உ.ஸ்ரீ
சூப்பர் ஹீரோ நடராஜன்!
ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் கொண்டாடிய வீரர் நடராஜன். சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து வந்தவர், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி தடுமாறிக்கொண்டிருந்தபோது, அணியை மீட்டெடுக்கும் ரட்சகனாக மாறினார்!
கிரிக்கெட்டில் #BlackLivesMatter
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக மைக்கேல் ஹோல்டிங் நிறவெறிக்கு எதிராக கண்ணீர் விட்டு பேசிய பேச்சு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமன்றி அனைவரையுமே உலுக்கியது. கிரிக்கெட் களத்தில் நடந்த முதல் அரசியல் நிகழ்வு இது!
தோனி-ரெய்னா ஓய்வு!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று சென்னையில் ஐபிஎல் பயிற்சியில் இருக்கும்போது தனது ஓய்வு முடிவை இன்ஸ்டாகிராமில் அறிவித்தார் தோனி. கூடவே ரெய்னாவும் சேர்ந்துகொண்டார்.
ஆண்டர்சன் 600... பிராட் 500
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் அசார் அலியின் விக்கெட்டை வீழ்த்தி டெஸ்ட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்கிற பெருமையை பெற்றார் ஜேம்ஸ் ஆண்டர்சன். கரீபியனின் பிராத்வெயிட்டின் விக்கெட்டை வீழ்த்தி 500 விக்கெட் சாதனை செய்தார் ஸ்டூவர்ட் பிராட்.
மும்பையின் வெறித்தனங்கள்!
சில அணிகள் இன்னும் ப்ளே ஆஃபுக்குள் நுழையவே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க 5-வது முறையாக ஐபிஎல்-ன் சாம்பியன் பட்டத்தை வென்று வெறித்தனம் காட்டியது மும்பை இந்தியன்ஸ்.
டபுள் சூப்பர் ஓவர்!
டி20-யே பரபரப்பாக இருக்கும். அதில் மேட்ச் டை ஆகி சூப்பர் ஓவர் என்றால் சொல்லவே வேண்டாம். அந்த சூப்பர் ஓவரும் டை ஆகி மற்றொரு சூப்பர் ஓவருக்கு ஆட்டம் போனால் எப்படியிருக்கும்!? 2020 ஐபிஎல்-ல் மும்பைக்கும், பஞ்சாபுக்கும் இடையிலான போட்டி இப்படித்தான் முடிந்தது.
பெண்கள் டி20 உலகக்கோப்பை!
லாக்டெளனுக்கு முன்பாக பிப்ரவரியில் ஆஸ்திரேலியாவில் நடந்தது பெண்கள் உலகக்கோப்பை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கிய இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
லங்கா ப்ரீமியர் லீக்!
தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்கு பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திஸாரா பெராரா தலைமையில் உருவான ஜாஃப்னா (யாழ்ப்பாணம்) அணிதான் லங்கா பிரிமியர் லீகை வென்றது. அணியில் 3 தமிழ் வீரர்களும் இடம்பெற்றிருந்தனர்.
92 ரன்கள் அடித்தே வெற்றி!
டி20 போட்டியில் 92 ரன்களை டிஃபெண்ட் செய்வதெல்லாம் கனவிலும் நினைக்க முடியாதது. அந்த அதிசயமும் 2020-ல் நிகழ்ந்தது. வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் ப்ரீமியர் லீகில், டேரன் சமி தலைமையிலான லூசியா சூக்ஸ் அணி இந்த சாதனையைப் படைத்தது.
பேசப்படாத கம்பேக்!
பாகிஸ்தானின் ஃபவாத் ஆலம். இவரை டாப் மொமன்ட்டில் குறிப்பிடும் அளவுக்கு இந்த ஆண்டில் இவர் எதுவும் பெரிதாக சாதனைகள் செய்துவிடவில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு இவர் 2020-யில் தேர்வானதே கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. ஆச்சர்ய கம்பேக் இது!