
ராம்
கடவுளை இழந்த சோகத்தில் கண்ணீர் சிந்திக் கொண்டி ருக்கிறது கால்பந்து உலகம். அர்ஜென்டினா இருளில் மூழ்கிக்கிடக்கிறது. கொச்சி முதல் கொல்கத்தா வரை துக்கம் அனுசரித்துக் கொண்டிருக்கிறார்கள். 1986 உலகக் கோப்பை பற்றிய கதைகள் எங்கெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.உலகின் ஒவ்வொரு மூலையிலும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தி யிருக்கிறார் மரடோனா.

நம் ஊரைப் பொறுத்தவரை மரடோனாவின் கதைகள் 1986 உலகக் கோப்பையோடு முடிந்துவிட்டன. அவர் ஏன் அர்ஜென்டினாவின் கடவுள் என்பதோடு நாம் நிறுத்திக்கொண்டோம். ஆனால், அவர் கதை, அவர் ஏற்படுத்திய தாக்கம் தென் அமெரிக்காவில் முடிந்துவிடவில்லை. ஐரோப்பாவிலும் முத்திரை பதித்திருக்கிறார்.

கடவுள் என்பவர் யார்? தன் தேவைகளை நிறைவேற்றுபவர், தன் கஷ்டங்களைப் போக்குபவர், தனக்கு நம்பிக்கையாய் இருப்பவர், தன்னை சந்தோஷப்படுத்துபவர் - இதுவே கடவுளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இலக்கணம். சிலருக்குத் தந்தை, சிலருக்கு வாழ்க்கைத்துணை, சிலருக்கு முதலாளி, சிலருக்கு நண்பன். பெரும்பாலானவர்களுக்கு சிலை. நேபொலி நகர மக்களுக்கு மரடோனா.

நேபொலி - சபிக்கப்பட்டிருந்த இத்தாலி நகரங்களுள் ஒன்று. நாகரிகம் உள்ளவர்களாகக் கருதப்பட்ட டுரின், ரோம் மக்கள், இத்தாலியின் தெற்குப் பகுதியை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். முன்னேற்றத்துக்கான எந்த வாய்ப்புகளும் அவர்களுக்குக் கிடைக்க வில்லை. அரசும் புறக்கணித்தது. போதுமான சுகாதார வசதிகள் இல்லை. நல்ல கல்வி, தரமான போக்குவரத்து என அடிப்படை ஆதாரங்கள் இல்லாத நகரம். அப்படியொரு நகரில் உள்ள ஓர் அணிக்கு விளையாட எந்தவொரு வீரருமே யோசிப்பார். ஏனெனில், ஒரு கால்பந்து வீரர் தன் அணியைத் தேர்வு செய்வது அந்த நகரையும் பொறுத்தது. அவர்கள் அங்குதான் வாழ்ந்தாக வேண்டும். நேபொலி அதுவரை எந்த உலகத் தர வீரர்களையும் ஒப்பந்தம் செய்ததில்லை. ஆனால், அவர்களால் மரடோனாவை ஒப்பந்தம் செய்ய முடிந்தது.

1984 - மிகப்பெரிய கிளப்பு களுள் ஒன்றான பார்சி லோனாவுக்கு விளையாடி வந்த மரடோனா, நேபொலி கால்பந்து கிளப்புடன் ஒப்பந்தம் செய்தது உலகையே அதிர்ச்சியில் உறையவைத்தது. நேபொலி மக்கள், கடவுள் தங்கள் ஊரில் அவதரித்து விட்டதாகக் கருதினார்கள். கொண்டாடினார்கள்.
“இந்த நேபொலி சிறுவர்களுக்கு நான் ரோல் மாடலாக இருக்க விரும்பு கிறேன். நானும் இப்படியொரு சூழ்நிலையில்தான் பியூனஸ் ஏரெஸில் வளர்ந்தேன். இவர்களின் வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்துவேன்” என்றார். தன்னைச் சுற்றி ஒரு நல்ல அணியை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், அதன் மூலம் தன்னால் நேபொலியின் வரலாற்றை மாற்ற முடியும் என்று உறுதி கூறினார். மாற்றினார்.

தனி ஒரு மனிதனாக அணியைத் தாங்கினார். 60 ஆண்டுகள் புள்ளிப்பட்டியலில் முன்னேறப் போராடிய, கடைசி இடத்தைத் தவிர்க்கப் போராடிய அந்த அணி, மரடோனாவின் வருகையால் சாம்பியன் பட்டம் வென்றது. அவர் ஆடிய 7 ஆண்டுகளில் 2 சீரி ஏ பட்டம், ஒரு UEFA கோப்பை என வென்று பலம் பொருந்திய அணியாக உருவெடுத்தது. அந்தப் பட்டங்கள் மேலும் மேலும் முதலீடுகளை அணிக்கும் நகருக்கும் கொண்டுவந்தன. வடக்கே ஆதிக்கம் செலுத்திய ஆணவக்காரர்களுக்கு இணையாக நேபொலியின் சுகாதாரம், கல்வி, போக்குவரத்து முன்னேறியது.

ஒரு சிறுவனின் சிகிச்சைக் காகக் காட்சிப் போட்டி ஒன்றை நடத்த முடிவு செய் கிறார்கள். அதில் விளையாட மரடோனாவுக்கு அழைப்பு வருகிறது. நேபொலி கிளப்பின் தலைவர் மறுக்கிறார். வீரர்கள் காயம் அடைந்துவிடுவார்கள் என்று பயப்படுகிறார். மரடோனா கவலை கொள்ள வில்லை. தனக்குச் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் ஒப்பந்தத்தை சொந்தக் காசு 12 மில்லியன் யூரோ கொடுத்து முடித்துக்கொள்கிறார். சீரி ஏ போட்டியில் விளையாடிய கையோடு, ஓய்வே எடுக்காமல் மறுநாளே போட்டியில் பங்கேற்கிறார். அந்தச் சிறுவனுக்குத் தேவையான தொகை சேகரிக்கப்பட்டது. அவன் உயிரும் காப்பாற்றப் பட்டது.

“தன்னை நேசிக்கும் கடைசி மனிதன் உயிரோடு இருக்கும் வரை யாரும் இறப்பதில்லை” என்று கூறினார் கால்பந்துப் பயிற்சியாளர் மொரினியோ. இன்னும் ஓரிரு நூற்றாண்டுகள் கழித்து அர்ஜென்டினாவிலோ மற்ற தேசங்களிலோகூட மரடோனா மறக்கப்படலாம். ஆனால், காலா காலத்துக்கும் நேபொலியில் அவர் பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஏனெனில், அது அவர்களின் இதயத்துடிப்பு!