பிங்க் பால், பகலிரவு டெஸ்ட், கிங் கோலி 74... அடிலெய்ட் டெஸ்ட்டின் முதல் நாள் மொமன்ட்ஸ்! #AUSvIND

ர.சீனிவாசன்

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது இந்தியா. பெரிதும் நம்பப்பட்ட பிரித்வி ஷா, ஸ்டார்க் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே போல்டாகி வெளியேறினார்.

ஒன் டவுன் இறங்கிய சத்தேஷ்வர் புஜாரா வழக்கம்போல 'தடுப்புச் சுவராக' நிலைத்து நின்று ஆடினார். இவர் 160 பந்துகளைச் சந்தித்து 43 ரன்கள் அடித்தார். பல மணி நேரமாக பவுண்டரியே அடிக்காமல் ஆடியவர் திடீரென வேகமெடுத்து இரண்டு பவுண்டரிகள் தொடர்ந்து அடித்தார். ஆனால், புஜாராவை ஸ்பெஷல் பிளான் போட்டுத் தூக்கினார் நாதன் லயான்.

புஜாரா மற்றும் ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, பொறுப்பான கேப்டனாக ஆடினார். சதம் அடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், 74 ரன்களில் அநியாயமாக ரன் அவுட் ஆனார் கோலி. ரஹானேவின் தவறால் கிங் கோலியின் விக்கெட் காலியானது.

துணைக்கேப்டன் ரஹானே, கோலி மற்றும் ஹனுமா விஹாரியுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டாலும் அரை சதத்தை பூர்த்தி செய்யாமல் 42 ரன்களுக்கு வெளியேறினார்.

முதல் நாள் முடிவில் சாஹா 9 ரன்களுடனும் அஷ்வின் 15 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 233 ரன்கள் குவித்து 6 விக்கெட்களை இழந்துள்ளது.

ஆஸ்திரேலியா சார்பாக மிட்செல் ஸ்டார்க் 49 ரன்கள் கொடுத்து பிரித்வி ஷா, ரஹானே என இரண்டு முக்கியமான விக்கெட்களைக் கைப்பற்றினர்.

ஜோஷ் ஹேசில்வுட், பேட் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயான் ஆகியோர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர்.