சினிமா
Published:Updated:

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

நாதியா
பிரீமியம் ஸ்டோரி
News
நாதியா

பெண்கள் கால்பந்தில் டென்மார்க் அணியின் சூப்பர் ஸ்டார் இந்த நாதியா.

கொரோனாவை முற்றிலும் மறந்து கால்பந்துக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருக்கிறது ஐரோப்பா. லண்டன் தொடங்கி கிளாஸ்கோ வரை ஐரோப்பா முழுக்க பல நாடுகளில் நடந்துவரும் 2020 யூரோ கோப்பைப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்தப் பரபரப்பு ஒரு பக்கம் இருக்க, அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் பெண்கள் யூரோ கோப்பைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஆண்கள் யூரோ கோப்பையின் ஹீரோ கிறிஸ்டியானோ ரொனால்டோ என்றால், பெண்கள் யூரோ தொடரின் நாயகி நாதியா நதீம்.

பெண்கள் கால்பந்தில் டென்மார்க் அணியின் சூப்பர் ஸ்டார் இந்த நாதியா. களத்தில் இவர் இருந்தாலே பொறி பறக்கும். விறுவிறு வேகத்தாலும், துல்லியமான பெனால்ட்டி ஷூட்களாலும் இவர் டென்மார்க்குக்குப் பெற்றுத் தந்த வெற்றிகள் பல. 2017-ல் நடைபெற்ற யூரோ கோப்பையில் இறுதிப்போட்டி வரை டென்மார்க் முன்னேற முக்கிய காரணம் நாதியா. இப்போது 2022 யூரோ கோப்பைக்கு டென்மார்க் தகுதிபெற்றிருப்பதற்கும் முக்கியக் காரணம் நாதியா.

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

டென்மார்க்கைப் பெண்கள் கால்பந்தில் மிக முக்கிய இடத்துக்கு உயர்த்தும் நாதியா உண்மையில் டென்மார்க்கைச் சேர்ந்தவர் அல்ல. ஆப்கானிஸ்தானிலிருந்து அடைக்கலம் தேடி வந்த அகதி.

ஆப்கானிஸ்தானின் ஹிராட் நகரில், 1988-ல் பிறந்தவர் நாதியா நதீம். தந்தை ரபானி, ஆப்கான் நாட்டில் ராணுவத் தலைவராகப் பணிபுரிந்தவர். தாய் ஹமீதா முற்போக்கான இஸ்லாமியப் பெண். இவர்களின் ஐந்து பெண் குழந்தைகளில் இரண்டாவது மகள் நாதியா. அன்பும் அமைதியுமாக மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த இவர்களின் வாழ்க்கை தாலிபன் அமைப்பால் சிதறடிக்கப்பட்டது.

நாதியாவிற்கு 10 வயதிருக்கும்போது ராணுவத் தலைவரான அவரின் தந்தையை தாலிபன் அமைப்பு பேச்சுவார்த்தைக்கென அழைத்துச் சென்றது. ஆனால், தந்தை அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை. சில வாரங்களுக்குப் பிறகு எங்கோ பாலைவனத்தில் தந்தை கொல்லப்பட்டதாகச் செய்தி மட்டும் வந்துசேர, அம்மாவும், ஐந்து குழந்தைகளும் என ஆறு பெண்கள் மட்டுமே இருந்த அந்தக் குடும்பம் நிலைகுலைந்து நின்றது.

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட, தன் குழந்தைகளைக் காப்பாற்ற நாட்டை விட்டுத் தப்பிக்க முடிவு செய்தார் ஹமீதா. வீட்டில் இருந்த அனைத்தையும் விற்று, போலி பாஸ்போர்ட்களைத் தயார் செய்த அவர் குழந்தைகளை அழைத்துக்கொண்டு, இங்கிலாந்துக்குப் புறப்பட்டார். இங்கிலாந்தை அவர் தேர்வு செய்யக் காரணம், அங்கே அவரின் தூரத்து உறவினர்கள் இருந்ததுதான்.

நடைப்பயணமாக பாகிஸ்தான், அதன்பின் அங்கிருந்து லாரி, ரயில் எனக் கிடைத்த வாகனத்திலெல்லாம் பயணம் தொடர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயிரோடு இருப்போமா என்று தெரியாமல் அச்சத்துடன் பயணித்த ஆறு பெண்களும் வழிதவறிப்போய் சென்று சேர்ந்தது டென்மார்க் நாட்டில்.

டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் இருந்த அகதிகள் முகாமை அடைந்த நாதியாவின் குடும்பம் 2000ம் ஆண்டு முதல் அங்கேதான் வசித்துவருகிறது. வாழ்க்கையைத் தொலைத்திருப்பது புரிந்தும் புரியாமலும் இருந்த நாதியாவிற்கும், அவர் சகோதரிகளுக்கும் ஒரே ஆறுதலாக இருந்தது, அந்த அகதிகள் முகாமை அடுத்திருந்த கால்பந்து மைதானம் மட்டும்தான்.

பெண்கள் வெளியே வருவதைக்கூட ஏற்றுக்கொள்ளாமல் தண்டிக்கும் ஒரு நாட்டிலிருந்து வந்த நாதியாவுக்கு, அந்த மைதானத்தில் காலை முதல் மாலை வரை பெண்கள் சுதந்திரமாக விளையாடிக்கொண்டிருந்தது ஆச்சர்யம் அளித்திருக்கிறது. அந்தப் பெண்களுக்கு தினமும் பயிற்சியளிக்கும் பயிற்சியாளரைப் பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறார் 13 வயதுச் சிறுமி நாதியா. அவரிடம் பேச வேண்டும் என மனம் துடித்திருக்கிறது. ஆனால், பேசினால் பிரச்னையாகிவிடுமோ என பயம். `‘பேசித்தான் பார்ப்போமே என தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கோச்சை நெருங்கினேன். என்ன பேசுவது, எப்படிப் பேச்சைத் தொடங்குவது என ஒன்றும் தெரியவில்லை. சட்டென ‘எனக்கும் இதேபோல பயிற்சி அளிப்பீர்களா?’ என்று மட்டும்தான் கேட்டேன். எனது முகம், எனது உருவம், எனது குரல் என ஏதோ ஒன்று அவரை அசைத்திருக்க வேண்டும். ‘Why NOT’ என அந்தப் பயிற்சியாளர் அன்புடன் புன்னகைத்த அந்தத் தருணத்திலிருந்து என் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டது” என்கிறார் நாதியா.

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

பழைய காலணிகள், பழைய உடைகள் என நாதியாவுக்குக் கிடைத்தவை எல்லாமே யாரோ பயன்படுத்தித் தூக்கிப் போட்டவைதான். கால் சைஸுக்கு ஏற்ற ஷூக்கள் கிடையாது, தொளதொள ஆடைகள். ஆனால், அதெல்லாம் நாதியாவுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பயிற்சியாளர் மைதானத்துக்கு வருவதற்கு முன்பே தினமும் தயாராக நின்றிருக்கிறார் நாதியா.

நல்ல உயரமும், உறுதியான தேகமும் நாதியாவிற்குக் கைகொடுக்க, தினமும் பல மணி நேரம் மைதானத்தில் மட்டும்தான் வாழ்க்கை. அவரது வேகமும் அர்ப்பணிப்பும், விடாமுயற்சியும் மன உறுதியும் வெகுவிரைவாகவே அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவரை உயர்த்தின. 18 வயது முதல் டென்மார்க்கின் உள்நாட்டு விளையாட்டுகள் அனைத்திலும் பங்குபெற்ற போதிலும், குடியுரிமை இல்லாத காரணத்தால் சர்வதேசப் போட்டிகளில் நாதியா பங்குபெற முடியாமல் போனது.

21 வயதில் ஃபிஃபா அனுமதி கிடைத்தது. டென்மார்க்கிற்காகக் களமிறங்கிய முதல் போட்டியிலிருந்தே கோல் மழை பொழிய ஆரம்பித்துவிட்டார் நாதியா. 18 வயது முதல் பிஎஸ்ஜி, மான்செஸ்டர், டென்மார்க் உட்பட பல்வேறு அணிகளுக்காக விளையாடிவரும் நாதியா இதுவரை 290 கோல்கள் அடித்திருக்கிறார்.

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

2017 யூரோ கோப்பைப் போட்டியில் பலம்வாய்ந்த ஜெர்மனி அணிக்கு எதிராக நாதியா அடித்த கோல்தான் அவரை உலகம் முழுக்கப் பிரபலப்படுத்தியது. இப்போது டென்மார்க்கில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கிறார் நாதியா. ஆனால், இங்கேதான் ஒரு வித்தியாசம் இருக்கிறது. மற்ற வீரர்களைப்போல அல்ல நாதியா.

கிளப்புகளுக்காக விளையாடுவதில் வரும் வருமானத்தை அப்படியே தன்னைப்போல முகாம்களில் வசிக்கும் குழந்தைகளின் நலனுக்காகச் செலவிட்டுக்கொண்டிருக்கிறார். அடிக்கடி அகதிகள் முகாம்களுக்குப் போய் சூடான், காங்கோ, சோமாலியா நாடுகளிலிருந்து வந்திருக்கும் பெண்களுக்கு தொடர்ந்து தன் வாழ்க்கைக்கதையைச் சொல்லி ஊக்கப்படுத்துகிறார், சாதிக்கத் தூண்டுகிறார்.

தற்போது 33 வயதில் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும் நாதியாவின் கனவு, சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வெல்வது, யூரோ கோப்பையை டென்மார்க்கிற்குப் பெற்றுத்தருவது!

நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!
நாதியாவின் வெற்றி... நாடற்றவர்களின் வெற்றி!

நாதியா, டென்மார்க்கின் ஆர்ஹஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தவர். ஆறு ஆண்டுகள் மருத்துவக்கல்வி பயின்ற திறமையான டாக்டர். உடல் உறுப்புகள் சீரமைப்பு சிகிச்சையில் மேற்படிப்பு படிப்பதுதான் நாதியாவின் அடுத்தகட்டத் திட்டம். ‘`கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றபின், போர், விபத்து மற்றும் பேரிடர்களில் ஏற்படும் உடல் பாதிப்புகளைச் சீரமைக்கும் மருத்துவராக வாழ்நாள் முழுவதும் பணிபுரியப் போகிறேன்’’ என்கிறார் நாதியா.

“உங்களைப் போன்ற பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?” என்று பலமுறை நாதியாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. எப்போதும் அவர் சொல்லும் பதில் ஒன்றுதான். “எந்த நிலை வந்தாலும், ‘வாழ்வதற்கு இனி ஒன்றுமே இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது’ என உலகம் உங்களை இடித்துக் கீழே தள்ளினாலும் எழுந்து நில்லுங்கள். அனைத்தும் சாத்தியம் என்று நம்புங்கள். நான் நம்பினேன்… என் கனவுகள் அனைத்தும் நிறைவேறின.” எப்போதும் புன்னகையை ஆபரணமாக அணிந்திருக்கும் இந்த இனிய அகதி, கால்பந்து அரசி!