Lionel Messi: கால்பந்து உலகின் பேரதிசயம் மெஸ்ஸி பிறந்ததினப் பகிர்வு!

நிவேதா.நா

கால்பந்து மீது ஆர்வம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவர்க்கும் இவ்விளையாட்டின் பெயரை கூறியவுடன் ஞாபகத்துக்கு வரும் பெயர் மெஸ்ஸி. சிறுவர் முதல் பெரியவர் வரை தன் கால்களால் கட்டிப் போட வைத்த லயோனல் மெஸ்ஸியின் பிறந்தநாள் இன்று.

1987-ம் ஆண்டு அர்ஜென்டினாவின் ரொசாரியோ பகுதியில் பிறந்தவர் லயோனல் ஆண்ட்ரஸ் மெஸ்ஸி. தன் 8-வது வயதிலேயே கால்பந்து கிளப் ஒன்றில் விளையாடத் தொடங்கிய மெஸ்ஸியின் ஆரம்பகால பயிற்சியாளர் அவர் தந்தைதான்.

சிறுவனாக இருந்தபோது மெஸ்ஸிக்கு ஹார்மோன் குறைபாடு இருந்தது. இதனால் 11-வது வயதில் அவரின் இயல்பான வளர்ச்சி நின்றுபோனது. இவரின் மருத்துவ செலவை பார்சிலோனா அணி நிர்வாகம் பார்த்துக்கொள்வதாக உறுதி அளிக்கவே ஸ்பெயின் நாட்டிற்கு பறந்தார் மெஸ்ஸி.

பார்ஸிலோனாவில் தன் முதல் ட்ரையல் ஆட்டதிலேயே அணியின் இயக்குனரை கவர்ந்தார் மெஸ்ஸி. இப்படி ஒரு வீரரை தவற விட்டுவிடக்கூடாது என்று நினைத்த இயக்குனரிடம் அப்போது ஒப்பந்தம் பேப்பர் எதுவும் கையில் இல்லை. உடனடியாக அருகில் இருந்த நாப்கினில் கையெழுத்திட்டு ஒப்பந்தம் செய்தார்.

மெஸ்ஸியிடம் இரு நாட்டு பாஸ்போர்டுகள் உள்ளன. ஒன்று தன் தாய்நாடான அர்ஜென்டினா. மற்றொன்று தன் கால்பந்தாட்டத்திற்கு வாழ்வு கொடுத்த ஸ்பெயின்.

ஒருகட்டத்தில் ஸ்பெயின் தேசிய கால்பந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பு மெஸ்ஸியை வந்தடைந்தது. ஆனால் தன் தாய்நாட்டின் ஜெர்ஸியை அணியவே விருப்பம் தெரிவித்தார் அவர்.

மெஸ்ஸியின் துடிப்பான ஆட்டத்தைக் கண்ட கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ, மெஸ்ஸியை தன் இளைய சகோதரன் என்று புகழ்ந்தார்.

2010 FIFA உலகக் கோப்பையின் கிரீஸுக்கு எதிரான போட்டியில் தன் தாய்நாடான அர்ஜென்டினாவிற்காக முதன்முறையாக கேப்டன் ஆர்ம் பேண்ட்டை அணிந்து விளையாடினார் மெஸ்ஸி.

மெஸ்ஸி - அன்டோனெல்லா ரோகுஸோ ஜோடிக்குத் தற்போது மூன்று மகன்கள் உள்ளனர்.

பார்சிலோனா கிளப்பிற்காக சுமார் 21 ஆண்டுகள் விளையாடிய மெஸ்ஸி கடந்த ஆண்டு PSG கிளப்பில் இணைந்து விளையாடி வருகிறார்.

பலநூறு சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் இந்த கால்பந்து GOAT-ற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!