Published:Updated:

ரஹானேவின் சதத்தை ஓரங்கட்டிய டெல்லியின் மூவர் கூட்டணி! #RRvsDC

ரஹானேவின் சதத்தை ஓரங்கட்டிய டெல்லியின் மூவர் கூட்டணி! #RRvsDC
ரஹானேவின் சதத்தை ஓரங்கட்டிய டெல்லியின் மூவர் கூட்டணி! #RRvsDC

``ஹோம் கிரவுண்டுதான் அலர்ஜி, மத்தபடி நாங்க ஸ்ட்ராங். ப்ளே ஆஃப் போட்டியில நாங்களும் இருக்கோம்" எனச் சொல்லி அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ். #RRvsDC

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில், 192 ரன்களை சேஸ் செய்ய டெல்லி கேப்பிடல்ஸின் பேட்ஸ்மேன்கள் பங்குபோட்டுக் கொண்டு ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தவானின் 54 ரன்கள் சேஸிஸ்கிற்கு பலம் சேர்க்க, ப்ரித்வி ஷா - ரிஷப் பன்ட் இணை 84 ரன்கள் குவித்து டெல்லி கேப்பிடல்ஸின் வெற்றிக்கு வழி வகுத்தது. கடைசி ஐந்து போட்டிகளில், நான்கில் வெற்றி பெற்றுள்ள டெல்லி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. ``ஹோம் கிரவுண்டுதான் அலர்ஜி, மத்தபடி நாங்க ஸ்ட்ராங். ப்ளே ஆஃப் போட்டியில நாங்களும் இருக்கோம்" எனச் சொல்லி அடித்தது டெல்லி கேப்பிடல்ஸ். #RRvsDC

ஒரு போட்டியில் வெற்றி, அடுத்த போட்டியில் தோல்வி என வெற்றி, தோல்விகளை மாறிமாறிப் பார்த்து வந்த ராஜஸ்தான் அணி, கேப்டனை மாற்றியது. ரஹானேவுக்குப் பதிலாக ஸ்மித் கேப்டன் பொறுப்பேற்றபின்பும் வெற்றி, தோல்வி மாறிமாறி வருவதைத் தவிர்க்க முடியவில்லை. முந்தைய போட்டியில் வெற்றிபெற்ற ராசிப்படி, நேற்று தோல்வியடைந்தது. #RRvsDC

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு பந்தைக்கூட எதிர்கொள்ளவில்லை, ஆரம்பத்திலேயே ரன் அவுட். சாம்சன் வெளியேற, ஸ்மித் ஒன் டவுன் இறங்கினார். ரஹானே 16 ரன்கள் எடுத்திருந்தபோது, கேட்சை மிஸ் செய்தார் இஷாந்த் ஷர்மா. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு அதிரடியில் இறங்கினார். 11 பௌண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய ரஹானே சதமடிக்க, மற்றொருபுறம் ஸ்மித் அரைசதம் கடந்தார். ரஹானே - ஸ்மித் அதிரடியால், 13 ஓவர்களிலேயே ராஜஸ்தானின் ஸ்கோர் 135 ரன்களைத் தொட்டது. அரை சதம் கடந்த வேகத்தில் அக்சர் படேல் பந்துவீச்சில் ஸ்மித் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் 8 ரன்களுக்கு வெளியேற, ஆஷ்டன் டர்னரின் டக்-அவுட் பரிதாபங்கள் தொடர்ந்தன. தொடர்ந்து மூன்றாவது முறையாக டக் அவுட்டாகியுள்ள டர்னருக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சிரமமே. 20 ஓவர்கள் முடிவில், 191 ரன்கள் குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

சேஸிங்கை தொடங்கிய டெல்லி அணிக்கு, தவான் - ப்ரித்வி ஷா இணை நிலையான தொடக்கத்தை கொடுத்தது. ஃபார்மில் இருக்கும் தவான், சேஸிங் அதிரடியைத் தொடங்கி வைத்தார். 25 பந்துகளில் அரை சதம் எடுத்து தவான் விளையாடிக்கொண்டிருக்க, மறுபுறம் ப்ரித்வி ஷா நிதானமான ஆட்டத்தை ஆடினார். விக்கெட் இழப்பின்றி, 7 ஓவரில், 72 ரன்கள் எடுத்திருந்தது டெல்லி கேப்பிடல்ஸ். டெல்லியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் செட்டிலாகி விளையாடிக்கொண்டிருந்ததை உடைக்க ராஜஸ்தான் போராடியது. டாப் ஆர்டரை காலி செய்தால் மட்டுமே, போட்டி ராயல்ஸ் பக்கம் சாயும் என்பதால், ராஜஸ்தான் அணிக்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. முதல் விக்கெட் விழுந்தது ஸ்ரேயாஸ் கோபாலின் பந்துவீச்சில். கூக்ளியை நம்பிய கோபாலுக்கு பலன். தவான் அவுட். அடுத்த ஓவரிலேயே, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் வெளியேற, டெல்லியின் சேஸிங் வேகத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடப்பட்டது. 

இரண்டு ஓவர்களுக்கு கட்டுக்குள் இருந்த ரன் ரேட், பராக் வீசிய 11-வது ஓவரில் சூடுபிடித்தது. டெல்லி அணி வெற்றிபெற 54 பந்துகளில் 99 ரன்கள் தேவை. இக்கட்டான சூழ்நிலையில் களமிறங்கினாலும் ``நான் வந்துட்டேனு சொல்லு, தவான் தொடங்கி வச்சத இந்த பன்ட் முடிக்கப்போறான்" எனச் சொல்லாமல் சொல்லி அடித்தார் பன்ட். டெல்லி கேப்பிடல்ஸின் கடைசி மூன்று போட்டிகளிலும் பெரிதாக ஸ்கோர் செய்யாத பன்ட், ``இந்தப் போட்டியை நான்தான் முடிச்சு வைக்கணும்" என்று முடிவெடுத்து விளையாடினார். `26 பந்துகளில் அரைசதம். பன்ட் ஃபார்மில் இருக்கார், வெற்றி நிச்சயம்’ என அப்போதே டெல்லி ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். கடைசி ஓவருக்கு, 6 ரன்கள் தேவை. ஆர்ச்சர் வீசிய இரண்டாவது பந்தில் சிக்ஸர் விளாசிய பன்ட், டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார்.

ஒவ்வொரு முறை டெல்லி கேப்பிடல்ஸ் ஜெயிக்கும்போதும், Dug out-ல் இருக்கும் கங்குலி, பான்டிங்கின் உற்சாகத்துக்கு அளவே இருக்காது. நேற்றைய போட்டியிலும் அப்படித்தான், 6 பௌண்டரிகள், 4 சிக்சர், ஸ்ட்ரைக் ரேட் 216.66 கொண்ட ரிஷப் பன்டை கொண்டாடாமல் எப்படி? போட்டி முடிந்தபின் மைதானத்தில் இருந்த கங்குலி, பன்டை தூக்கி வைத்து வாழ்த்தினார். ``இதைவிட வேறு என்ன வேண்டும். மேன் ஆஃப் தி மேட்ச் வாங்கியதைவிட கங்குலி என்னைத் தூக்கி வாழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. சேஸிங்கின்போது தவான் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தது, டெத் ஓவர்களில் நெருக்கடியைக் குறைத்தது. அணியின் வெற்றிக்காக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார் பன்ட். ஐபிஎல் தொடரின் முக்கியமான கட்டத்தில், பேட்டிங், பௌலிங் என எல்லாமே க்ளிக்காகி இருப்பது டெல்லிக்கு பிளஸ். சரியான டஃப் கொடுக்கக் காத்திருக்கிறது டெல்லி கேப்பிடல்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு