Published:Updated:

கண்களுக்கு சவால்... ஸ்பின்னர்களுக்கு சிரமம்... கோலிக்கு டெஸ்ட்... எப்படி இருக்கும் பிங்க் டெஸ்ட்?!

பிங்க் பந்து
News
பிங்க் பந்து

முதல்முறை இந்தியாவில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் அதைக் கொண்டாடுவது என முடிவெடுத்திருக்கிறது பிசிசிஐ. முதல்நாள் போட்டி தொடக்கத்தின்போது, துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் வழங்க உள்ளனர்.

Published:Updated:

கண்களுக்கு சவால்... ஸ்பின்னர்களுக்கு சிரமம்... கோலிக்கு டெஸ்ட்... எப்படி இருக்கும் பிங்க் டெஸ்ட்?!

முதல்முறை இந்தியாவில் பிங்க் பந்தில் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளதால் அதைக் கொண்டாடுவது என முடிவெடுத்திருக்கிறது பிசிசிஐ. முதல்நாள் போட்டி தொடக்கத்தின்போது, துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் வழங்க உள்ளனர்.

பிங்க் பந்து
News
பிங்க் பந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் பிங்க் பந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. ஆனால், முதல்முறையாக இப்போதுதான் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்தில் விளையாட இருக்கிறது இந்தியா. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போர்டுகள் எவ்வளவோ வலியுறுத்தியும் பகல் இரவு டெஸ்ட்டில் ஆட இந்தியா சம்மதிக்கவில்லை. பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்றதும் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்திருக்கும் மாற்றம் இது!

Sourav Ganguly - Virat Kohli
Sourav Ganguly - Virat Kohli

கேப்டன் விராட் கோலியுடன் பேசி அவரை சம்மதிக்கவைத்து, அடுத்து வங்கதேச கிரிக்கெட் போர்டுடன் பேசி அவர்களிடமும் சம்மதம் வாங்கி, பகல் இரவு டெஸ்ட் போட்டியை இந்தியாவில் சாத்தியமாக்கியிருக்கிறது பிசிசிஐ.

பிங்க் பந்துகளின் வரலாறு என்ன?

1997-ல் குவாலியரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நடைபெற்ற ரஞ்சி கோப்பை போட்டி இரவில் நடத்தப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் வெள்ளை நிற பந்துகளே பயன்படுத்தப்பட்டன.

Pink ball
Pink ball

வெஸ்ட் இண்டீஸில் 2000-ம் ஆண்டில் பகல் இரவு ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகள் டிரினிடாட் மற்றும் டோபாகோ அணிகளுக்கிடையே நடைபெற்றது. இதில்தான் முதல்முறையாக பிங்க் நிறப் பந்துகள் பயன்படுத்தப்பட்டன.

2010 இங்கிலாந்து கவுன்ட்டி போட்டிகளில் கென்ட் அணிக்கும் கிளாமோர்கன் அணிக்கும் இடையில் பகல் இரவு போட்டி நடைபெற்றது. இதிலும் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், 20/20 கிரிக்கெட் வந்த பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான வரவேற்பு குறைந்ததால் பிங்க் பந்து முயற்சிகள் பின்தங்கின.

2012-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவதற்கான கூட்டத்தை ஐசிசி கூட்டியது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில் ஒன்றுதான் பகல் இரவு டெஸ்ட், பிங்க் பந்து. ஆனால், இதைச் செயல்படுத்த மூன்று ஆண்டுகள் ஆனது.

2015 நவம்பர் 27-ம் தேதி ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடந்ததுதான் முதல் சர்வதேச பகல் இரவு டெஸ்ட் போட்டி. இதில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. போட்டி 3 நாள்கள் மட்டுமே நடைபெற்றாலும் போட்டியைக் காண பெரும் கூட்டம் கூடியது. 1,23,736 பேர் இந்த டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளித்தனர். நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லம் போட்டி முடிந்தவுடன், பிங்க் டெஸ்ட் போட்டிகள் தொடர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.

Aus vs Nz
Aus vs Nz

இதற்கு அடுத்த பிங்க் டெஸ்ட் போட்டி ஒரு வருடம் கழித்து துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் அசார் அலி 302 ரன்கள் அடித்தார். பகல்-இரவு டெஸ்டில் சதம், இரட்டை சதம், முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை அசார் அலி வசமானது.

இதற்கு அடுத்து இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாவாவே ஆகிய அணிகள் பிங்க் டெஸ்ட் போட்டிகளில் ஆடின. இதுவரை மொத்தம் 11 பிங்க் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் 5 போட்டிகள் ஆஸ்திரேலியாவிலும் இரண்டு துபாயிலும் நடைபெற்றுள்ளன. இதுவரை நடந்த 11 போட்டிகளிலுமே முடிவுகள் கிடைத்திருக்கிறன. எந்தப் போட்டியுமே டிரா ஆகவில்லை.

Pink ball
Pink ball

இந்தியாவில் பிங்க் பந்து போட்டிகள் !

செளரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தபோது, 2016 சிஏபி சூப்பர் லீக்கின் இறுதிப்போட்டி பிங்க் பந்துகளைக் கொண்டு நடத்தப்பட்டது. மோஹன் பகான் மற்றும் போவானிப்பூர் அணிகள் இதில் விளையாடின. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியும், தற்போதைய கீப்பர் சாஹாவும் இந்தப் போட்டியில் பங்கேற்றிருக்கின்றனர்.

2016 மற்றும் 2017 துலீப் டிராபி போட்டிகளில் பிங்க் பந்துகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தற்போதைய இந்திய அணியின் வீரர்களான மயாங்க் அகர்வால், புஜாரா, ஜடேஜா ஆகியோர் இந்தப் போட்டிகளில் அசத்தியுள்ளனர். மயாங்க் அகர்வால் 5 இன்னிங்ஸ்களில் முறையே 92, 161, 58, 57, 52 என 419 ரன்கள் குவித்துள்ளார். புஜாரா 3 இன்னிங்ஸ்களில் 166, 31, 256 ரன்கள் அடித்துள்ளார். இவர்தான் பிங்க் பந்து போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்தியர் என்ற சாதனையை வைத்துள்ளார். ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

Indian team
Indian team

ரோஹித் ஷர்மா, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட் ஆகியோரும் பிங்க் பந்து போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இப்போதைய இந்திய அணியில் கோலி, ரஹானே, அஷ்வின், உமேஷ் ஆகியோர் பிங்க் பந்து போட்டிகளில் விளையாடியதில்லை.

ஏன் கொல்கத்தா ஈடன் கார்டன்?

துலீப் டிராபி போட்டி நொய்டாவில் நடந்தபோது பிங்க் பந்துகள் விரைவில் நிறம் மாறியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், சிஏபி சூப்பர் லீக் போட்டி ஈடன் கார்டனில் நடந்தபோது நொய்டா அளவுக்குப் பந்தின் நிறம் மாறவில்லை. காரணம் ஈடன் கார்டன் பிட்ச்சின் தன்மை பிங்க் பந்துக்கு சாதகமாக இருந்தது.

Eden Garden
Eden Garden

முதல்முறை இந்தியாவில் பிங்க் பந்து போட்டி நடைபெற உள்ளதால் அதைக் கொண்டாடுவது என முடிவெடுத்திருக்கிறது பிசிசிஐ. முதல்நாள் போட்டி தொடக்கத்தின்போது, துணை ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் பந்தை இரு அணிகளின் கேப்டன்களிடம் வழங்க உள்ளனர். இந்தப் போட்டியில் பிங்க் நிற எஸ்.ஜி பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன.

72 பிங்க் பந்துகளை வழங்குமாறு எஸ்.ஜி-யிடம் பிசிசிஐ கேட்டுள்ளது. வலைப்பயிற்சியில் பயன்படுத்தப்படும் பந்துகள் தனியாக எடுத்து வைக்கப்பட்டு போட்டிக்கு நடுவில் மாற்றம் செய்ய வேண்டியதிருந்தால் அதை உபயோகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மைதானத்தின் அருகே ஒரு பெரிய பிங்க் பலூன் கட்டப்பட்டுள்ளது. கொல்கத்தா நகரங்களில் உள்ள முக்கியமான இடங்களில் பிங்க் விளக்குகளால் ஒளிர்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்தப் போட்டியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தொடங்கி வைக்க இருக்கிறார்.

Kolkatta
Kolkatta

பிங்க் பந்து யாருக்கு சவால்?

பிங்க் பந்துகள் பேட்ஸ்மேன்களுக்குப் பெரிய சவாலாக இருக்கும். குறிப்பாக, மாலை நேரங்களில் இந்தப் பந்து கண்ணுக்கு சரியாகத் தெரிவதில் சிக்கல் இருக்கலாம். அதேபோல, ஸ்பின்னர்களுக்கும் பிங்க் பந்துகளில் ஸ்பின் செய்வது சிரமம். இந்தத் தடைகளை எப்படி பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னர்களும் உடைக்கிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்.