கன்னட நடிகர் சேத்தன் குமார் சினிமா நடிகராக மக்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், சமூகத்திற்காக பல இடங்களில் குரல் கொடுத்து வருகிறார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படுவது , தலித் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகள் படிக்க ஏற்பாடு செய்வது, LGBTQ மக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை முன்வைப்பது, அங்கன்வாடி பணியாளர்களின் சம்பளத்தை உயர்த்திக் கொடுக்கும்படி அரசாங்கத்திடம் முறையிடுவது, என சமூக நலன் சார்ந்த பல விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியில் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என நடிகர் சேத்தன் குமார் தெரிவித்திருக்கிறார்.

“இந்திய கிரிக்கெட் அணியில் 70% பேர் உயர் வகுப்பினரைச் சேர்ந்தவர்கள்தான். எஸ்.சி , எஸ்.டி போன்ற பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு அணியில் இடஒதுக்கீடு வேண்டும். கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு கொண்டுவந்தால் அணியின் செயல்திறன் மேம்படும்.
தென் ஆப்பிரிக்க அணியை உதாரணமாக எடுத்துக்கொண்டால் 2016-ம் ஆண்டு முதல் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் எந்த அளவுக்கு பணப்புழக்கம் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்திய அணி சிறப்பாக செய்லபட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு அவசியம்" என்று அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், சாதியை விளையாட்டில் ஏன் கொண்டு வர முயற்சிக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். சேத்தன் குமாரின் கருத்து குறித்த உங்களின் பார்வையை கமென்ட்டில் பதிவிடவும்.