கனவுகளை நோக்கி விரைந்தோட எத்தனிக்கும் பலருக்கும் பொருளாதாரப் பின்னணி பெரும்சுமையாக நிற்கும். அதை தகர்த்து முன்னேறுவது சவாலான ஒன்று. ஏழை வீட்டில் பிறப்பது, அதிலும் ஏழை வீட்டு பெண்ணாகப் பிறந்து விளையாட்டை உங்கள் கனவாகக் கொண்டால் அதை சாத்தியப்படுவது அரிதினும் அரிது. உறுதியான உடலும், சிதையாத மனமும் தேவை. விளையாட்டுக்கு மட்டுமின்றி உடலுக்கும், மனதுக்கும் சேர்த்து பயிற்சி கொடுத்து, வீரர்களுக்கு உணவும் கொடுத்து அவர்களது பயணத்துக்கு உறுதுணைாகவும் நிற்கிறார் ஒரு கோச். அவரைச் சந்திப்பதற்காக கோவை சென்றோம்.
கோவை துணி வணிக சங்க அரசினர் மகளிர் பள்ளி மைதானத்தினுள் நுழையும்போதே பந்து சத்தம்தான் வரவேற்கிறேது.

அதே மைதானத்தில் மாணவிகள் கூட்டமாக நின்று கூர்ந்து உன்னிப்பாக கேட்டுகொண்டிருந்தனர். அந்த கூட்டத்தை நெருங்கிப் பார்த்தபோது அவர்களது பயிற்சியாளர் செபாஸ்டின் பிரபு கூடைப்பந்தாட்டத்தின் நுட்பங்களை விளக்கிக் கொண்டிருந்தார். செபாஸ்டின் பிரபு அரசு பள்ளி மாணவர்களில் ஆர்வமுடையவர்களை தேர்வு செய்து கூடைப்பந்து பயிற்சியை இலவசமாக வழங்கிவருகிறார். மேலும் அவர்கள் விளையாட்டுக்குத் தேவையானவற்றையும் தன் சொந்த செலவில் பூர்த்தி செய்து வருகிறார்.
நம்மை பார்த்ததும் சிறு புன்னகையுடன் வரவேற்று பேசத் தொடங்கினார்.
," நான் தொழில்முறையா பயிற்சியாளர் கிடையாதுங்க. சின்ன வயசுல YMCA க்ளப்ல பேஸ்கட் பாலை இலவசமா கத்துக்கிட்டேன். அப்போதான் தோணுச்சு நாமளும் பின்னாடி இதே மாதிரி ஆர்வமிருக்குற ஏழை எளிய பசங்களுக்கு பேஸ்கட் பால் விளையாட்டை கத்துக்கொடுக்கணும்னு தோணுச்சு. முதல்ல மிக்கேல் பள்ளயில படிக்குற பசங்களுக்கு பயிற்சி கொடுத்தேன். அங்க மாணவர்கள் பலர் நல்ல படியா கேமை கத்துக்கிட்டு சில போட்டிகள்ல கலந்துகிட்டு ஜெயிச்சாங்க. அவங்கள்ல சிலர் இந்திய அணி பேஸ்கட் டீமுக்கும் விளையாடி இருக்காங்க. அவங்க சிலர் இப்ப நல்ல வேலைலையும் இருக்காங்க." என பெருமி்தத்துடன் சொல்கிறார் பிரபு.

பிறகு வெள்ளலூரில் ஒரு பள்ளியில் பயிற்சி கொடுத்து கொண்டிருந்தபோது இந்தப் பள்ளியை பற்றிக் கேள்விப்பட்டு இங்கு பயிற்சியளிக்க வந்திருக்கிறார். இங்கு படிக்கும் மாணவியரின் குடும்பப் பிண்ணனியையும் அறிந்த இவர், வெள்ளலூர் பள்ளியில் வாங்கும் சம்பளத்தை இந்த பள்ளி மாணவியருக்கு செலவளித்திருக்கிறார். அதை தொடர்ந்து மாணவியரின் ஆர்வத்தையும் ஆட்டத்தையும் பார்த்த இவர் வெள்ளலூர் பள்ளியில் வேலையை விட்டுவிட்டு இந்த பள்ளிக்கே முழுமையாக தன் சொந்த செலவில் பயிற்சி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்.
இவரிடம் பேசிக்கொண்டே P.E.T அறைக்குள் சென்றபோது அரிசி, பருப்பு உள்ளிட்டவை இருந்தன. இன்னொரு பகுதியில் அடுக்கப்பட்ட புதிய ஷூக்கள் மற்றும் கூடைப்பந்து விளையாட்டுக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டிருந்ன. அதைப்பற்றி அங்கிருந்த ஆசிரியர்களிடம் விசாரித்தபோது, அனைத்து மாணவியரும் ஏழ்மையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள். அவர்களுக்கு தேவைப்படும் போது யாரிடமும் கேட்காமல் அவர்களே என்ன வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம் என்றனர். மாணவர்களுக்காக இத்தனை செய்யும் பயிற்சியாளர் செபாஸ்டின் பிரபு பெரிய பொருளாதாரப் பின்னணி கொண்டவர் கிடையாது. லட்சியத்துக்காக மாணவர்களுக்கு கூடைப்பந்து பயிற்சியாராக உள்ள இவர் பிளாஸ்டிக் போர்ட் செய்யும் கடை வைத்திருக்கிறார். கொரோனா காலத்தில் மாணவியரின் குடும்ப சூழ்நிலையை அறிந்து கொண்டு தன் மகன்களுக்கு கட்ட வைத்திருந்த பள்ளிக் கட்டணத்தை எடுத்து செலவழித்து மாணவியருக்கு மட்டுமில்லாமல் அவர்களது குடும்பத்தினருக்கும் உணவுப் பொருட்களை வழங்கியிருக்கிறார். ``பயிற்சி மட்டும் இல்ல அரிசி, பருப்பு, ஷு கூட கோச்தான் வாங்கித் தந்தார்" என்கிறார் ஒரு மாணவி.

போட்டிகளுக்கு போக காசு இல்லாத சமயங்களில் தனது நகையையும் தன் மனைவி நகைகளையும் அடகு வைத்திருக்கிறார். மாணவிகளை போட்டிகளுக்கு அழைத்து செல்ல ஏதுவாக தன் சிறு சேமிப்பிலிருந்து காரும் வாங்கியிருக்கிறார். முடிந்தவரை தன் சொந்தப் பணத்தையே செலவு செய்கிறார். தேவையில்லாமல் யாரிடமும் உதவி கேட்கமாட்டேன் என்கிறார்.
இவ்வளவு செய்யும் இவருக்கு ஒரே ஒரு ஆசை. அது 150 வருடப் பழைமையான அந்த மைதானத்தை மாற்றி அமைத்து மாணவியரின் பயிற்சியையும் திறமையையும் மேலும் மேம்படுத்த வேண்டும் என்பதுதான். எதற்காக இதையெல்லாம் செய்றிங்க என அவரிடம் கேட்டபோது, " ரொம்ப திறமைக்காரங்க எல்லோரும். அவங்களுக்கு சப்போர்ட் பண்ணணும்லங்க. அதான ஸ்போர்ட்ஸ் மேன்ஷிப் " எனக் கூறிவிட்டு தனது பயிற்சியைத் தொடர்ந்தார் பிரபு. அந்த மாநகரத்தின் பல ஏழை மாணவிகள் கண்களில் வெற்றிக்கான உத்வேகத்துடன் பந்தை தட்டிக் கொண்டு இலக்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர். கண்களில் பூரிப்புடன் தன் கைகளைத் தட்டி அவர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் பிரபு. இலக்குகள் அடையக்கூடியவைதானே!