அன்று சித்து; இன்று ஹர்பஜன்! அரசியல் பதவிகளுக்குச் சென்ற கிரிக்கெட்டர்கள் இவர்கள்தான்!

பிரபாகரன் சண்முகநாதன்

கிரிக்கெட் களத்தில் விளையாடியவர்கள் அரசியல் நாற்காலிக்கு வருவது முதல்முறை அல்ல. தற்போது ஆம் ஆத்மியின் ராஜ்ய சபா உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஹர்பஜன் சிங்குக்கு முன்பே இங்கு கிரிக்கெட்டர்கள் அரசியல் பதவிக்கு போட்டியிட்டோ போட்டியிடாமலோ தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் யார் எனப் பார்ப்போம்!

முன்னாள் கிரிக்கெட்டர் கௌதம் காம்பீர் 2019 டெல்லி பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்டவரைவிட 6 இலட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனாகவும் இருந்த முகமது அசாருதீன் 2009 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக உத்தரபிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றியைப் பெறவில்லை.

நவ்ஜோதி சிங் சித்து, 2004-ல் பாஜக சார்பாக போட்டியிட்டார். மீண்டும் 2014-ல் பாஜக இவருக்கு வாய்ப்பு தர மறுத்து அருண் ஜெட்லீக்கு சீட் கொடுத்தது. பின் ராஜ்ய சபா உறுப்பினரானவர் 2016-ல் அதிலிருந்து விலகினார். பின்னர் காங்கிரஸில் இணைந்து அமைச்சராகவும் பதவி வகித்தார்.

முகமது கைஃப் 2000 -2006 ஆண்டுகளில் கிரிக்கெட்டில் ஆக்டிவாக இருந்தவர். 2014 காங்கிரசில் இணைந்து உத்தரபிரதேசம் புல்பூர் (Phulpur) சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். 125 ODI, 13 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார்.

தேஜஸ்வி யாதவ் அரசியல் பின்னணியில் வந்தபோதும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு நிறைய மேட்சுகளில் பங்கேற்றார். Delhi Daredevils IPL டீமில் 2008-2012 வரை விளையாடினார். இவரை அரசியலில் இருந்து கிரிக்கெட் வந்தவர் என்றுகூட சொல்லலாம்.

இந்திய விடுதலைக்குப் பிறகு அரசியலுக்கு வந்த கிரிக்கெட்டர் நவாப் மன்சூர் அலி கான் பட்டூடி 1971-ல் போபாலில் போட்டியிட்டார். இரண்டு முறை தேர்தலில் போட்டியிட்டு அவர் வெற்றிபெறவில்லை. பிரதமர் ராஜீவ் காந்தி, கபில் தேவ் அவருக்கு பிரசாரம் செய்தும் வெற்றி பெறவில்லை.

1933-34 பம்பாய் உள்ளாட்சி தேர்தலில் Palwankar Baloo என்கிற கிரிக்கெட் வீரர் போட்டியிட்டார். 1937-ல் காங்கிரஸ் கட்சி இவரை அம்பேத்காருக்கு எதிராக போட்டியிடச் செய்தது. 2000 ஓட்டுகளில் பல்வான்கர் தோல்வியடைந்தார்.

Palwankar Baloo

கிர்தி ஆசாத் 1983 உலக கோப்பை அணியில் இடம்பெற்றிருந்தவர், பாஜக சார்பாக போட்டியிட்டு பீகார் தர்பங்கா தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்றார். 2019-ல் காங்கிரஸில் இணைந்தார்.

சேத்தன் சௌகன், சுனில் காவஸ்கரின் டெஸ்ட் மேட்ச் ஓப்பனிங் பார்ட்னர். உத்தர பிரதேசம் அம்ரோஹா தொகுதியில் இரண்டு முறை எம்.பி ஆக இருந்தார். பாஜக சார்பில் உத்தர பிரதேசம் இளைஞர் நல மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும் இருந்தார்.

வினோத் காம்ப்ளி 1000 டெஸ்ட் ரன்களை விரைவாக எடுத்த இந்தியர். டெண்டுல்கருக்கு முன்பு ஒரே மேட்சில் 200 ரன்கள் சாதனையை முறியடித்தவர். கிரிக்கெட்டில் பல சாதனைகளைப் புரிந்தவர் அரசியலில் தன்னுடைய அதிர்ஷ்டத்தை முயன்று பார்த்தார். 2009 மும்பை விக்ரோலி தொகுதியில் லோக் பார்தி பார்ட்டி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

மனோஜ் பிரபாகர் இந்திய கிரிக்கெட் டீமின் ஆல் ரவுண்டர். கிரிக்கெட்டுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக மாறியிருக்கிறார்.

இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் அரசியல் கட்சிகள் எதிலும் இணையவில்லை. 2012-ல் ராஜ்ய சபா எம்.பி. ஆக பதவியேற்றுக்கொண்டார். 2018 வரை ராஜ்ய சபா உறுப்பினராக பதவி வகித்தார்.