சினிமா
தொடர்கள்
Published:Updated:

சபாஷ் ஷமி!

சபாஷ் ஷமி!
பிரீமியம் ஸ்டோரி
News
சபாஷ் ஷமி!

சபாஷ் ஷமி!

வெற்றிகரமாகப் பயணித்துவந்த இந்திய அணிக்கு  முதல் தோல்வியைப் பரிசளித்து விட்டது இங்கிலாந்து. கடந்த வாரம் இந்தியாவுக்கு பயம் காட்டிய ஆப்கானிஸ்தான், இந்த முறை பாகிஸ்தானுடன் பூச்சாண்டி ஆடிவிட்டது. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் வெளியேறிவிட, மற்ற போட்டிகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன பாகிஸ்தான், வங்கதேச அணிகள். இந்தப் போட்டிகளின் முடிவுகள் ஒருபக்கம் பரபரப்பைக் கிளப்ப, சச்சின் - தோனி சர்ச்சையில் சல்லடையாகிக் கொண்டி ருக்கின்றன சமூக வலைதளங்கள்.

சபாஷ் ஷமி!

“ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தோனி - ஜாதவ் இருவரும் ஆடிய விதம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களிடம் அப்படி யொரு ஆட்டத்தை நான் எதிர்பார்க்கவேயில்லை’’ என்றுதான் சொன்னார் சச்சின். உடனே, ‘சச்சினுக்குக் கிரிக்கெட் தெரியுமா’, ‘சச்சினுக்கு உலகக் கோப்பை வாங்கிக்கொடுத்ததே தோனி தான். கொஞ்சம்கூட அவருக்கு நன்றியில்லை’ என்ற அளவுக்குப் பொங்கித் தள்ளிவிட்டனர் தோனி ரசிகர்கள். தோனி ஆடியதில் தவறே இல்லையென்றாலும், சச்சின் போன்ற ஒரு ஜாம்பவானை வகை தொகை இல்லாமல் வசைபாடுவது நல்லதல்ல.

இப்படி  நம் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அடித்துக்கொண்டிருக்க, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் ரசிகர்கள் நேரடியாகக் கோதாவிலேயே இறங்கிவிட்டனர். அந்தப் போட்டிக்கு முன்பு, “பாகிஸ்தான் அணியைவிட இப்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டின் நிலை சிறப்பாக இருக்கிறது” என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சங்க சி.இ.ஓ அசாதுல்லா கான் சொல்ல, கடும் புகைச்சலுக்கு மத்தியில்தான் அந்தப் போட்டி தொடங்கியது.

சபாஷ் ஷமி!

அவர் சொன்னதற்கு ஏற்ப, ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றியை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. கடைசி 5 ஓவர்களில் எல்லாம் மாறிவிட, கடைசி ஓவரில் இலக்கை சேஸ் செய்தது பாகிஸ்தான். கடைசி நிமிடம் வரை பரபரப்பு குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த இரு நாட்டு ரசிகர்களும் குக்கர் விசில்போல் சூட்டோடு கிளம்பினர்.  கேலரியில் அடித்துக்கொண்டே மைதானம் வரை நுழைய, மைதானத்துக்கு வெளியில் இருந்த இரு நாட்டு ரசிகர்களுமே கைகலப்பில் ஈடுபட்டனர். ‘நாங்ககூட இவ்ளோ உக்கிரமா சண்டைபோட்டதில்லடா’ என்று இந்திய ரசிகர்களே அதிர்ச்சியடையுமளவுக்கு இருந்தன அந்தக் காட்சிகள்.

இதற்கெல்லாம் நடுவில்தான், “இங்கிலாந்துப் போட்டியில் எங்களின் ஆதரவு இந்தியாவுக்கு” என்று பேசி அமர்க்களப்படுத்தினார்கள் பாகிஸ்தான் ரசிகர்கள். இங்கிலாந்தின் நாசர் ஹுசைன் `உங்க சப்போர்ட் யாருக்கு?’ என்று ட்விட்டரில்  கேட்ட கேள்விக்கு, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் ‘இந்தியாவுக்குத்தான். என்ன இருந்தாலும் சுதந்திரத்துக்கு ஒண்ணா போராடினவங்கதானே நாங்க!’ என்று பதில் சொல்லியிருந்தது ஹைலைட்! 

சபாஷ் ஷமி!

இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை அணிகளுள் ஒன்றுதான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டதால், இங்கிலாந்தின் தோல்வி அனைத்து ஆசிய அணிகளுக்கும் தேவைப்பட்டது. அதனால், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மூன்று நாட்டு ரசிகர்களும் இந்தியாவுக்கு ஆதரவளித்தனர். ஒட்டுமொத்தத் துணைக்கண்டமும் இந்திய அணிக்கு ஆதரவளிக்க, புல்லரித்துப்போனார்கள் உலக கிரிக்கெட் ரசிகர்கள்! ஆனால் எல்லாருக்கும் `பெப்பே’ காட்டி, இங்கிலாந்துக்கு வெற்றியைப் பரிசளித்தது இந்திய அணி.

ஸ்டார் பர்ஃபாமர்

இந்திய ரசிகர்களெல்லாம் கோலி, ரோஹித் என இருவரைப் பற்றியுமே பேசிக்கொண்டிருக்க, சத்தமில்லாமல் சாதித்துக்கொண்டிருக்கிறார் முகமது ஷமி. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதன்முதலாகக் களமிறங்கியவர், அந்தப் போட்டியிலேயே ஹாட்ரிக் உட்பட 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராகவும் 4 விக்கெட்டுகள் அள்ளியவர், இங்கிலாந்துக்கு எதிராக அதை ஐந்தாக்கினார். ஆடிய 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகள் வீழ்த்தி மிரட்டிக்கொண்டிருக்கும் ஷமிதான், இப்போது இந்தியாவின் புதிய ஆயுதம்.

-மு.பிரதீப் கிருஷ்ணா