Published:Updated:

`தூரம் நிறைய இருக்கு; நடக்கும்னு நம்புறேன்!' - ஓய்விலிருந்து திரும்புவது குறித்து டிவில்லியர்ஸ்

``ஐபிஎல் வேறு வரவிருப்பதால் டி20 ஆட்டத்தில் என்னை நிரூபிக்க வேண்டி கட்டாயத்தில் உள்ளேன். இவை எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறேன் என டிவில்லியர்ஸ் கூறியுள்ளார்.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

உலக கோப்பை டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடக்கவுள்ளது. இதையொட்டி தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிக்குத் திரும்ப விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேசப் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் டிவில்லியர்ஸ். அதன்பின்னர் உலக அளவில் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வரும் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் தொடரில் முதல்முறையாகக் களமிறங்கியிருக்கிறார். பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக அறிமுகப் போட்டியில் 32 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அசத்தினார்.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிவில்லியர்ஸ்``தற்போது தென்னாப்பிரிக்கா அணியில் நிலவி வரும் சூழலைப் பார்த்தால் டி20 உலக கோப்பையில் விளையாட ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இது உண்மையாவதற்கு முன் நிறைய விஷயங்கள் நடைபெற வேண்டும். தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாட மிகவும் விருப்பமாக உள்ளது. இதற்காக அணியின் பயிற்சியாளர் பவுச்சருடனும், அணியின் இயக்குநர் கிரீம் ஸ்மித் மற்றும் கேப்டன் டூ பிளசிஸ் ஆகியோருடன் பேசியிருக்கிறேன்.

நாங்கள் அனைவரும் இதை சாத்தியமாக்கவே விரும்புகிறோம். இதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியதுள்ளது. விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்கிறது. அந்தச் சமயத்தில், நான் ஃபார்மில் இருக்க வேண்டும். இவை எல்லாம் சரியாக நடக்கும் என நம்புகிறேன். ஆனால், உறுதியாக எதையும் கூற முடியாது. எனவே, என்னையும் மற்றவர்களையும் மீண்டும் ஏமாற்ற விரும்பவில்லை. இப்போது வரை என்னால் முடிந்தளவு கிரிக்கெட் ஆடி வருகிறேன். இந்தாண்டின் கடைசியில் என்ன நடக்கவிருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்" என்றார்.

Vikatan

இதற்கு முன்னரே கடந்த ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போதே சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்ப டிவில்லியர்ஸ் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்க அணி நிர்வாகம் இதை ஏற்கவில்லை. தற்போது தென்னாப்பிரிக்க அணியின் நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், இது சாத்தியமாகும் என்று நம்பப்படுகிறது. டி20 ஆட்டத்தில் பல சாதனைகளுக்குச் சொந்தகாரரான டிவில்லியர்ஸ் தென்னாப்பிரிக்க அணிக்குத் திரும்புவது என்பது கூடுதல் பலமளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்.

டிவில்லியர்ஸ்
டிவில்லியர்ஸ்

டிவில்லியர்ஸ் அணிக்குத் திரும்புவது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூப்ளிசிஸ் ஏற்கெனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும், டிவிலியர்ஸின் வருகை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்தும் அவர் பேசியிருந்தார்.

Vikatan