Published:Updated:

40 டாட் பால்கள்... 5 விக்கெட்டுகள்.. ஷகிப் சுழலில் வீழ்ந்த ஆப்கானிஸ்தான்! #BANvAFG

#BANvAFG
#BANvAFG

7 போட்டிகளில் மூன்றில் வெற்றியுடன் 7 புள்ளிகளை எட்டியிருக்கும் வங்கதேசம், அரை இறுதிக் கனவை உயிர்ப்பில் வைத்துள்ளது. #BANvAFG

மற்றுமொரு முறை உலகின் சிறந்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனின் அசத்தல் பர்ஃபாமன்ஸால், 62 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம். 7 போட்டிகளில் மூன்றில் வெற்றியுடன் 7 புள்ளிகளை எட்டியிருக்கும் வங்கதேசம், அரை இறுதிக் கனவை உயிர்ப்பில் வைத்துள்ளது. #BANvAFG

#BANvAFG
#BANvAFG

செளதாம்ப்டனில் இந்தியாவுக்கு டஃப் கொடுத்த ஆப்கானிஸ்தான், வங்கதேசதுக்கு எதிரான போட்டியில் ஆசியக் கோப்பையில் நடந்ததை ரிப்பீட் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் குல்பதின் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். செளதாம்ப்டன் ரோஸ் பெளல் மைதானத்தின் ஸ்லோ பிட்ச்சை கணக்கில் கொண்டு, 200-220 ரன்களுக்கு வங்கதேசத்தைக் கட்டுப்படுத்துவதே ஆப்கானின் திட்டமாக இருந்திருக்கும். முதல் இன்னிங்ஸின் 40-வது ஓவர்வரை ஓரளவு இந்தத் திட்டத்தைக்த் கட்டுக்குள் வைத்திருந்த ஆப்கானிஸ்தான், கடைசி 10 ஓவர்களில் கோட்டைவிட்டது.

முஜீப் –இன் – விக்கெட்டுகள்

ஓப்பனிங் களமிறங்கிய லிட்டன் தாஸ், தமிம் இக்பால் இணை நிதானமாக இன்னிங்ஸைத் தொடங்கியது. முஜிப் உர் ரகுமான் வீசிய 4-வது ஓவரில், ஷார்ட் கவர் திசையை நோக்கி லிட்டன் தாஸ் அடித்த பந்து ஃபீல்டர் ஹஷ்மத்துல்லாவின் கைகளில் சிக்கியது. முதல் விக்கெட் கிடைத்த உற்சாகத்தில் ஆப்கானிஸ்தான் பெளலர்கள் களத்தில் நிற்க, பந்து தரையைத் தொட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் லிட்டன் தாஸ் பிட்ச்சில் காத்திருந்தார். அது அவுட்டா, இல்லையா என்பது நூறு சதவிகிதம் உறுதி செய்ய முடியவில்லை. டிவி அம்பயர் அவுட் எனச் சொன்னதும், ஏமாற்றத்துடன் லிட்டன் தாஸ் வெளியேறினார். அடுத்து களமிறங்கினார் இந்தத் தொடரின் `நாயகன்’ ஷாகிப் அல் ஹசன்.

#BANvAFG
#BANvAFG

அதிரடி ஷாட்கள் இல்லை, பந்துகளை வீணடிக்கவும் இல்லை. ஷகீப் - தமீம் இணை மெதுவாக ரன் சேர்த்தது. 59 ரன்களுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணையைப் பிரித்தார் முகமது நபி. 36 ரன்கள் எடுத்திருந்தபோது க்ளீன் போல்டாகி தமீம் வெளியேற, அடுத்த முஷ்ஃபிகுர் களமிறங்கினார். ஒரே ஒரு பவுண்டரி மட்டும் அடித்து, சிங்கிஸ், டபுள்ஸ் என மெதுவாக ரன் சேர்த்த ஷகிப் 60 பந்துகளில் அரை சதம் கடந்தார். ஒவ்வொரு பத்து ஓவர்களிலும் இரு அணிகளின் செயல்பாடு ஏறக்குறைய ஏட்டிக்குப் போட்டியாக இருந்தது.

வங்கதேச வீரர்கள் பார்ட்னர்ஷிப் பில்ட் செய்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, ஆப்கானிஸ்தானின் சுழல் அட்டாக் விக்கெட்டுகளை வீழ்த்தியது. குறிப்பாக முதல் இன்னிங்ஸின் 40-வது ஓவர் வரை வங்கதேச அணியின் ரன்களை கட்டுக்குள் வைத்து, லிட்டன் தாஸ், ஷகிப், செளமியா சர்க்காரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார் முஜிப். 40-வது ஓவரின் முடிவில் வங்கதேசத்தின் ஸ்கோர் 193/4.

முஷ்ஃபிகுர் - 83

கடைசி பத்து ஓவர்களில் மொத்தமாக கோட்டைவிட்டது ஆப்கானிஸ்தான். 48-வது ஓவர்வரை களத்தில் நின்ற முஷ்ஃபிகுர் ரஹிம், வங்கதேசத்தின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பொறுப்பாக ஆடிய முஷ்ஃபிகுர் 4 பவுண்டரிகள், 1 சிக்சர்களுடன் 83 ரன்கள் எடுத்தார்.

#BANvAFG
#BANvAFG

சுழல் அட்டாக்கைத் தவிர்த்து வேகப்பந்துவீச்சாளர்களை களமிறக்கிய குல்பதின், வங்கதேசத்தின் ரன் மழைக்கு வழிவகுத்தார். லோயர் ஆர்டரில் களமிறங்கிய மஹமதுல்லா, மொசடக் ஹுசைன் தவ்லத், குல்பதின் ஓவர்களில் பவுண்டரிகள் தட்டினர். விளைவு, கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 69 ரன்கள். 50 ஓவர் முடிவில் 262/7 என ஆப்கானிஸ்தானுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்தது வங்கதேசம்.

பெளலிங்கிலும் ஷாகிப் (10-5-29)

263 ரன்களை சேஸ் செய்ய ஆப்கானிஸ்தான் திணறியது. இல்லை, திணறடிக்க வைத்தார் ஷாகிப் அல் ஹசன். முதல் விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குல்பதின், ரஹமத் ஷா அடித்த 49 ரன்களை தவிர வேறு எதுவும் சிறப்பாக அமையவில்லை ஆப்கானிஸ்தான் அணிக்கு!

ஓப்பனிங் வீரர்கள் குல்பதின், ரஹமத் ஷாவின் விக்கெட்டை வீழ்த்திய ஷாகிப், ஆப்கானிஸ்தான் சுதாரித்த போதெல்லாம் ஆஜராகி விக்கெட் எடுத்தார்.

#BANvAFG
#BANvAFG
10 ஓவர்களில், 40 டாட் பால்கள், 1 மெயிடன் ஓவர், 29 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார் ஷகிப்.

ஓப்பனர்களை பெவிலியன் அனுப்பியதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கானும் ஷாகிப்பின் சுழலில் சிக்கினார். முன்னாள், இந்நாள் கேப்டன்கள் இருவரையும் ஷாகிப் வெளியேற்ற, நம்பிக்கை பேட்ஸ்மேன் நபி களமிறங்கினார். இந்தியாவுக்கு எதிராக வித்தை காட்டிய நபியை, இரண்டாவது பந்திலேயே க்ளீன் போல்டு செய்தார் ஷகிப்!

ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக சிதைத்துக்கொண்டிருந்தார் ஷகிப் அல் ஹசன். ரன் எடுக்கக்கூடிய முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஷாகிப்தான் 'மேன் ஆஃப் தி மேட்ச்' என்று அப்போதே தெரிந்துவிட்டது.

ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் அரை சதம் கடந்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரரானார் ஷாகிப் அல் ஹசன். இதற்கு முன், 2011 உலகக் கோப்பையில் ஐயர்லாந்துக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங் எடுத்ததே (50*, 10-35-5) சாதனையாக இருந்தது

உலகக் கோப்பை போட்டிகளில், 1000 ரன்களை கடந்த முதல் வங்கதேச வீரர் என்ற ரெக்கார்டும் இப்போது ஷாகிப் வசம். அதுமட்டுமன்றி 2019 உலகக் கோப்பையில், அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். ஷாகிப்பின் ஆல் ரவுண்டர் பர்ஃபாமன்ஸ் கைகொடுக்க, ஆப்கனை வீழ்த்தி, 2 புள்ளிகளை சொந்தமாக்கியது டைகர்ஸ். அரை இறுதி வாய்ப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வங்கதேசம் ஜூலை 2-ம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது

தொடரும் ஆப்கான் பரிதாபங்கள்

ஸ்பின்னர்கள்தான் ஆப்கானிஸ்தானின் பலம் என்பது ஊரறிந்ததே. அதனால்தான், டாஸ் வென்றதும் முதலில் ஃபீல்டிங் தேர்வுசெய்து, எதிரணியை 200–250 ரன்களுக்குள் சுருட்ட நினைக்கிறார்கள். ஆனால், 250 ரன்களை சேஸ் செய்யும்போது ரொம்பவே தடுமாறுகின்றனர் பேட்ஸ்மேன்கள். போதாக்குறைக்கு பேட்டிங் ஆர்டரில் ஏகப்பட்ட மாற்றங்கள். கேப்டன் குல்பதின் எப்போது இறங்குவார் என்பது அவருக்கே வெளிச்சம். நேற்று நஜிபுல்லாவை முன்கூட்டியே களமிறக்கியிருக்கலாம் என்ற விமர்சனமும் எழுந்தது.

இன்னும் இரண்டு போட்டிகளே இருப்பதால், இந்த உலகக் கோப்பையில் ஒரு வெற்றியையாவது ஆப்கான் பதிவு செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு