Published:Updated:

`கபில் பாஜி ஜெயிச்சபோதும் இருந்தேன்; இப்பவும் இருக்கேன்!' - கோலியை வாழ்த்திய சாருலதா பாட்டி!

சாருலதா பாட்டி
சாருலதா பாட்டி ( twitter )

வீல் சேரில் வந்திருந்தாலும், இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும் கையில் இந்திய கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டினார் சாருலதா பாட்டி...

உலகக்கோப்பைத் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டிக்கு நிகராக கவனம் பெற்றுள்ளார் போட்டியை காணச் சென்ற 87 வயது மூதாட்டி ஒருவர். சாருலதா படேல் என்னும் அந்த மூதாட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகை. இதனால் இங்கிலாந்தின் எட்க்பாஸ்டனில் நேற்று நடந்த இந்திய - வங்கதேச ஆட்டத்தை காணச் சென்றுள்ளார்.

சாருலதா படேல்
சாருலதா படேல்
twitter

வீல் சேரில் வந்திருந்தாலும், இந்திய அணி ஒவ்வொரு ரன் அடிக்கும் போதும், விக்கெட் எடுக்கும்போதும் கையில் இந்தியக் கொடியுடனும், தனது ட்ரம்பெட்டை ஊதிக்கொண்டு இந்தியாவின் ஆட்டத்தைக் கொண்டாடி கொண்டிருந்தபோது கேமராவின் கண்ணில்பட சிறிதுநேரத்திலேயே வைரலாகினார் சாருலதா பாட்டி. சோஷியல் மீடியாவில் அவர் புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டது. இதற்கிடையே போட்டி முடிந்த பிறகு இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாருலதா பாட்டியைச் சந்தித்து அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவரிடம் ஆசியும் வாங்கினார். இதேபோல் ரோஹித் ஷர்மாவும் அவரிடம் ஆசி வாங்கினார்.

சிறிது நேரத்தில் சாருலதா பாட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்ட கோலி, ``போட்டிக்கு ஆதரவு அளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சாருலதா படேல் ஜி -க்கு. அவருக்கு 87 வயது. நான் பார்த்த மிக ஆர்வமுள்ள மற்றும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களில் ஒருவர் சாருலதா பாட்டி. வயது வெறும் எண் மட்டுமே. ஆர்வ-ம்தான் உங்களை எந்த எல்லையையும் தாண்டிச் செல்ல வைக்கும். சாருலதா பாட்டியின் ஆசியுடன் அடுத்த போட்டிக்கு முன்னேயுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

கோலி
கோலி
twitter

இதற்கிடையே உலகக்கோப்பை குறித்து ANIக்கு பேசியுள்ள சாருலதா பாட்டி, ``1983-ம் ஆண்டில் கபில்தேவ் உலகக் கோப்பையை வென்றபோது, நானும் அங்கே இருந்தேன். அதனால் இந்த முறையும் இந்தியா கோப்பை வெல்லும். இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்துக்கு விளையாட வரும்போதெல்லாம், நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வேன். கடவுள் கணபதி மீது பெரிய நம்பிக்கை கொண்டவள் நான். இந்தியா வெல்லும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. வீரர்களை நான் ஆசீர்வதிப்பேன்" எனக் கூறியுள்ளார்.

சாருலதா பாட்டிக்கு அடித்த லக்!

போட்டி நடந்துகொண்டிருக்கும்போதே சாருலதா பாட்டி வலைதளங்களில் டிரெண்ட் ஆக, இதைப் பார்த்த மஹிந்திரா குரூப் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா, ``நான் பொதுவாக கிரிக்கெட் பார்பதில்லை; ஆனால், இந்தப் பாட்டியைப் பார்ப்பதற்காக நான் இப்போது பார்க்கப்போகிறேன். இந்தப் பாட்டி மேட்ச் வின்னர் போல் இருக்கிறார்'' எனக் கூறியதுடன் போட்டியைப் பார்த்த பிறகு, ``சபாஷ் இந்தியா. இந்த வெற்றிகரமான பாட்டியை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்... அவருக்கு இலவச டிக்கெட் கொடுங்கள்!" எனப் பதிவிட்டார்.

சாருலதா பாட்டி
சாருலதா பாட்டி
twitter

இந்தப் பதிவில், ``நீங்கள் ஏன் பாட்டிக்கு ஸ்பான்சர் செய்யக் கூடாது?" எனக் கேள்வி கேட்க, உடனடியாக பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, ``அவர் யார் என்று கண்டுபிடியுங்கள். மீதமுள்ள இந்திய போட்டிகளைக் காண ஆகும் செலவுகளை நான் கவனித்துக்கொள்கிறேன்" என உறுதியளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு