ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர் - வீராங்கனைகளுக்கு பிரேசில் செல்ல எகனாமி கிளாசும், மேலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டும் வழங்கப்பட்டதாக தடகள வீராங்கனை டூட்டி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்கத் தகுதி பெற்றிருக்கும் ஒரே வீராங்கனை டூட்டி சந்த். 1980ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு, 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள ஒரே இந்திய வீராங்கனை டுட்டி சந்த். கடந்த இரு வருடங்களுக்கு முன், இவரது உடலில் ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருப்பதாகக் கூறி, போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது இந்திய தடகளச் சங்கம் .
சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டுத் தீர்ப்பாயத்தில் முறையிட்டு வெற்றி பெற்றார் டூட்டி சந்த். பின்னர் கடுமையான பயிற்சிக்குப் பின், ஒலிம்பிக்கில் பங்கேற்கவும் தகுதி பெற்றிருந்தார். இந்த நிலையில், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர் -வீராங்கனைகளை ஒலிம்பிக் சங்கம் கவுரவமாக நடத்தவில்லை என டூட்டி சந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது குறித்து டூட்டி சந்த் கூறுகையில், '' ஹைதராபாத்தில் இருந்து நான் தனியாகத்தான் ரியோடி ஜெனிரோ வந்தேன். எனது பயிற்சியாளர் என்னுடன் வரவில்லை. மேலாளர்கள், பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. என்னுடன் சேர்த்து ஏராளமான வீரர் - வீராங்கனைகளுக்கு எகனாமி கிளாஸ் டிக்கெட்டுகளே வழங்கப்பட்டன. சுமார் 36 மணி நேரம் பயணம். என்னால் சரியாக உறங்கக் கூட முடியவில்லை. வீரர் வீராங்கனைகளை இப்படி நடத்தினால் ஒலிம்பிக்கில் எப்படி வெற்றி பெற முடியும்?
நாட்டுக்காக விளையாடுபவர்களுக்கு எகனாமி கிளாஸ் கொடுத்து விட்டு, பயிற்சியாளர்களுக்கு பிசினஸ் கிளாஸ் கொடுப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.அடுத்த ஒலிம்பிக் போட்டியிலாவது இது போன்றத் தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் '' என்றார்.
ஒடிசாவை சேர்ந்த 20 வயது டூட்டி சந்த், ஆகஸ்ட் 19ம் தேதி, ரியோ ஒலிம்பிக்கில் களம் காண்கிறார்.