ம.காசி விஸ்வநாதன்
முதல் போட்டியில் இரண்டாம் இன்னிங்ஸில் 36-க்கு இந்தியா ஆல்-அவுட்டான போது உலகமே இந்த சீரிஸ் இந்தியா ஒயிட்-வாஷ் என்றுதான் நினைத்திருக்கும்.
இதுவரை கிரிக்கெட் உலகம் பார்த்திராத 'முரட்டு கம்பேக் சம்பவம்' காத்திருக்கிறது என அப்போது யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.
தந்தையாகக் கடமையாற்ற தலைவன் கோலி விடுப்பில் செல்ல ரஹானேவிடம் தலைமை பொறுப்பு வந்தது. கடமையை தன் தோளில் சுமந்து செஞ்சுரி அடித்து மெல்போர்னில் இரண்டாம் போட்டியை வென்றுகொடுத்தார் ரஹானே.
மூன்றாவது போட்டியில் தடுப்பாட்டத்தில் பாடம் எடுத்து 'ட்ரா'வை டிராவிட் பிறந்தநாளுக்கு டெடிகேட் செய்தது அஸ்வின் - விஹாரி கூட்டணி.
மூன்று போட்டிகள் முடிந்துவிட்டன. 1-1 என வெற்றி இன்னும் யார் பக்கமும் சாயவில்லை.
'GABBA எங்க கோட்டை, முடிஞ்சா வந்து ஜெயிச்சு காட்டுங்க' எனச் சவால் விட்டது ஆஸ்திரேலியா. போட்டிக்கு நாங்க ரெடி எனக் களமிறங்கியது இந்தியாவின் இளம்படை.
காயங்கள் காரணமாக முதல்கட்ட ஸ்குவாடில் இல்லாதவர்களுக்கு வாய்ப்பளித்து ஆட வேண்டிய நிலை இந்தியாவுக்கு. அனுபவத்தில் பாகுபலி இன்டர்வெல் காட்சி போல வானுயர நின்றுகொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு அணி.
இந்தியாவிலோ அனைவருமே கத்து குட்டிகள். மொத்த அணியும் சேர்ந்து கூட சர்வதேச 15 விக்கெட்கள் வீழ்த்தியிருக்காது. ஆனால், ஆஸ்திரேலியா கணக்கோ ஆயிரத்தைத் தாண்டியது.
முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சில் கலக்கினர் அறிமுக வீரர்களான வாஷிங்க்டன் சுந்தரும், நடராஜனும். ஆனால், பேட்டிங் சொதப்பியது. முன்னணி வீரர்கள் பெவிலியன் திரும்ப களம்கண்டது சுந்தர் - தாக்கூர் கூட்டணி.
'இதைதான் இவ்வளவு நேரமா ஒட்ட வச்சிட்டு இருந்தீங்களாடா' என ஆஸ்திரேலிய வீரர்களுக்குத் தண்ணிகாட்டியது இந்தக் கூட்டணி. இந்தக் கூட்டணியின் 123 ரன் பார்ட்னர்ஷிப்பால் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் டோட்டலை நெருங்கியது இந்தியா.
சொற்ப லீடுடன் இரண்டாம் இன்னிங்ஸில் களம்கண்ட ஆஸ்திரேலியா நல்ல தொடக்கத்தைப் பெற்றது. பின்பு மொத்த அணியையும் வறுத்தெடுத்தது சிராஜ் - தாக்கூர் கூட்டணி.
சிராஜ் 5 விக்கெட்களும், தக்கூர் 4 விக்கெட்களும் வீழ்த்தினர். 328 டார்கெட். நான்காம் நாள் முடியும் தருணத்தில் மழை குறுக்கிட்டது.
மீதம் இருப்பது ஒரு நாள். 'ஜெயிக்கிறதெல்லாம் வாய்ப்பே இல்ல ப்ரோ, ட்ரா பண்ணி ட்ராபி ரீட்டைன் பண்ணாலே மாஸ்தான்' என நாம் நினைத்துக்கொண்டிருக்க 'வீ ஹேவ் அதர் ஐடியாஸ் ப்ரோ' எனக் களம்கண்டது இந்திய அணி.
'நானே பெரிய ஹிட்டர்தான்டா' என ஹிட்மேன் விக்கெட்டுக்கு பிறகு பொளந்துகட்டினார் ஷுப்மான் கில்.
91-ல் அவர் அவுட்டாக மீண்டும் 'ட்ரா தான் போல' என நாம் செட்டிலாகினோம். 'அப்படியெல்லாம் ஆகாதீங்க' என ரஹானேவும் அதிரடி காட்டினார். ஆனால், பாவம் வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்பினார்.
ஒரு பக்கம் புஜாரா, 'யார் அவுட்டானாலும் நான் அவுட்டாக மாட்டேன்' என உடம்பில் உள்காயங்களை வாங்கிக்கொண்டு திடமாக நின்றார். அடுத்து இறங்கியது ரிஷப் பன்ட். அதிரடி காட்டுவார் எனப் பார்த்தால் 'பாயிண்ட் வரட்டும்' என நம்மை வெயிட்டிங்கில் வைத்தார்.
அவர் அதிரடியைக் காட்ட ஆரம்பித்ததும், புஜாரா எனும் மரமும் சரிந்தது. நாள் முடிய சில ஓவர்களே இருந்தன. 'வெற்றியா, ட்ராவா' என என்ற முக்கிய முடிவை இந்தியா எடுத்தாக வேண்டிய நேரம் அது. ரிஸ்க் என்றாலும் முதல் ஆப்ஷனே டிக் அடிக்கப்பட்டது.
மயங்க் அகர்வால் நடையைக் கட்ட வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். ஒரு பக்கம் பன்ட் அதிரடி தொடர சுந்தரும் அதிரடி காட்டினார். டெஸ்ட் டி20-யானது.
டி20 போல சீக்கிரம் வாஷிங்டன் விக்கெட்டும் போனது. வெற்றிக்குத் தேவை சில ரன்களே. அதை அடித்தாக வேண்டிய கடமை பன்ட்டின் தோல்களில்!
தாக்கூர் கொஞ்சம் நேரம் மட்டும் கம்பெனி கொடுத்து நடையைக் கட்டினார். ஆனால், அதற்குள் வெற்றியை நுகர முடிந்தது இந்திய அணியால்! அதை ருசிக்கவும் வைக்கத் தவறவில்லை பன்ட்.
36 ரன் எடுத்து ஆல்அவுட்டானபோது இந்தியா அடைந்ததை விட 'எங்க ஏரியா உள்ள வராத' என்ற ஆஸ்திரேலியாவுக்கு இது பெரும் அவமானம். GABBA என்னும் கோட்டை சுக்குநூறாக நொறுக்கப்பட்டது.
இம்முறை 'ஸ்மித் இல்லை, வார்னர் இல்லை' எனச் சாக்கும் சொல்ல முடியாது. மொத்த XI-னுமே இல்லாமல் 'C' டீம் வைத்து வெற்றியை ருசித்துவிட்டது இந்தியா!
இது சாதாரண டெஸ்ட் வெற்றி மட்டுமல்ல, ஆஸ்திரேலிய ஆணவத்திற்கு எதிரான வெற்றி!