
கிராண்ட் மாஸ்டர் கில்லிகள்!
சர்வதேச செஸ் அரங்கில், இந்தியாவின் சுட்டி ஜீனியஸ்கள் சாதித்துவருகிறார்கள். கடந்த ஓராண்டில் கேரளாவைச் சேர்ந்த நிஹல் சரின், தமிழகத்தின் பிரக்ஞானந்தா மற்றும் குகேஷ் ஆகியோர், `கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சுட்டி விகடனுக்காக மூன்று பேரையும் சந்திக்க வைத்தோம்.

களத்தில் ஒருவருக்கொருவர் சவாலாக இருக்கும் இந்த இளம் கிராண்ட் மாஸ்டர்கள், நேரில் தோள் மீது கை போட்டு நண்பர்களாக சிரித்து விளையாடுகிறார்கள்.
``நாங்க எப்போ மீட் பண்ணினாலும், செஸ்ஸில் இருக்கும் சந்தேகங்களை ஒருத்தருக்கு ஒருத்தர் விவாதித்து உதவி செஞ்சுப்போம்” என்கிறார், இவர்களில் சீனியரான நிஹல் சரின்.
``இந்த மாதிரி சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சேர்ந்து விளையாடுவோம். நட்பும் வளரும்; செஸ் டிரெய்னிங் பண்ணின மாதிரியும் இருக்கும். இப்பவே, நாலஞ்சு கேம் ஓவர்’’ என்று புன்னகைக்கிறார் பிரக்ஞானந்தா.

செஸ் கேமைப் பொறுத்தவரை தன்னுடைய பலவீனத்தை பிறர் அறியாமல் வைத்திருந்தால் மட்டுமே, ஒருவரால் சிறப்பாக விளையாட முடியும். ஆனால், நண்பர்களின் பலவீனங்களை அறிந்திருந்தாலும், அதை தங்கள் வெற்றிக்குப் பயன்படுத்தாமல், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள்.
``செஸ்ஸைத் தவிர, வேறு என்னென்ன விளையாட்டுகளில் ஆர்வம்?''
``பேட்மின்டன், கிரிக்கெட் ரொம்பப் பிடிக்கும். செஸ் பயிற்சி இல்லாத நேரங்களில் இதுதான் எனக்கு ஹாபி” என்கிறார் குகேஷ்.

``எனக்கு டேபிள் டென்னிஸில் ரொம்ப ஆர்வம். நீங்க நிஹல்...’’ என்றார் பிரக்ஞானந்தா.
``எனக்குத் தூங்கறதுதான் பிடிக்கும்!” என்றதும், அனைவரும் சிரித்தனர்.
இந்த மூன்று கிராண்ட் மாஸ்டர்களில் கடைக்குட்டியான குகேஷ், ‘உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர்’ என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். விளையாட்டுக் களத்தில் கில்லி. ஆனால், குறைவாகவே பேசுகிறார்.
``விஸ்வநாதன் ஆனந்த் சார்தான் என் இன்ஸ்பிரேஷன். அதேநேரம், இந்த வயசுலேயே உலக சாதனை செய்ய முடியும்னு கத்துக்கிட்டது பிரக்ஞானந்தாவைப் பார்த்துதான். தனித்துவமான ஆட்டம் இவனுடையது’’ என்றார் குகேஷ்.

``ஆஹா... ரொம்ப பாசமா இருக்கானே! இதை நிறைய தடவை குகேஷ் என்கிட்ட சொல்லியிருக்கான். எனக்கு அவங்கிட்ட பிடிச்சது, ரொம்ப நேர்த்தியா விளையாடி, டஃப் கொடுப்பான். நிஹலும் அப்படித்தான். எப்போ என்ன நகர்த்தல்னு யூகிக்கவே முடியாது’’ என்றார் சிரித்துக்கொண்டே.
இருவரின் பேச்சையும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருந்த நிஹல், ``தமிழ்நாட்டுல எனக்குக் கிடைச்ச பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் இவங்க. வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்கேற்கப் போகும்போது ஒண்ணாவே இருப்போம். செஸ்ஸில் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்துவோம்” என்றார்.

‘`ரொம்ப நேரமா ஃபீலிங்கா போகுதே. டாபிக்கை ஜாலியா மாத்துங்கப்பா” என்று பிரக்ஞானந்தாவை இருவரும் கட்டியணைத்துக்கொண்டார்கள்.
``மூணு பேரும் நல்ல நண்பர்கள். அதனால, ஒருத்தருக்கொருத்தர் எதிரியாகப் பார்ப்பதில்லை. களத்தில் மட்டுமே செஸ் போட்டியாளர்கள். வெளியே அன்பின் போட்டியாளர்கள்’’ என்றார் குகேஷின் தந்தை ரஜினிகாந்த்.

பொறாமையைத் தூர வீசி, அன்பைக் கட்டியணைக்கும் இந்த கிராண்ட் மாஸ்டர்களுக்கு ஒரு பெரிய சல்யூட்!
-கார்த்திகா ராஜேந்திரன்
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
அட்டை படம்: ப.பிரியங்கா
இந்த மாதத்திலேயே தமிழகத்தைச் சேர்ந்த மற்றுமோர் இளம் வீரரும் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று, இந்தியாவின் 61-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் என்ற சாதனையப் படைத்துள்ளார். அவர், ஈரோட்டைச் சேர்ந்த இனியன் பாலசுப்ரமணியன், வயது 16. சிறு நகரிலிருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையும் இனியனைச் சேரும்.

2019 மார்ச் 6-ம் தேதி, பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற செஸ் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதுடன், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கான 2,500 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.
‘‘விரைவில் 2,600 புள்ளிகளைக் கடந்து, சர்வதேச செஸ் பட்டியலில் முன்னேறுவேன். பெருநகரங்களில் மட்டுமன்றி, மற்ற ஊர்களிலிருந்தும் செஸ் விளையாட்டுக்கு இளம் வீரர்கள் வர வேண்டும். செஸ் பழகப் பழக சுவாரஸ்யமாகும். பயிற்சி எடுத்தால் நீங்களும் கிராண்ட் மாஸ்டர் ஆகலாம்” என்கிறார்.
`செஸ்’ என்றதும் நினைவுக்கு வரும் பெயர், விஸ்வநாதன் ஆனந்த். 19 வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனவர். அன்று முதல் இன்று வரை, சர்வதேச அளவில் டாப் 10 இடங்களுக்குள் தன்னை தக்க வைத்திருப்பவர். இனிய மாலை நேரத்தில் அவரைச் சந்தித்தார்கள், குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா.

கோப்பைகளும் பதக்கங்களும் நிறைந்திருந்த அறைக்குள் இளம் கிராண்ட் மாஸ்டர்களும், ஆனந்தும் சந்தித்துக்கொண்ட நொடியிலிருந்து பேசியது எல்லாம், செஸ்... செஸ்... செஸ்... மட்டுமே.இறுதியாக விடைபெறும் முன்பு, ``12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது சாதாரண விஷயமல்ல. பெரிய இலக்கு. அதில் சாதனையும் படைத்துவிட்டீர்கள். இப்போது உங்களுக்குத் தேவை ஓய்வு. திட்டமிட்ட பயிற்சிமுறைகளைப் பின்பற்றுங்கள். அப்போதுதான் செஸ் விளையாட்டில் கன்சிஸ்டன்ட்டாக இருக்க முடியும். பயிற்சி எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் ஓய்வும்” என்றார்.
``திறமையான செஸ் விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் இங்குள்ளனர். ஆரம்பத்தில், விளையாட்டு, படிப்பு என இரண்டுக்கும் தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கும் பெற்றோர்கள், ஒருகட்டத்துக்குப் பிறகு, அவர்கள் மேல் வகுப்புச் சென்றதும், முழுக்கப் படிப்பிலேயே திருப்புகிறார்கள். இது சரியல்ல. செஸ் மட்டுமன்றி எந்த விளையாட்டாக இருந்தாலும், குழந்தைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள். செஸ் விளையாட்டில், இந்தியாவில் நல்ல முன்னேற்றம் உள்ளது. கடந்த 20 வருடங்களில், இந்தியாவைச் சேர்ந்த திறமையான இளம் வீரர்கள் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளனர். இணையதளத்திலேயே பயிற்சியைத் தொடங்கலாம். பிரக்ஞா சாதனையை குகேஷ் முறியடித்தார். குகேஷின் சாதனையை, இன்னொருவரும் முறியடிப்பார். அதுதான் விளையாட்டின் ஆரோக்கியமான வளர்ச்சி. கமான் கிட்ஸ், லெட்ஸ் பிளே செஸ்” என்றார் விஸ்வநாதன் ஆனந்த் உற்சாகமாக.
`சதுரங்க விளையாட்டு’ எனப்படும் செஸ்ஸில், 2 பேர் போட்டியிடுவர். மேலிருந்து கீழாக 8 வரிசைகளும், இடமிருந்து வலமாக 8 வரிசைகளுமாக 64 கட்டங்கள். ஒரு பக்கத்துக்கு 16 காய்கள் வீதம், 32 காய்கள் பயன்படுத்தப்படும். கறுப்பு, வெள்ளை நிற காய்கள்கொண்டு விளையாடப்படும்.

● 1 அரசன், 1 அரசி, 2 ஒட்டகங்கள், 2 யானைகள், 2 குதிரைகள், 8 படை வீரர்கள் என 16 காய்கள் ஒரு படையில் இருக்கும். எதிராளியின் அரசனைப் பிடிப்பதும், தன் அரசனைப் பாதுகாப்பதுமே செஸ் விளையாட்டின் அடிப்படை.
●சாமர்த்தியமான நகர்தலும், போட்டி வியூகமும் செஸ் விளையாட்டில் மிக முக்கியம். போட்டியின் முதல் நகர்வு, `தொடக்க ஆட்டம்' எனப்படும்.
●செஸ் விளையாட்டின் பெரும் வெற்றி, `கிராண்ட் மாஸ்டர்' பட்டம். கேன்டிடேட் மாஸ்டர், FIDE மாஸ்டர், இன்டர்நேஷனல் மாஸ்டர் ஆகிய மூன்று பட்டங்களையும் வென்று, உலக செஸ் புள்ளிப் பட்டியலில் 2,500 புள்ளிகள் பெற்றால் மட்டுமே `கிராண்ட் மாஸ்டர்' ஆக முடியும்.
●1988-ம் ஆண்டு, 19 வயதில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றவர், விஸ்வநாதன் ஆனந்த், 5 முறை செஸ் உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
●இந்தியாவில் இதுவரை 60 வீரர்-வீராங்கனைகள், கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளனர்.
● செஸ் விளையாட்டில் ஆர்வமுள்ள சுட்டீஸ், செஸ் போர்டை வாங்குங்கள். ஆண்ட்ராய்டு தளத்தில் (இலவசம்) உள்ள செஸ் லைவ், செஸ் பை மாஸ்டர் சாஃப்ட் போன்ற ஆப்-களையும் பயன்படுத்தலாம்.
●Man vs Computer போட்டிகளில், செஸ் விளையாட்டின் வெவ்வேறு நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.