்கு நீதிபதி அனுமதியுடன் கற்றுக்கொடுத்தேன். அதில் 4 பேர் மனமாற்றம் அடைந்துள்ளனர். மதுரையிலுள்ள இரண்டு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்குக் கற்றுக்கொடுக்க வைத்தனர். இந்த கேம் மூலம் நிவாரணம் அடைந்த மதுரையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், இதை எல்லோருக்கும் கற்றுக்கொடுக்க மூன்று தளம் கொண்ட தன் கட்டடத்தையே கொடுத்துள்ளார். இந்த அஸ்யூடு கேம், விளையாட்டு என்ற நிலையைக் கடந்து தெரபி என்ற நிலைக்கு வந்துவிட்டது.
இதை யாரும் காப்பி அடித்துவிடக்கூடாது என்பதால் காப்புரிமை வாங்கியுள்ளேன். தமிழக அரசு தமிழகப் பள்ளிகளில் மாணவர்களுக்கு இதைக் கற்றுக்கொடுத்தால் சமத்துவமான சமூகத்தையும், சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒழுக்கமான மாணவர்களையும் உருவாக்கலாம்’’ என்றார்.
எதிர்பாராத திருப்பங்களுடன் வாழ்க்கையே ஒரு விளையாட்டாக இருக்கும்போது, வாழ்வை மாற்றியமைக்கும் இந்த விளையாட்டை எல்லோரும் விளையாடிப் பார்க்கலாம்தான்.