சந்தோஷ் குமார் ஜெ.வேங்கடராஜ்
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...
##~## |
ஜாலியான விளையாட்டு ஒன்றை விளையாடலாமா? நீங்களும் உங்க பெஸ்ட் ஃப்ரெண்டும் ஒரே மாதிரி ரசனை உள்ளவர்களா என்பதை இந்த விளையாட்டு சொல்லிவிடும்.
இந்த விளையாட்டின் பெயர், 'கம்பாடபிலிட்டி’ (Compatability). கம்பாடபிலிட்டி என்றால், 'பொருத்தம்’ என்று அர்த்தம். இதை விளையாட 12 வயது ஆகியிருக்க வேண்டும். இதை நான்கு முதல் 12 பேர் வரை விளையாடலாம்.
இந்த கேம் கிட்டில் என்னவெல்லாம் இருக்கும் என முதலில் பார்த்துவிடுவோமா?
சின்ன அட்டைப் பெட்டியில் 'வெளிப்படுத்தும் தன்மை’ (Expression) எனப்படும் 50 அட்டைகள் இருக்கும். இந்த அட்டையில் பலதரப்பட்ட படங்கள் இருக்கும். உதாரணமாக... மீன், ஊஞ்சல், பாம்பு. இதேபோல ஆறு பெட்டிகள் இருக்கும். (50x6 = 300 அட்டைகள்) ஆறு பெட்டிகளும் மஞ்சள், சிவப்பு, பச்சை என வெவ்வேறு நிறங்களில் இருக்கும். அதே ஆறு நிறங்களில் ஆட்டக் காய்களும் இருக்கும். இன்னொரு பெரிய பெட்டியில் 100 தலைப்பு அட்டைகள் இருக்கும். இதில் கடல், வீடு, லாலிபாப் போன்ற தலைப்புகள் இருக்கும்.

இந்த விளையாட்டை அருண், சூர்யா, ஸ்வேதா, ப்ரியா நான்கு பேரும் விளையாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலில் ஆளுக்கோர் ஆட்டக் காயை தேர்ந்தெடுத்துக்கொண்டு, அதே நிறத்தில் இருக்கும் வெளிப்படுத்தும்தன்மை அட்டைப் பெட்டியையும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஓர் அணிக்கு இரண்டு பேர் என்று பிரித்துகொள்ள வேண்டும். அருணும் ப்ரியாவும் ஓர் அணி. சூர்யாவும், ஸ்வேதாவும் ஓர் அணி.
முதலில் ஒன்றிலிருந்து ஆறு வரையில் இருக்கும் எண்களில் ஓர் எண்ணை அருண் சொல்ல வேண்டும். அருண் 'இரண்டு’ என்று சொல்கிறான் என்று வைத்துகொள்வோம். தலைப்பு அட்டையிலிருந்து ஓர் அட்டையை எடுத்து, எல்லோரிடமும் காட்ட வேண்டும். உதாரணமாக, 'கடல்’. பிறகு வெளிப்படுத்தும்தன்மை அட்டையிலிருந்து தன் தலைப்புக்குப் பொருத்தமான இரண்டு படங்களை எடுத்து, மற்றவர்கள் பார்க்காதவாறு வரிசையாக திருப்பி வைக்க வேண்டும்.
மற்றவர்கள் தன்னிடமிருக்கும் வெளிப்படுத்தும்தன்மை அட்டையிலிருந்து அருண் தேர்ந்தெடுத்த தலைப்புக்குப் பொருத்தமான இரண்டு அட்டைகளை எடுக்க வேண்டும்.

இறுதியாக அருண் எடுத்த அட்டைகளான மீன், கப்பல் படங்களை அருண் அணியிலிருக்கும் ப்ரியாவும் வரிசை மாறாமல் எடுத்திருந்தால், மூன்று மதிப்பெண்கள். அதே அட்டைகளை வரிசை மாறி எடுத்திருந்தால், இரண்டு மதிப்பெண்கள். ஓர் அட்டை மட்டும் பொருந்தினால், ஒரு மதிப்பெண். எதுவுமே பொருந்தவில்லை என்றால், மதிப்பெண் கிடையாது. மற்ற அணிக்கு இந்த மதிப்பெண் உண்டு.
இந்த மதிப்பெண் அடிப்படையில் பாம்புபோல வளைந்து செல்லும் அட்டைப் பலகையில் முன்னேறிச் சென்று, யார் முதலில் சிவப்பு வட்டத்துக்குச் செல்கிறார்களோ, அந்த அணியே வெற்றிபெற்றவர்கள்.
இந்த விளையாட்டை அணியாகப் பிரிக்காமல், ஓரு நடுவரை வைத்துக்கொண்டு தனித்தனியாகவும் விளையாடலாம். நடுவரின் அட்டைகளோடு பொருந்திப்போவோருக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கலாம்.
அடுத்த இதழில் மற்றொரு விளையாட்டுடன் சந்திப்போம்.
