Published:Updated:

மீண்டு வந்துவிட்டார் அஷ்வின்... ஆனால், ஓரங்கட்டப்பட்டது ஏன்?! #AshwinRavi

ASHWIN
ASHWIN

எய்டன் மார்க்ரமுக்கு மாயாஜாலப் பந்து வீசியும், டிகாக்கை ட்ராப் செய்து போல்ட் ஆக்கியும், டுப்ளெஸ்ஸிக்கு டீசிங் டெலிவரி வீசி அவுட் ஆக வைத்தும் தனது பழைய டிரேட்மார்க் அஷ்வினாக டெஸ்ட் களத்துக்குத் திரும்பியிருக்கிறார்.

66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 350 விக்கெட்டுகள் எடுத்து முரளிதரன் செய்த உலக சாதனையைச் சமன் செய்திருக்கிறார் அஷ்வின். 10 மாதங்களுக்கு மேல் இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டிகளில் விளையாடாமல் இருந்தவர், தன்னுடைய முதல் கம்பேக் போட்டியிலேயே மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதில், முதல் இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்டுகள்.

ashwin
ashwin

எய்டன் மார்க்ரமுக்கு மாயாஜாலப் பந்து வீசியும், டிகாக்கை ட்ராப் செய்து போல்ட் ஆக்கியும், டுப்ளெஸ்ஸிக்கு டீசிங் டெலிவரி வீசி அவுட்டாக வைத்தும், தனது பழைய டிரேட்மார்க் அஷ்வினாக டெஸ்ட் களத்துக்குத் திரும்பியிருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக பெரிய வெற்றிகள் இன்றித் தவித்த அஷ்வினுக்கு, இந்த கம்பேக் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

அஷ்வினின் பலம் என்ன?

இந்திய கிரிக்கெட் எப்போதுமே ஸ்பின்னர்களின் ஆதிக்கத்தால் நிறைந்தது. அந்த வழித்தோன்றலில் வந்தவர்தான், அஷ்வின். 2011-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக இடம் பிடித்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்த 7-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். அந்த சீரிஸில் 2 முறை 5 விக்கெட் ஹால்கள், ஒரு சதம் என ஆல்ரவுண்டராக மிரட்டி தொடர் நாயகன் விருதையும் பெற்றார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் 7 ஹோம் சீரிஸில் 5 சீரிஸ்களில் தொடர் நாயகன் விருது வாங்கி இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னருக்கான நிரந்தர இடம் பிடித்தார் அஷ்வின். இவரால், ஹர்பஜன் சிங் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார். தொடர்ந்து பல சாதனைகள் படைக்க ஆரம்பித்தார் அஷ்வின். டெஸ்ட், டி20, ஒருநாள் என எல்லா ஃபார்மேட்டிலுமே இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னராக அணியில் இருந்தார்.

ASHWIN
ASHWIN

45-வது டெஸ்ட்டில் 250 விக்கெட்டுகள், 54-வது டெஸ்ட்டில் 300 விக்கெட்களை எடுத்த அதிவேக பெளலர் என்ற உலக சாதனையையும் படைத்தார். 2016-க்கான ஐசிசி கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர், டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர் என்ற 2 விருதுகளைப் பெற்று அசத்தினார். இதற்கு முன் இந்தச் சாதனையை செய்தவர் டிராவிட் மட்டுமே. 2016/17 சீசனில் மட்டும் 82 விக்கெட்டுகள் எடுத்து மற்றுமொரு உலக சாதனையையும் படைத்தார் அஷ்வின். ஆனால், இவ்வளவு சாதனைகள் செய்தும் அஷ்வினின் கிராஃப் சரிய ஆரம்பித்தது.

எப்படி சரிந்தார் அஷ்வின்!

நன்றாகச் சென்றுகொண்டிருந்த அஷ்வினின் கிரிக்கெட் கேரியர் 2017 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் தோல்விக்குப்பின் மாறத் தொடங்கியது. 2017 வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடியதுதான் அவர் கடைசியாக விளையாடிய white ball கிரிக்கெட் தொடர். அதற்குப் பிறகு, 50, 20 ஓவர் போட்டிகளில் இருந்து முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டார் அஷ்வின்.

கேப்டன் விராட் கோலி ஆஃப் ஸ்பின்னரை விட wrist ஸ்பின்னர்ஸ் 50, 20 ஓவர் போட்டிகளுக்குக் கை கொடுப்பார்கள் என நினைத்ததுதான் அஷ்வினின் இடம் காலியாகக் காரணம். ரிஸ்ட் ஸ்பின்னர்களும் கோலி நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. சஹால், குல்தீப் என இருவரும் அடுத்தடுத்து வெற்றிகள் தேடித்தந்து, தங்களின் தேர்வை நியாயப்படுத்தினர். இதனால் ஒருநாள், டி20 போட்டிகளில் இந்திய அணியில் அஷ்வினுக்கு இடம் என்பது இனி இல்லை என்கிற அளவுக்கு நிலைமை போனது. அது, இன்று வரை நீடிக்கிறது.

ஒரு ஃபார்மேட்டில் மட்டுமே விளையாடும் வீரராக ஆக்கப்பட்ட அதிர்ச்சியிலிருந்து அஷ்வினால் மீளமுடியவில்லை. 2018-ல் இந்திய அணி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆட பயணப்பட்டது. தென்னாஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என அனைத்தும் பெரிய தொடர்கள். தென்னாப்பிரிக்கா தொடரைத் தவிர மற்ற 2 தொடர்களிலும் காயங்களால் அவதிப்பட்டார் அஷ்வின்.

காயத்துடன் விளையாடிய அஷ்வினால் இங்கிலாந்துக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகளில் 11 விக்கெட்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசிப் போட்டியில் காயம் அதிகமாக, அஷ்வினுக்கு பதில் ஜடேஜா களம் இறக்கப்பட்டார் .

ஆஸ்திரேலியாவுடன் முதல் போட்டியில் நன்றாக விளையாடிய அஷ்வின், 6 விக்கெட்டுகள் எடுத்து நம்பிக்கையளித்தார் . ஆனால், அடுத்த டெஸ்ட் போட்டிக்கு முன் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அந்தத் தொடரிலிருந்து முற்றிலுமாக விலகினார்.

அந்தத் தொடரின் கடைசிப் போட்டியில், குல்தீப் 5 விக்கெட்டுகள் எடுக்க, இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மேலும் ஒரு பேரதிர்ச்சியை அஷ்வினுக்குக் கொடுத்தார். வெளிநாடுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர், இனி குல்தீப்தான் என்று ஓப்பனாக பிரஸ்மீட்டிலேயே சொன்னார் சாஸ்திரி.

வேதனையின் உச்சத்துக்கே போனார் அஷ்வின். 342 விக்கெட்டுகள் எடுத்த முன்னணி ஸ்பின்னர் ஆக்டிவாக இருக்கும்போதே, அணியின் பயிற்சியாளரிடமிருந்து இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் வரும் என அஷ்வின் மட்டுமல்ல, ரசிகர்கள்கூட எதிர்பார்க்கவில்லை.

அஷ்வினுக்குக் கொடுக்கப்பட்ட அதிர்ச்சிகளில் எல்லாம் உச்சமாக, கடைசியாக ஆகஸ்ட் மாதம் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டார் அஷ்வின்.

எங்கே சறுக்கினார் அஷ்வின்?

அஷ்வின், அருமையான ஆஃப் ஸ்பின்னர். அவர் கைவசம் carrom ball, stock ball, arm ball, doosra என்று ஆப் ஸ்பின்னருக்கே உண்டான எல்லா வெரைட்டிகளையும் வைத்திருந்தார். ஆனால், சில மேட்ச்சுகளில் விக்கெட்டுகள் சரியாக விழவில்லையென்றதும், பல பரிசோதனை முயற்சிகளில் இறங்க ஆரம்பித்தார் அஷ்வின். லெக் ஸ்பின்னுக்கு உரித்தான வெரைட்டிகளான leg spin, top spin, googly, flipper என முயற்சி செய்து, தன்னுடைய ஒரிஜினாலிட்டியை இழக்க ஆரம்பித்தார். இந்த மாற்று முயற்சிகளால் விக்கெட்டுகள் விழுந்ததா என்றால் அதுவும் இல்லை.

ASHWIN
ASHWIN

உள்ளூர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் அஷ்வின், வெளிநாட்டுப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. அஷ்வின் எடுத்த 350 விக்கெட்டுகளில் 242 விக்கெட்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டவை.

முரளிதரன், தான் எடுத்த 800 விக்கெட்டுகளில் 191 முறை மட்டுமே இடதுகை பேட்ஸ்மென்களை அவுட்டாக்கி இருக்கிறார். ஆனால் அஷ்வினோ, தான் எடுத்த 350 விக்கெட்டுகளில் 183 முறை இடதுகை பேட்ஸ்மென்களை அவுட்டாக்கியிருக்கிறார். இதனால் இடதுகை பேட்ஸ்மென்களுக்குத்தான் நான் நன்றாகப் பந்து வீசுவேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டார் அஷ்வின்.

அதனால், வலதுகை பேட்ஸ்மென்கள் அதிகம் உள்ள டீம்களுக்கு எதிரான வெளிநாட்டுப் போட்டிகளில் ஒதுக்கப்பட்டார் அஷ்வின். இவருக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டார். இடதுகை பேட்ஸ்மென்களுக்கு மட்டுமே செட் ஆவார் எனக் காரணம் சொல்லப்பட்டது. முடிவெடுத்த பின் காரணம் தேடும் உலகம் தானே இது.

சரியான காம்பினேஷன் வேண்டும்!

2000-களில் கும்ப்ளே - ஹர்பஜன் காம்போ, உள்ளூர் போட்டிகளில் ஆடுவார்கள். ஆனால் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, யாராவது ஒரு ஸ்பின்னருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கும். 2003/04 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில், ஹர்பஜனுக்கு முதல் டெஸ்ட் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. கும்ப்ளே வெளியே உக்கார வைக்கப்பட்டார். அந்தப் போட்டியில், ஹர்பஜனுக்கு கையில் அடிபட, மீதம் உள்ள 3 போட்டிகளில் கும்ப்ளே பங்கேற்று 24 விக்கெட்டுகள் எடுத்து, யார் first preference ஸ்பின்னர் என்பதை நிரூபித்தார்.

ashwin, kohli
ashwin, kohli

கும்ப்ளேவுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அஷ்வின் -ஜடேஜா விஷயத்தில் இது மாதிரி ஏதாவது சம்பவங்கள் நடந்து அதில் அஷ்வின் வலதுகை பேட்ஸ்மேன்களை அதிகம் வீழ்த்தி, தனது திறமையை மீண்டும் நிரூபித்தால் மட்டுமே இந்த ஆடு புலி ஆட்டம் நிற்கும்.

இந்திய அணி இப்போது என்ன செய்கிறது தெரியுமா? ஷேன் வார்னே ஆஸ்திரேலிய அணியில் இருக்கும்போதே அவரை எடுக்காமல், ஸ்டூவர்ட் மெக்கில் என்னும் ஸ்பின்னரை அணிக்குத் தேர்வு செய்தால் எப்படியிருக்கும்? அதுதான் இங்கே நடக்கிறது.

இதை உணர்ந்துதான் கும்ப்ளே, ''அஷ்வின் இந்தியாவின் நம்பர் 1 ஸ்பின்னர். அவரை வெளிநாடுகளில் வெளியே உக்கார வைப்பது மிகவும் தவறு'' என்று சொல்லியிருக்கிறார் .

ashwin
ashwin

அஷ்வினும் தனது பழைய தவறுகளைத் திருத்திக்கொள்ள இங்கிலாந்து கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடச் சென்று, தன்னை செம்மைப்படுத்தி, தென்னாப்ரிக்க டெஸ்ட்டில் நிரூபித்திருக்கிறார். தனக்குள்ளேயே ஒரு போரை நடத்தி, அதில் வெற்றிபெற்றுவிட்டார் அஷ்வின்.

முரளிதரனிடம் உங்கள் 800 விக்கெட் சாதனையை யார் முறியடிப்பார்கள் என்று கேட்டபோது, அஷ்வினுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொன்னார். அந்தக் கூற்று உண்மையாக வேண்டுமானால், நாம் தொடர்ந்து அஷ்வினுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும். திறமையைக் காட்ட அஷ்வின் தயாராக இருக்கிறார்!

`அது எப்போதும் எனது ஸ்பெஷல் விக்கெட்தான்!' - `உலகச் சாதனை' அஷ்வின்
அடுத்த கட்டுரைக்கு