சினிமா
Published:Updated:

"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்!”

Viswanathan Anand
பிரீமியம் ஸ்டோரி
News
Viswanathan Anand

‘`இப்போது நீங்கள் எழுதியிருக்கும் ‘மைண்ட்மாஸ்டர்’ புத்தகம் உங்களின் சுயசரிதையா?’’

ந்தியா முழுக்க இன்று பல நூறு செஸ் கிராண்ட் மாஸ்டர்கள்... ஆனால், விதை விஸ்வநாதன் ஆனந்த் போட்டது. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரை, சாம்பியன்களின் சாம்பியனைச் சந்தித்தேன்.

‘`செஸ் போர்ட்டில் காய் நகர்த்தத் தொடங்கி 40 ஆண்டுகள்... கிராண்ட் மாஸ்டராக 30 வருடங்கள்... எப்படி இருக்கிறது?’’

“என் அம்மா எனக்கு செஸ்ஸை அறிமுகம் செய்தபோது எனக்கு வயது 6. அப்போதிருந்து இப்போதுவரை செஸ்ஸைத் தவிர வேறு சிந்தனைகளே எனக்கு இருந்ததில்லை. `வெற்றியோ தோல்வியோ... என்ன ரிசல்ட் கிடைச்சாலும் அந்த மேட்ச்ல நடந்ததை யெல்லாம் குறிச்சி வெச்சுக்கோ... பின்னாடி உதவும்னு’ என் அம்மா நான் விளையாட ஆரம்பித்த காலத்தில் சொன்னாங்க. அதை அப்படியே ஃபாலோ பண்ணியிருக்கேன். கிறுக்கல்கள்தான். ஆனாலும் அழகாக இருக்கும். இந்த 40 வருடப் பயணத்தில் அதைத்தான் நான் பொக்கிஷமாக நினைக்கிறேன்.’’

"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்!”

‘`இப்போது நீங்கள் எழுதியிருக்கும் ‘மைண்ட்மாஸ்டர்’ புத்தகம் உங்களின் சுயசரிதையா?’’

‘`என் வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை நான் வெளியில் பேசியதே கிடையாது. திடீர்னு 50-வது பிறந்தநாளில் கட்டாயம் புத்தகத்தைக் கொண்டுவந்துடணும்னு டெட்லைன் வெச்சு முடிச்சிருக்கேன். இதைப் படித்து ஒரு சிலராவது செஸ் பக்கம் திரும்பினால் மகிழ்ச்சி.’’

‘`உங்கள் வெற்றிகள், சாதனைகள் மூலம் மட்டுமே நீங்கள் செய்திகளில் இடம்பெறுகிறீர்கள்... நாட்டில் நடக்கும் வேறு விஷயங்களைப் பற்றியெல்லாம் நீங்கள் எந்தக் கருத்தும் சொல்வதில்லையே?’’

“எனக்குள் நானே பல முறை இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறேன். ஆரம்பத்தில் இதுபோன்ற விஷயங்களில் தலையிட்டால் என் கவனம் சிதறிவிடும் என நினைப்பேன். ஆனால் சர்ச்சைகள் குறித்துப் பேசி, அது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் பலரும் என்னைவிட நன்றாக விளையாடுவதையும் பார்த்திருக்கிறேன். எந்த விவகாரத்திலும் கருத்து சொல்லாமல் இருப்பதற்குப் பெரிய காரணங்கள் எதுவும் கிடையாது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், செஸ் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. தெரியாத விஷயம் குறித்துக் கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது.’’

‘`விஸ்வநாதன் ஆனந்த் என்றாலே எப்போதும் சீரியஸ் முகம்தான்... நீங்கள் மனம்விட்டுச் சிரித்த ஏதாவது ஒரு சம்பவத்தைச் சொல்லமுடியுமா?’’

“1988 -ம் ஆண்டு. அப்போதுதான் இந்தியாவின் முதல்கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டம் வென்று செய்தித்தாள்களில் இடம்பெற்றிருந்த நேரம். ஒரு செஸ் போட்டிக்காக ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன். அப்போது எனக்கு எதிரே இருந்த வயதில் மூத்தவர், `தம்பி என்ன பண்றீங்க?’ என என்னைப் பற்றி விசாரித்தார். ‘நான் செஸ் விளையாடுவேன்’ என்றேன்.

"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்!”
"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்!”

அதற்கு அவர், `அப்படியா... சரி வேற என்ன பண்றீங்க?’ என்றார். பதிலுக்கு நான் மீண்டும் `செஸ் விளையாடுறேன். அதைத்தான் எனது எதிர்காலமாகத் தீர்மானித்துள்ளேன்’ என்றேன். அதற்குச் சிரித்த அவர், `தம்பி சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. செஸ்ல விஸ்வநாதன் ஆனந்த் மாதிரி இருந்தா பரவாயில்லை. இல்லைன்னா வாழ்றது ரொம்ப கஷ்டம்’ என்றார்.

மற்றொரு சம்பவம். எனக்குத் திருமணம் முடிந்த பின்னர், சென்னை விமான நிலையத்தில் எனது லக்கேஜுக்காகக் காத்திருந்தேன். அங்கு ஒருவர் என்னைப் பார்ப்பதும், நான் பார்த்தால் திரும்பிவிடுவதுமாக இருந்தார். பின்னர் வெளியே வரும்போது என்னை யார் என்று கண்டுபிடித்து விட்டதைப் போன்று அவரது முகத்திலொரு தெளிவு. பக்கத்தில் வந்தவர், ‘சார் உங்க கடைசிப் படம் சூப்பர்... நல்லா நடிச்சிருந்தீங்க’ என்று சொல்லிவிட்டுப் போனார். எனக்குப் புரியவில்லை. என்னை டி.வி-யில் பார்த்திருக்கிறார். டி.வி-யில் பேசுகிறார் என்றால் செலிபிரிட்டி. செலிபிரிட்டி என்றால் சினிமா நடிகர் என அவர் நினைத்தி ருக்கலாம். பின்பு மனைவியிடம் நடந்ததைச் சொன்னேன். என் மனைவியோ, `அவரிடம் நீங்கள் ஹீரோவா வில்லனான்னு கேட்டிருக்கலாமே’ என்றார். என் மனைவிக்கு நான் ஹீரோவா வில்லனா எனத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது (சிரிக்கிறார்). இந்த இரண்டு சம்பவங்களையும் எப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும்.’’