
இந்தக் கால்கள் கடந்தவை அதிகம்!
கத்தார் நாட்டின் தோஹா நகரில் சமீபத்தில் நடந்த 23-வது ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்கான முதல் தங்கத்தை வென்றுகொடுத்த கால்கள், ஒரு குக்கிராமத்திலிருந்து புறப்பட்டவை.

திருச்சி மாவட்டம், மணிகண்டத்தை அடுத்துள்ள முடிகண்டம்தான் இந்தத் தங்க மங்கை கோமதி மாரிமுத்துவின் சொந்த ஊர். கோமதியின் பெற்றோர் மாரிமுத்து, ராஜாத்தி தம்பதிக்கு ஓர் ஆண், மூன்று பெண் குழந்தைகள். கடைக்குட்டிதான் கோமதி. விவசாயக் கூலிவேலை பார்த்துத் தன் நான்கு பிள்ளைகளையும் வளர்த்த மாரிமுத்து, வறுமையுடனான போராட்டத்தில் தன் முதல் இரண்டு மகள்களுக்கும் இளம் வயதிலேயே திருமணம் முடித்தார். கோமதியைப் பன்னிரண்டாம் வகுப்புடன் நிறுத்திவிடலாம் என அவர் நினைத்தபோது, தனது படிப்புக்காக அப்பாவுடன் மல்லுக்கட்டினார் கோமதி. கல்விக்காகத் தன்னிடம் சண்டையிட்ட மகளின் பிடிவாதத்தை மாரிமுத்து புரிந்துகொண்டார். தொடர்கிறார், கோமதியின் அம்மா ராஜாத்தி...

“வயலுக்கு மருந்தடிக்குற வேலைபார்த்த அவருக்குப் புற்றுநோய் வந்து, எங்க குடும்பமே படாதபாடு பட்டோம். இந்தச் சூழ்நிலையில பன்னிரண்டாவது முடிச்சிருந்த கோமதி, `காலேஜுல படிக்கணும்... சேர்த்துவிடுங்க’ன்னு கேட்டு வந்து நின்னுச்சு. நாம இருக்குற நெலமையில இது இப்போ தேவையான்னு நாங்க தயங்கியும், பிடிவாதமா அவங்கப்பாகிட்ட சம்மதம் வாங்கி, காலேஜுல சேர்ந்துச்சு. அங்கேயும் விளையாட்டுல பித்தா கிடந்த எம்பொண்ணுக்கு, திருச்சியில இருக்குற ராஜாமணி சார் உதவியா இருந்தாரு. எங்க ஊருல விளையாட்டு மைதானம் இல்ல. அதனால காலையில 6 மணிக்கு திருச்சிக்கு விளையாடப் போகும். அதுக்கு, எங்க ஊருலேருந்து காலங்காத்தால 3 மணிக்கெல்லாம் கிளம்பணும். புள்ள கெளம்புற நேரம் நான் வீட்டுல நிக்குற பசுமாட்டுல பால் கறந்து காய்ச்சிக் கொடுப்பேன். அந்த ஒரு டம்ளர் பாலைத் தவிர வேற எந்த சத்தான ஆகாரமும் கொடுக்க எங்களுக்குச் சக்தியில்ல.
திருச்சியில படிப்பை முடிச்ச கோமதி, சென்னையில மேல்படிப்பு படிச்சது. அங்க போலீஸா வேலைபார்க்கும் பாப்பாத்தி, கோமதிக்கு ரொம்ப உறுதுணையா இருந்தது. கோமதிக்கு விளையாட்டு கோட்டாவுல போலீஸ்லேயும் வருமானவரித்துறையிலேயும் வேலை கிடைச்சப்போ, விளையாட்டுப் பயிற்சி எடுக்க இதுதான் சரியாயிருக்கும்னு வருமானவரித் துறை வேலையில சேர்ந்துச்சு. வயிறு நிறையுற வாழ்க்கையே போதும்னு நாங்க இருந்தப்ப, ரெண்டு வருஷத்துக்கு முன்னால என் வீட்டுக் காரரு இறந்துபோயிட்டாரு. அந்த அதிர்ச்சியி லேருந்து நாங்க மீளறதுக்குள்ள, சில மாசங்கள்ல கோமதியோட பயிற்சியாளர் காந்தி சாரும் மாரடைப்பால இறந்துபோயிட்டாரு. கோமதி மனசு சுணங்குனதால அதுக்கும் உடம்புக்கு முடியாமப்போயிடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா தன் உடம்பையும் மனசையும் தானே தேத்திக்கிட்டு மீண்டு வந்த என் மகளுக்கு, வைராக்கியம் நிறைய.

போட்டிக்குப் போறதுக்கு மொத வாரம் போன் பண்ணினப்போ, ‘நான் வெளியில போறேன்மா, ஒரு வாரம் கழிச்சுதான் பேச முடியும்’னு சொல்லிட்டுப் போச்சு. அன்னிக்கு, ‘கோமதி தங்கப்பதக்கம் ஜெயிச்சிருக்குன்னு டி.வி-யில காட்டுறாங்க’ன்னு ஒரு பொண்ணு ஓடிவந்து சொல்லுச்சு. ஆனா, எனக்கு டி.வி போடத்தெரியாது. கோமதிகிட்ட போன் பண்ணிக் கேக்கலாம்னா, போன் வந்தாதான் எடுக்கத் தெரியும்... போட்டுப் பேசத் தெரியாது எனக்கு. சரின்னு என் மகளை நெனச்சுக்கிட்டு, வயல் வேலைக்குப் போயிட்டேன். அங்க வேலைக்கு வந்திருந்தவங்க எல்லாரும், ‘கோமதி ஜெயிச்சிடுச்சுன்னு நாங்கெல்லாம் எவ்வளவு பெருமையா எல்லாருக்கும் போன் பண்ணி சொல்லிக்கிட்டிருக்கோம், நீ என்ன டான்னா களவெட்ட வந்திருக்க...’ன்னு என்கூட உரிமையாவும் சந்தோசமாவும் சண்டபோட்டாங்க’’ என்றபோது ராஜாத்தியின் கண்கள் நிறைகின்றன. ‘`எம்பொண்ணு ஜெயிச்சு தங்கப் பதக்கம் வாங்குனது ரொம்ப சந்தோசம்ங்க. இதைப் பார்க்க எங்க சாமி எங்ககூட இல்லையே’’ - ராஜாத்தியிடம் அதற்கு மேல் வார்த்தைகளில்லை.
கோமதியின் அண்ணன் சுப்பிரமணி தொடர்ந்தார். “அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம இருந்தப்போவும் கோமதி கிரவுண்டுக்குப் போயிட்டு வந்துட்டிருக்கும். ‘ஒழுங்கா படிப்பைப் பாரு... இனி நீ விளையாடதே’ன்னு நான் எத்தனையோ தடவை என் தங்கச்சிகிட்ட சண்டைபோட்டி ருக்கேன். ஆனாலும் விளையாட்டுதான் அதுக்கு மூச்சா இருந்தது. பெங்களூருல வேலை கிடைச்சதும், அங்க இருக்குற சாய் பயிற்சி மையத்துல சேர்ந்து பயிற்சி எடுத்துச்சு. 2013-ம் ஆண்டு புனேவில் நடந்த ஆசியப் போட்டியில ஏழாவது இடத்தையும், 2015-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஆசியப் போட்டியில நாலாவது இடத்தையும் கோமதி பிடிச்சப்பவும், நிச்சயம் தங்கம் வாங்குவேன்னு வெறியோடு பயிற்சி செஞ்ச புள்ள, அப்பா இறந்ததும் ரொம்ப உடைஞ்சு போயிடுச்சு. இப்படி வறுமை, தடைகள்னு எல்லாத்தையும் கடந்து, இன்னிக்கு என் தங்கச்சி இந்தியாவுக்கே பெருமை தேடிக்கொடுத்திருக்கு. பஸ்ஸுகூட சரியா வராத இந்தக் குக்கிராமத்துப் பொண்ணு கதைய நீங்கெல்லாம் கேட்டு எழுதுறீங்க. ‘பொம்பளப்புள்ள நீ விளையாடக்கூடாது’ன்னு நான் சண்டை போட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு, என் தங்கச்சி பாடம் சொல்லிக்கொடுத்திருக்கு’’ - அந்தச் சகோதரனின் கண்ணீரில் இனிப்பு.
கோமதியின் கால்கள் கடந்து வென்றிருப்பது 800 மீட்டர் பந்தயம் மட்டுமா?!
-சி.ய.ஆனந்தகுமார்
படங்கள்: தே.தீட்ஷித்