
கேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11

இந்தியாவில் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கிறது. கோவா போன்ற சில இடங்கள் விதிவிலக்கு. ஆனால், இணையத்துக்கு ஏது ஊரும் பேரும்? அங்கே சூதாட்ட விஷயங்கள் ஏராளம் உண்டு. அதன் மூலத்தைத் தேடிப் பயணித்தால் இந்தியாவிற்கு வெளியே அதன் வேர்கள் நீளும். சில இணையச் சேவைகள் இந்தியாவிலேகூட உண்டு. ஆனால், அவை சூதாட்டமா என்ற கேள்வியும் உண்டு. அதிலொன்றுதான் ட்ரீம்11 (Dream11). ஆம், தோனியே வந்து “கேலோ கிரிக்கெட் திமாக் சே” என்பாரே... அதுதான்.
ட்ரீம்11 தரும் சேவையை பேன்டஸி கேமிங் (Fantasy gaming) என்கிறார்கள். அதாவது, நிஜத்தில் கிரிக்கெட் (அல்லது வேறு விளையாட்டு) நடந்துகொண்டிருக்க, அதிலிருக்கும் வீரர்களை வைத்து, கற்பனையாக நாமாடும் விளையாட்டு. ட்ரீம்11 எப்படிச் செயல்படுகிறது என்பதை முதலில் பார்த்துவிடலாம். ஏனெனில், அவர்களின் வெற்றி அந்த ஐடியாவில்தான் இருக்கிறது.
சென்னைக்கும் பெங்களூ ருக்கும் ஐ.பி.எல் போட்டி நடக்கிறதென வைத்துக்கொள்வோம். இரண்டு அணியி லிருந்தும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பேட்ஸ்மென், பவுலர், கீப்பர் கொண்டு நாம் ஓர் அணி உருவாக்க வேண்டும். அதில் ஒருவரை கேப்டன் ஆக்க வேண்டும். போட்டி தொடங்கும் முன்பே இதை நாம் செய்துவிட வேண்டும். போட்டியில் யார் யார் எவ்வளவு ரன், விக்கெட் எடுக்கிறார்கள் என்பதை வைத்து நம் அணி ஸ்கோர் செய்யும். கேப்டன் எடுக்கும் ஸ்கோர் மட்டும் இரண்டு மடங்காகக் கிடைக்கும். நாம் உருவாக்கும் அணியை ட்ரீம் 11-ல் இருக்கும் பல போட்டிகளில் (Contest) இணைத்துக்கொள்ளலாம். அதாவது ஒரே டீம், ஆனால் பல போட்டிகளில் விளையாடும். யாருடைய அணி அதிக ஸ்கோர் எடுக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். இதுதான் Fantasy gaming.

இதில் பணமும் அடங்கியிருக்கிறது. ட்ரீம்11-ல் இருக்கும் போட்டிகளில் இணைய நுழைவுக்கட்டணம் உண்டு (பணமில்லாத போட்டிகளும் உண்டு). 100 அணிகள் கொண்ட ஒரு போட்டி இருக்கிறதென வைத்துக்கொள்வோம். அதன் நுழைவுக்கட்டணம் 10 ரூபாய். ஆக, மொத்த வரவு 1000 ரூபாய். இதில் டாப் 10-ல் வருபவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட தொகை பரிசாகப் பகிர்ந்த ளிக்கப்படும். மீதமிருக்கும் தொகை கம்பெனிக்கு. அதாவது ட்ரீம்11-க்கு. இதுதான் பிசினஸ் மாடல். இதைப் பார்த்தால் சூதாட்டம் போலிருக்கிறதே என்கிறீர்களா?
இந்திய அரசு சூதாட்டத்தை இப்படி வரையறுக்கிறது. “Betting is the action of gambling money on the outcome of a race, game or other unpredictable events and does not involve any skill or research.” அதாவது, எந்தவிதத் திறமையோ ஆராய்ச்சியோ இல்லாமல் ஒரு விளையாட்டின் முடிவைக் கணித்து அதன் மூலம் பணம் வென்றால் அது சூதாட்டம் என்கிறது. ட்ரீம்11-ல் வெல்ல அதிர்ஷ்டம் மட்டும் போதாது. கிரிக்கெட் பற்றிய அறிவும் ஆராய்ச்சியும் தேவை என்கிறது அந்நிறுவனம். அதனால்தான் தோனியை “மூளையை வைத்து விளையாடு” எனச் சொல்லச் சொல்லி விளம்பரம் செய்கிறது ட்ரீம் 11. இந்திய உச்ச நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டு ட்ரீம் 11-ஐ அனுமதித்திருக்கிறது.
உலகம் முழுவதும் இந்த வகை பேன்டஸி கேமிங் ஏற்கெனவே பிரபலம்தான். இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமென்றாலும் பேன்டஸி கேமிங் விளையாட வழியில்லாமலிருந்தது. அமெரிக்காவில் வாழ்ந்த ஹர்ஷ் ஜெயினும் (Harsh Jain) இது போன்ற கேமிங்கில் ஆர்வம் கொண்டவர். 2008-ல் இந்தியாவிற்கு வந்தவருக்கு அப்படி ஒரு சேவையே இல்லை என்பது வருத்தமாக இருந்தது. இதற்கொரு இணையதளம் வந்தால் ஷ்யூர் ஹிட் ஆச்சே என யோசித்தார் ஹர்ஷ். தனியாக ஓடினால் ரன் இல்லையல்லவா? உடன் ஓட வர முடியுமா என பால்ய நண்பன் பவித் சேத்திடம் (Bhavit seth) கேட்க, பார்ட்னர்ஷிப் தொடங்கியது. கையிலிருந்த பணம், குடும்பத்தார் தந்த பணம் எல்லாம் முதலீடானது.
அப்போது ட்ரீம்11-ன் வடிவமே வேறாக இருந்தது. விளம்பரங்கள்தாம் வருமானம். யூஸர்ஸ் பணம் கட்டத் தேவையில்லை. ஒவ்வொரு மேட்சுக்கும் பேன்டஸி கேமிங் இல்லாமல், ஒரு தொடர் முழுவதற்குமான வாய்ப்பு மட்டுமே உண்டு. இவை மட்டுமன்றி கிரிக்கெட் தொடர்பான கலந்துரையாடல்கள், சாட் வசதி ஆகியவையும் உண்டு. ஆனால், இவை எதுவுமே ஹிட் அடிக்கவில்லை. இந்தியாவில் கிரிக்கெட்டின் பெயரால் எதையும் விற்க முடியும். ஆனால், ட்ரீம்11 ஹிட்டடிக்கவில்லை. ஹர்ஷ் யோசிக்கத் தொடங்கினார். எட்டடி தோண்டிவிட்டோம். இன்னும் இரண்டடியில் நிச்சயம் தங்கமிருக்குமென நம்பினார்.
ஹர்ஷ் நிறுவனம் வளரும் முன்பே விளம்பரத்துக்கு அதிக செலவு செய்துவிட்டதால் நிதி நிலைமை மோசமானது. பணத்துக்காக மீண்டும் குடும்பத்தினரிடம் போக வேண்டாம் என்பது ஹர்ஷின் எண்ணம். அதற்காக `ரெட் டிஜிட்டல்’ என இன்னொரு ஸ்டார்ட் அப் தொடங்கினார். அது அவருக்கு நன்கு தெரிந்த ஏரியா. பில்லியன் டாலர் நிறுவனமாக எல்லாம் அது மாற வாய்ப்பில்லை என்றாலும், ட்ரீம்11-ஐ மூழ்காமல் காப்பாற்றுமளவுக்கு அது லாபம் தருமென நம்பினார்; தந்தது. மீண்டும் ட்ரீம்11 உயிர்பெற்றது.
பலகட்டக் கலந்துரை யாடல்களுக்குப் பின் சில முடிவுகளை எடுத்தார் ஹர்ஷ். இந்தக் கால இளைஞர்களுக்கு உடனடி அங்கீகாரம் தேவை. அவர்களை ஒரு மாதம் முழுவதும் ஆடச் சொல்வதைவிட “இந்தப் போட்டிக்கு வா... இன்னையோட முடிஞ்சிடும்” என்றால் ஆர்வம் அதிகரிக்கும் என நினைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கான அங்கீகாரமாக என்ன தரலாம் என்ற கேள்விக்குப் பணம் என முடிவானது. பணம்தான் பரிசு என்றாலும் ஒருவரின் கிரிக்கெட் திறமையை எடுத்துச் சொல்லும்படி டிசைன் செய்தால்தான் நிறைய பேர் உள்ளே வருவார்கள் என்பதில் மாற்றம் செய்யவில்லை. விளம்பரங்களை நம்பாமல், வருமானத்துக்குப் பயனர்களிடமே வசூலிக்கலாம் என்ற முடிவும் ஹிட் அடித்தது. ``நான் யார் தெரியுமா?” என மற்றவர்களிடம் கெத்துக் காட்ட பணத்தைச் செலவு செய்வார்கள் என்ற ஷார்ப் ஐடியாதான் ஹர்ஷின் ஜீபூம்பா ஆனது. அந்தச் சின்ன மாற்றம்தான் இன்று ட்ரீம் 11-ஐ கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனமாக மாற்றியுள்ளது.
2014-ல் ட்ரீம்11-ன் பயனர்கள் எண்ணிக்கை வெறும் மூன்று லட்சம். இன்று 5 கோடியைத் தாண்டிவிட்டது. இந்தக் காலகட்டம்தான் ட்ரீம்11-ன் ட்ரீம் ரன் எனச் சொல்லலாம். முதலீடும் கிடைத்து, பயனர்களும் கிடைத்தார்கள். பிளிப்கார்ட், ஓலா போன்ற நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் ஆயிரக்கணக்கானோர். ஆனால், டிரீம்11 அப்படியில்லை. இங்கு பொருள்களைச் சேமித்து வைக்க சேமிப்புக் கிடங்கு தேவையில்லை. விற்பனைப் பிரதிநிதிகள் தேவையில்லை. குறைந்த எண்ணிக்கை ஆட்களைக் கொண்டு இதைச் செயல்படுத்துகிறார்கள்.
இந்த ஆண்டு ட்ரீம்11-ன் பயனர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகும். காரணம், ஐ.பி.எல் ட்ரீம்11-உடன் போட்டிருக்கும் ஒப்பந்தம். ஒவ்வோர் ஆண்டும் ஐ.பி.எல்லே பேன்டஸி லீகு நடத்திவந்தது. இந்த ஆண்டு முதல் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த வேலையைச் செய்ய ஐ.பி.எல்-லும் ட்ரீம் 11-ம் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். பில்லியன் டாலர் ஸ்டார்ட் அப் என்ற மிகப்பெரிய அந்தஸ்தைப் பெற இந்த ஒப்பந்தம் உதவும் என நம்புகிறது ட்ரீம்11.

ட்ரீம்11 மீதான குற்றச்சாட்டுகளுக்கும் பஞ்சமில்லை. இதில் முதல் பரிசைப் பெற்றவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா என அடிக்கடி சமூக வலைதளங்களில் யாராவது கேட்பார்கள். பெரும்பாலும் பதில் வராது. ஒரு டீம் வெல்வதற்கு எத்தனை சாத்தியங்கள் இருக்கின்றனவோ அத்தனை காம்பினேஷனிலும் ட்ரீம்11-ஏ அணி களை உருவாக்கி கான்டஸ்ட்டில் சேர்த்துவிடும். இதன்மூலம் அதிகபட்ச பரிசுத்தொகையை அதுவே வைத்துக்கொள்ளும் என்பது ட்ரீம்11 மீது வைக்கப்படும் முக்கியக் குற்றச்சாட்டு. இதற்கு Bot எனப் பெயர். இது உண்மையா பொய்யா என்பதற்கு இதுவரை தெளிவான பதிலில்லை.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்தச் செயலியைப் பெற முடியாது. ஆனால், ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்கிறது. ஆண்டிராய்டு செயலியைப் பெற இவர்கள் இணையதளத்துக்குப் போனால் போதும். இந்தியாவில் அதிகமான எதிர்மறை விமர்சனங்கள் கொண்ட ஸ்டார்ட் அப் என ட்ரீம்11-ஐ சொல்லலாம். அதே சமயம், விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதி பயங்கர வரவேற்பு பெற்ற ஸ்டார்ட் அப் என்றும் சொல்லலாம்.
“நான் அடிப்படையில் மிகப்பெரிய விளையாட்டு ஆர்வலர். என்னால் விளையாட்டில் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. நானே அதைச் செய்யவும் மாட்டேன்” என்கிறார் ஹர்ஷ் ஜெயின்.
அதிக லாபத்துக்காக ஹர்ஷ் ஏமாற்றி யிருக்கிறாரா இல்லையா என்பது தனிக்கதை. ஆனால், ட்ரீம்11 என்ற ஐடியா உண்மையில் ஒரு ‘வாவ்’ ஐடியாதான். அதை அவர் உருவாக்கிய விதமும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்தான். ட்ரீம்11 பயணத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் அவைதாம்.
- கார்க்கிபவா