Published:Updated:

பானிபூரி வியாபாரம் டு ஐபிஎல்! யார் இந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்? #IPLAuction

Jaiswal
Jaiswal

``நான் சிறுவான இருந்தபோது, டயட் பற்றி யோசித்ததில்லை. அடுத்த வேளைக்கு சாப்பாடு கிடைக்குமா என்றுதான் அதிகம் யோசித்துள்ளேன்."

ஐபிஎல் ஏலம் நடந்துமுடிந்திருக்கிறது. இதில், பேட் கம்மின்ஸை 15.5 கோடிக்கு கொல்கத்தா அணி எடுத்தது. மேக்ஸ்வெல், மோரிஸ், காட்ரெல் என வெளிநாட்டு வீரர்களை எடுப்பதில் போட்டி அதிகமாக இருந்தது. இந்தப் போட்டாபோட்டிக்கு இடையே, இந்தியாவைச் சேர்ந்த 17 வயது வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை ராஜஸ்தான் அணி 2.4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. இவரை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகளும் போட்டிபோட்டன. 17 வயது பையனை எடுக்க ஏன் இவ்வளவு போட்டி?

உத்தரப்பிரதேசதச மாநிலத்தின் பதோஹியில், 2001-ம் ஆண்டு பிறந்தவர் இந்த ஜெய்ஸ்வால். மிகவும் சாதாரண குடும்பம். பிழைப்பு காரணமாக இவரது குடும்பம் மும்பைக்குக் குடிபெயர்ந்தது. கிரிக்கெட் மீது இவருக்கு மிகுந்த ஆர்வம். `கிரிக்கெட்தான் என் உலகம்' எனும் அளவுக்கு கிரிக்கெட் மீது பற்றுக்கொண்டவர். ஆனால், முழு நேரமும் இவரால் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்குச் செல்லவேண்டிய நிலை. கடைகளில் வேலைசெய்து கொண்டே கிரிக்கெட் விளையாடிவந்தார்.

ஜுவாலா சிங் எனும் கோச்சிடம் பயிற்சிபெற்றுவந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தைப் பார்த்து கோச் ஆச்சர்யப்பட்டுப் போனார். ``ஒரு 11 வயது இளைஞன், இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற கனவோடு மும்பை நகரம் வருகிறான் என்றால், அது பாலிவுட்டில் மட்டும்தான் நடக்கும். ஆனால், நிஜத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலால் முடியும்" என்று பாராட்டி முழுவேகத்துடன் பயிற்சி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். ஜெய்ஸ்வாலைவிட வயதில் மூத்த அணி வீரர்களுடன் விளையாட வைத்திருக்கிறார் அவர். ஆனால், ஜெய்ஸ்வால் ஒருபோதும் அவர்களைப் பார்த்து பயந்ததில்லை.

சர்வதேச பெளலர்களை எதிர்கொள்ளும் அளவுக்கு என்னைத் தயார்செய்கிறேன். முடிந்த அளவு அதற்காக உழைக்கிறேன். இதையெல்லாம்விட என்மீது நம்பிக்கை இருக்கிறது. எனது இலக்கை நோக்கி நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த மனநிலை எப்போதும் இருக்கும்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

பொதுவாக, இவர் வைத்துக்கொண்டிருக்கிற கிரிக்கெட் உபகரணங்கள், வேறு ஒருவரிடமிருந்து வாங்கியதாக இருக்கும். அல்லது வேறு யாராவது இலவசமாகக் கொடுத்ததாக இருக்கும். பயிற்சியின்போது சக வீரர்களுடன் பெட் கட்டி விளையாடுவது இவர் வழக்கம். ``என்னை விக்கெட் எடுத்தால் உனக்கு 100 ரூபாய். நான் உன்னை விக்கெட் எடுத்தால் நீ எனக்கு நூறு ரூபாய் தரவேண்டும்" என்பாராம். இந்தப் போட்டியின்மூலம் கிடைக்கக்கூடிய பணம் இவருக்கு முக்கியமானது. ``பெட்டில் வெற்றிபெறுவதற்காகவே நான் என்னை மேலும் தயார்படுத்திக் கொண்டேன்" என்கிறார்.

ஒருமுறை, ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று இவரை அந்தக் கடை நிர்வாகம் துரத்தியடித்தது. பின்னர், பகலில் கிரிக்கெட் விளையாடிவிட்டு, மாலை நேரத்தில் பானிபூரியும் பழங்களும் விற்க ஆரம்பித்திருக்கிறார். கிரிக்கெட்டில் ஆர்வமும் கவனமும் குறையாமல் பார்த்துக்கொண்டார். பள்ளியில் நடந்த ஒரு போட்டியில், 319 ரன்கள் அடித்து அசத்திய இவர், பந்துவீச்சில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தினார். இதன்மூலம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.

``ஐ.பி.எல் வாய்ப்பு நம் கையில் இல்லை!” - டாப் ஸ்பின்னர் சாய் கிஷோர்

2018-ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட ஆசிய கோப்பையில், 318 ரன்கள் விளாசி, அந்தத் தொடரின் சிறந்த வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019-ல் நடந்த இளம் வீரர்களுக்கான டெஸ்ட் போட்டியில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக 273 ரன்கள் அடித்தார். 2018 -2019 ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடியுள்ளார்.

கடந்த அக்டோபர் 16, இவரது வாழ்வில் பெரிய திருப்பத்தை உருவாக்கியது. ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே டிராபி போட்டியில், இரட்டைச் சதம் அடித்து மிரட்டினார் ஜெய்ஸ்வால். அந்த இரட்டைச் சதம், அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பிப்பார்க்கவைத்தது. மேலும், இந்தத் தொடரில், 6 போட்டிகளில் மட்டுமே ஆடி 564 ரன்கள் குவித்தார். சராசரி 112.80. இது மொத்த மீடியா வெளிச்சத்தையும் இவர்மீது பரவச்செய்தது.

நான் சிறுவனாக இருந்தபோது, டயட் பற்றியெல்லாம் யோசித்ததில்லை. அடுத்த வேளைக்கு சாப்பாடு கிடைக்குமா என்றுதான் அதிகம் யோசித்துள்ளேன்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால்

தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.40 கோடி ரூபாய்க்கு இவரை ஏலத்தில் எடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய உலகக் கோப்பை அணியிலும் ஜெய்ஸ்வால் இடம் பெற்றுள்ளார். பானிபூரி விற்று கிரிக்கெட் விளையாடிவந்த இந்தச் சிறுவன், இப்போது ஐபிஎல் -லில் விளையாடப்போகிறார்.

அடுத்த கட்டுரைக்கு