HBD Sehwag: `அதிரடிக்காரன் வீரு' - வீரேந்தர் சேவாக் குறித்த 10 சுவாரஸ்ய தகவல்கள்!

ஆ.பி.அர்ஜுன்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்தர் சேவாக்குக்கு இன்று பிறந்தநாள். அதிரடி சரவெடி ஓப்பன்ராக வலம் வந்த சேவாக் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இதோ...

உலக கிரிக்கெட்டில் 'வீரு' என்று அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்,1978-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி டெல்லியின் நஜஃப்கார் நகரத்தில் பிறந்தார்.

சிறு வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அளப்பரிய ஆர்வம் கொண்டவராக இருந்து வந்தார்.

1997-ம் ஆண்டு டெல்லி கிரிக்கெட் அணிக்காக சேவாக் முதன்முதலாகக் களமிறங்கினார்.

உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடியதால் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்தது.

டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முச்சதங்கள் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமை சேவாக்கைச் சேரும்.

2004ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்டில் 375 பந்துகளில் 309 ரன்களைக் குவித்தார். சோயப் அக்தர் பந்துகளைத் துவம்சம் செய்த சேவாக் ’முல்தானின் சுல்தான்’ என்ற புனைபெயருடன் அழைக்கப்பட்டார்.

2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் 304 பந்துகளில் 319 ரன்களை அடித்து நொறுக்கினார்.

வீரேந்தர் சேவாக், 2002-ல் 'அர்ஜுனா விருதை' வென்றார். 2010-ம் ஆண்டின் மதிப்புமிக்க 'பத்ம ஸ்ரீ' விருதையும் பெற்றார்.

ஒரு நாள் போட்டியில், சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு, இரட்டை சதம் அடித்த 2வது பேட்ஸ்மேன் சேவாக்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டிலும் 7500+ ரன்களைக் குவித்த உலகின் ஒரே தொடக்க ஆட்டக்காரர் சேவாக்.

பௌலராக டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 40 விக்கெட்டுகளும், ஒரு நாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

104 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 155.4 என்ற சிறந்த ஸ்ட்ரைக் ரேட்டில் 2728 ரன்கள் குவித்துள்ளார்.

104 டெஸ்ட் போட்டிகளில் 8586 ரன்களை சேவாக் குவித்துள்ளார். 251 ஒருநாள் போட்டிகளில் 8273 ரன்கள் எடுத்துள்ளார்.

2015-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி தனது பிறந்த நாளன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

டெஸ்ட் , டி20, ஓடிஐ என எல்லா போட்டிகளிலும் தனது பாணியில் அடித்து நொறுக்கிய சேவாக்குக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். ஹேப்பி பர்த்டே வீரு!