இ.நிவேதா
FIFA ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றன.
22-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி, நவம்பர் 20-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், பல நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள், 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பங்கேற்று வருகின்றன.
இந்நிலையில், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் நடுவராகப் பங்கேற்க 38 வயதான ஸ்டெபானி ஃப்ராபார்ட் தகுதி பெற்று இருந்தார்.
இவர் கடந்த வாரம் மெக்ஸிகோ மற்றும் போலந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராகப் பங்கேற்று, `உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், பங்கேற்ற முதல் பெண் நடுவர்’ என்ற சிறப்பை பெற்றார்.
அதைத் தொடர்ந்து டிசம்பர் 1-ம் தேதி வியாழன் அன்று குரூப்-இ பிரிவில் கோஸ்டாரிகா - ஜெர்மனி அணிகள் போட்டியிட்டன. அதில் நடுவராகக் களமிறங்கினார், ஸ்டெபானி ஃப்ராபார்ட்.
அவருடன் பிரேசிலைச் சேர்ந்த நியூசா பேக் மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த கரேன் டயஸ் மெதீனா போன்றோர் துணை நடுவர்களாகப் பங்கேற்றனர்.
ஆடவர் உலகக் கோப்பையில் முதன்முறையாகப் பெண் நடுவர்கள் பங்கேற்ற தருணம், மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 129 நடுவர்களில், 6 பேர் மட்டுமே பெண்கள். இதில் 3 பேர் நடுவர்களாகவும், 3 பேர் துணை நடுவர்களாகவும் பங்கேற்றுள்ளனர்.
நடுவராக பிரான்ஸின் ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஜப்பானின் யோஷிமி யமாஷிதா, ருவாண்டாவின் சலிமா முகன்சங்கா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
துணை நடுவர்களாகப் பிரேசிலைச் சேர்ந்த நியூசா பேக், மெக்சிகோவைச் சேர்ந்த கரேன் டயஸ் மெதீனா, அமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் நெஸ்பிட் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
இவர்கள் தற்போது கால்பந்து தொடரில் களமிறங்க உள்ளனர்.