Published:Updated:

நான்காவது வீரராகக் களமிறங்க ராயுடு சரியான ஆப்ஷனா..? ஷூட் தி கேள்வி! #SportsVikatan

நான்காவது வீரராகக் களமிறங்க ராயுடு சரியான ஆப்ஷனா..? ஷூட் தி கேள்வி! #SportsVikatan
நான்காவது வீரராகக் களமிறங்க ராயுடு சரியான ஆப்ஷனா..? ஷூட் தி கேள்வி! #SportsVikatan

இந்தியாவைப் பொறுத்தவரை ராகுல் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் இப்போது ராயுடு அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரும் அதற்குச் சரியான ஆளா என்றால் கேள்விக்குறியே! கோலி, ரோஹித், பும்ரா மட்டுமல்ல... நிதீஷ் ரானா, ஜலஜ் சக்சேனா, ஷர்துல் தாகூர் போன்றவர்களும் ஆண்டு முழுதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

விகடன் வாசகர்களின் விளையாட்டுத்துறை தொடர்பான கேள்விகளுக்கு, ஸ்போர்ட்ஸ் விகடன் மின்னிதழில் வெளியாகிவரும் `ஷூட் தி கேள்வி' பகுதி பதிலளித்துக்கொண்டிருக்கிறது. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள், வீரர்கள் பற்றி மட்டுமல்லாமல், விளையாட்டு நிர்வாகம், விளையாட்டின் அரசியல் என எந்தக் கேள்வியையும் வாசகர்கள் கேட்கலாம். இந்த மாதம் கேட்கப்பட்டிருந்த கேள்விகளிலிருந்து, கிரிக்கெட் தொடர்பான இரண்டு கேள்விகளின் பதில் இங்கே...

இந்திய அணி வீரர்கள் வேற எந்த வெளி league போட்டிகளிலும் (ex. BBL, BPL, CPL) BCCI அனுமதிக்க மறுக்கிறதே ஏன்? BCCI க்கு IPL துவண்டுவிடும் என்ற பயம்தான் காரணமோ?

நீங்கள் சொல்வது முக்கியமான காரணம்தான். வீரர்களின் ஐ.பி.எல் ஒப்பந்தத்திலேயே `வேறு டி-20 லீக்குகளில் பங்கேற்கக் கூடாது' என்ற விதி இடம்பெற்றுள்ளது. அந்த அளவுக்குத் தெளிவாகவும் கறாராகவும் இருக்கிறது பி.சி.சி.ஐ. ஆனால், இதை இன்னொரு கோணத்திலும் பார்க்கவேண்டும். இந்திய வீரர்கள் எதற்காக வேறு டி-20 தொடர்களில் விளையாடவேண்டும்?

இந்தியாவைப் பொறுத்தவரை கோலி, ரோஹித், பும்ரா மட்டுமல்ல... நிதீஷ் ரானா, ஜலஜ் சக்சேனா, ஷர்துல் தாகூர் போன்றவர்களும் ஆண்டு முழுதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல் தவிர்த்து, ரஞ்சி டிராபி, சையது முஸ்தாக் அலி, துலீப் டிராபி, விஜய் ஹசாரே, தியோதர் டிராபி எனப் பல்வேறு தொடர்களில் விளையாடவேண்டியிருக்கிறது. போதாதென தமிழக, கர்நாடக வீரர்களுக்கு தமிழ்நாடு பிரீமியர் லீக், கர்நாடகா பிரீமியர் லீக் தொடர்களும் இருக்கின்றன. இடையே இந்தியா - ஏ தொடர்கள் வேறு. இத்தனை தொடர்களுக்கு நடுவே, அவர்களும் காயமடைந்துகொண்டுதான் இருக்கிறார்கள். மீண்டு வந்துகொண்டுதான் இருக்கிறார்கள். என்ன, பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணிப்பதில்லை. ஆனாலும், இந்த வாரம் டெல்லியிலிருந்து சென்னை பறப்பவர்கள், அடுத்த வாரம் மீண்டும் அசாமுக்குச் சென்றுகொண்டுதானே இருக்கிறார்கள்? கோலிக்கும், பும்ராவுக்கும் தேவைப்படும் ஓய்வு அவர்களுக்கும் தேவைதானே! 

அப்படி வெளிநாடுகளில் விளையாடவேண்டுமென்றால் இஷாந்த் ஷர்மா, புஜாரா, வருண் ஆரோன் போல் கவுன்ட்டி கிரிக்கெட் விளையாடட்டும். எதற்காக டி-20 விளையாடவேண்டும். கிரிக்கெட்டைப் பாழக்க இங்கு இருக்கும் டி-20 தொடர்கள் போதாதா என்ன?!

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

உலகக் கோப்பையில் நம்பர் 4 பொசிஷனில் விளையாட அம்பாதி ராயுடு சரியான ஆள்தானா? 

சொல்லப்போனால், இந்திய அணியில் நம்பர்-4 பொசிஷனில் விளையாடுவதற்கு 100 சதவிகிதம் பெர்ஃபெக்டான ஆள் இப்போது யாருமே இல்லை. அல்லது இந்தியா யாரையும் அதற்குத் தயார்படுத்தவில்லை. தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் ரோலில் செட் ஆகிவிட்டார். கேதர் ஜாதவும் அப்படியே. மனீஷ் பாண்டே, ஸ்ரேயாஷ் ஐயர், போட்டியிலேயே இல்லை. ராகுல் ஒருநாள் போட்டிகளில் தன்னை நிரூபிக்கவில்லை. அதனால் இப்போது ராயுடு அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருக்கிறார். ஆனால், அவரும் அதற்குச் சரியான ஆளா என்றால் கேள்விக்குறியே!

அவர் இதுவரை ஆடிய பெரிய இன்னிங்ஸ்கள் ஒன்று முதலில் பேட் செய்தபோது அடிக்கப்பட்டதாக இருக்கும். இல்லையேல், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து எடுத்ததாக இருக்கும். நியூசிலாந்துடன் அடித்த அந்த 90 ரன்கள் உட்பட. சேஸிங்கின்போது டாப் ஆர்டர் விரைவில் வெளியேறிய ஆட்டங்களில், ராயுடுவின் செயல்பாடு படுமோசம்தான். ஆஸ்திரேலிய ஒருநாள் தொடர் அதற்கான எடுத்துக்காட்டு. ரோஹித், தவான், கோலி மூவரும் நன்றாக அடித்தபின்பு, எந்த நெருக்கடியும் இல்லாதபோது யாராலும் ஸ்கோர் செய்ய முடியும். டாப் ஆர்டர் சொதப்பினாலும், மிடில் ஆர்டரோடு கைகோத்து, இன்னிங்ஸை பில்ட் செய்யக்கூடிய வீரர்தான் அந்த இடத்துக்குத் தேவை. ராயுடு அப்படிப்பட்ட பேட்ஸ்மேனாகத் தெரியவில்லை. 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களின் ஃபார்மை தோனி தொடர்ந்தால், அவரே அந்த இடத்தில் களமிறக்கப்படலாம். அதுதான் சரியாக இருக்கும். இல்லையெனில், ஏற்கெனவே பல பரிசோதனைகள் செய்துபார்த்திவிட்ட இந்திய அணி, விஜய் சங்கரை அந்த இடத்தில் இறக்கிப் பார்க்கலாம். தன் முதல் ஒருநாள் இன்னிங்ஸில் மிகப்பொறுப்புடனே விளையாடினார். அவரது பௌலிங், இந்தியாவுக்குக் கூடுதல் பலமாகவும் அமையும். கேதர் ஜாதவ், பாண்டியா மீதான நெருக்கடியையும் அது குறைக்கும். ஆஸ்திரேலியத் தொடரில் இந்தச் சோதனையையும் கடைசியாகச் செய்துபார்க்கலாம்!

ஸ்போர்ட்ஸ் விகடன் பிப்ரவரி மாத இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/2MObbdm

அடுத்த கட்டுரைக்கு