FA பக்கங்கள்
Published:Updated:

தன்னம்பிக்கை யுவி !

பூ.கொ.சரவணன் சு.குமரேசன்

##~##

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிகள் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு வந்திருக்கிறார், யுவராஜ் சிங்.

சிறு வயதில் ஸ்கேட்டிங் என்றால், யுவிக்கு அவ்வளவு ஆசையாம். அதில் பதக்கம் வென்று, அப்பாவிடம் ஆசையாகக் காண்பித்தார். அதைத் தூக்கி வீசிய அப்பா, 'நீ கிரிக்கெட் மட்டும்தான் ஆட வேண்டும்!' என்றார். அப்போது, சிறுவன் யுவிக்கு வருத்தமாக இருந்தது. ஆனால், கிரிக்கெட் விளையாட ஆரம்பித்ததும், அதில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

'யுவராஜ் ஃபார்மில் இல்லை’ என்று சொல்லப்பட்ட சமயத்தில், 2011-ல் நடந்த  உலகக் கோப்பை போட்டியில் சேர்க்கப்பட்டார். சச்சினும் டோனியும் தோள்மேல் கைபோட்டு, 'உன்னால் முடியும் யுவராஜ்’ என்றார்கள். சொன்னபடியே உலகக் கோப்பை போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கால் இறுதியில்    57 ரன்கள் அடித்து, அணியை ஜெயிக்கவைத்தார். உலகக் கோப்பை இறுதிப் போட்டியிலும் முக்கியமான கட்டத்தில் விக்கெட் எடுத்த யுவராஜ், நான்கு முறை 'ஆட்ட நாயகன்’ விருதுகளையும் 'தொடர் நாயகன்’ விருதையும் வென்றார்.

தன்னம்பிக்கை யுவி !

அந்தச் சமயத்தில்தான் அவருக்கு நுரையீரலில் கேன்சர் இருப்பது தெரியவந்தது. 'நாள் கடந்திருந்தால், தீவிரமான விளைவு ஏற்பட்டிருக்கும்’ என்று மருத்துவர்கள் சொன்னார்கள். இந்திய அணியின் மற்ற வீரர்கள் அவரைத் தேற்றினார்கள். முறையான சிகிச்சையும் யுவியின் மன வலிமையும் அவரை மீண்டும் கிரிக்கெட் உலகுக்கு அழைத்துவந்திருக்கிறது.

''எனக்கு ஏன் இப்படி நடந்தது என்று நான் இறைவனிடம் புலம்பவில்லை. 'இதுதான் எனக்கான பாதை, இதை நான் கடப்பேன்’ என்று எனக்கு நானே முடிவு செய்துகொண்டேன்' என்று சொன்னார் யுவி.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளுக்குத் தேர்வான யுவராஜ், அந்த அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டி20 போட்டியில் தன் திறமையை நிரூபித்துள்ளார். 201 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி, விரைவிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது ஆட்டக்காரராக களம் இறங்கிய யுவராஜ், 35 பந்துகளில் 75 ரன்கள் குவித்து, அணியை வெற்றி பெறவைத்தார். ஆட்ட நாயகன் விருதையும் வென்று, தன்னம்பிக்கை நாயகனாக ஜொலித்தார்.