
கிறிஸ்டியானோ ரொனால்டோ

* 1985 பிப்ரவரி 5... போர்ச்சுக்கல் நாட்டின் மதீரா என்னும் சிறிய தீவில், ஒரு குடும்பத்தின் நான்காவது குழந்தையாகப் பிறந்தார், கிறிஸ்டியானோ ரொனால்டோ. ஏழ்மை வாட்டியதால், ரொனால்டோவைக் கருவிலேயே கலைக்க நினைத்திருந்தார் தாய். எப்படியோ மனம் மாறிப் பெற்றெடுத்தார்.

* 4 வது வயதில் ரொனால்டோவுக்கு கால்பந்தை அறிமுகம் செய்தார் தந்தை. பாட்டில், பேப்பர் எனக் கிடைத்ததையெல்லாம் கால்பந்தாக மாற்றிவிடுவார் ரொனால்டோ. ஆரஞ்சுப்பழம் கிடைத்தாலும் ஃபுட்பால் விளையாடியே ஜூஸ் ஆக்கிவிடுவார்.

* 8 வயதிலேயே உள்ளூர் கிளப் அணிக்காக ஆடத் தொடங்கிவிட்டார். அவரின் வேகம், `வருங்கால நட்சத்திரம்’ எனப் பலரையும் பேசவைத்தது. படிப்பில் ஆர்வம் இல்லை. ஐந்தாவது படிக்கும்போது, ‘‘இப்படியே இருந்தால் கால்பந்து உனக்குச் சோறு போடாது” என ஆசிரியர் கோபமாகப் பேச, அவருடனான வாக்குவாதத்தால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.

* ‘‘அம்மா, எனக்குப் பள்ளி வேண்டாம். கால்பந்து போதும். அதில் நிச்சயம் சாதிப்பேன்’’ என்ற மகனின் தன்னம்பிக்கைக்குத் தாயும் ஊக்கம் அளித்தார். முழு நேரத்தையும் கால்பந்துக்கு அர்ப்பணித்தார் ரொனால்டோ. அவரது ஆட்டத்தைப் பார்த்து வியந்த போர்ச்சுக்கலின் சிறந்த கிளப்களில் ஒன்றான ‘ஸ்போர்டிங் லிஸ்பன்’, உடனடியாக ஒப்பந்தம் செய்தது.

* குடும்பத்திடம் ஆசிபெற்று, கனவுகளைச் சுமந்தபடி தொலைதூரத்தில் இருக்கும் லிஸ்பன் நகருக்கு விமானத்தில் தனியாகக் கிளம்பியபோது ரொனால்டோ வயது 12. தன் கால்பந்து விளையாட்டுக்கே தடைபோடும் சீரற்ற இதயத்துடிப்பு நோயால் பாதிக்கப்பட்டபோது வயது 15. ஆனாலும், விடாமுயற்சியால் போராடி மீண்டுவந்தார்.

* தன் கடின உழைப்பால் ‘ஸ்போர்டிங் லிஸ்பன்’ அணிக்காக U-16 U-17 U-18 என முன்னேறி, சீனியர் அணியிலும் இடம்பெற்றார். ஒரே சீஸனில் அனைத்து அணிகளுக்கும் தகுதிபெற்ற ஒரே வீரர், ரொனால்டோ மட்டுமே.

* 2003... மான்செஸ்டர் யுனைடெட் அணியுடன் நட்புரீதியிலான ஆட்டத்தில், ஸ்போர்டிங் லிஸ்பன் 3-1 என ஜெயித்தது. அந்தப் போட்டியில் அதகளம் செய்த ரொனால்டோவை, வாங்கியே தீருவது என முடிவுசெய்த, ‘யுனைடெட் அணி’ பயிற்சியாளர் அலெக்ஸ் ஃபெர்குசன், 12.3 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கியபோது ரொனால்டோ வயது 18. அவரது ஜெர்சி எண் 7. இதற்கு முன்பு கால்பந்து ஜாம்பவான்களான கன்டோனா மற்றும் டேவிட் பெக்கம் அணிந்த ஜெர்ஸி நம்பர் அது.

* ‘இவனுக்கு நம்பர் 7 ஜெர்சியா?’ என அப்போது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு உள்ளானார் ரொனால்டோ. அதையே சவாலாக ஏற்று, ‘அதற்கு நான் சரியான ஆள்தான்’ என்பதை நிரூபிக்கக் கடும் பயிற்சியை மேற்கொண்டார். 2003 FA ஃபைனலில் யுனைடெட் அணி கோப்பையை வென்றதே, ரொனால்டோவின் முதல் கோப்பை.

* 2004-ல் யூரோ கோப்பை ஃபைனலில், கிரீஸ் அணியிடம் போர்ச்சுக்கல் தோல்வியுற்றது. அடுத்த ஆண்டு, ரொனால்டோவின் தந்தை மரணம். அடுத்தடுத்த சோகங்கள் ரொனால்டோவைத் தாக்கின. 2006-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில், இங்கிலாந்து வீரர் ரூனிக்கு ரெட் கார்டு வாங்கிக்கொடுத்தார் என்று யுனைடெட் ரசிகர்களே ‘ரொனால்டோ வெளியே போ’ எனப் போர்க்கொடி தூக்கினர்.

* தூற்றல்களைத் துடைக்க தனது கால்களையே ஆயுதமாகப் பயன்படுத்தினார். பயிற்சிக்கு முதலில் வருவது, கடைசியாக போவது என இரவு-பகல் பாராமல் உழைத்தார். மூன்று லீக் டைட்டில், சாம்பியன்ஸ் லீக் கோப்பை எனப் பல கோப்பைகளை யுனைடெட் அணிக்குப் பெற்றுத்தந்து, வசை பாடியவர்களை ரசிகர்களாக மாற்றினார்.

* 2008-ஆம் ஆண்டில் கால்பந்தின் ஆகச்சிறந்த விருதான `பாலன் டி ஓர்’ விருது, ஃபீபா சிறந்த வீரர் போன்ற விருதுகள், ரொனால்டோ கைகளில் தவழ்ந்தன. அதே ஆண்டில் போர்ச்சுக்கல் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

* 2009-ஆம் ஆண்டு, ரியல் மாட்ரிட் அணிக்காக 86 மில்லியன் யூரோ கொடுத்து வாங்கப்பட்டார். அதுவே அப்போது ஒரு வீரருக்காகக் கொடுக்கப்பட்ட அதிகபட்ச தொகை. புதிய லீக், புதிய சவாலாக, தன் ராஜ்யத்தைத் தொடர்ந்தார். கோல்கள், கோப்பைகள், விருதுகள் இங்கும் தொடர்ந்தன.

* 2012 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் பெனால்ட்டி வாய்ப்பை மிஸ் செய்தார் ரொனால்டோ. அப்போது, ‘‘நான் ரியல் மேட்ரிட் அணிக்கு சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று தர கடமைப்பட்டிருக்கிறேன்’’ எனச் சபதம் எடுத்தார்.

* 2014... சாம்பியன்ஸ் லீக் கோப்பையை பத்தாவது முறையாக வெல்ல வேண்டும் என்ற மாட்ரிட் ரசிகர்களின் 12 ஆண்டு கனவை நிறைவேற்றி, கெத்தாக சொன்னதைச் செய்துகாட்டினார் ரொனால்டோ. அந்தத் தொடரில் 17 கோல்கள் அடித்து அசத்தினார். இரண்டு கிளப் அணிகளுக்காக கிளப் உலகக் கோப்பை மற்றும் சாம்பியனஸ் லீக் கோப்பைகளை வென்ற ஒரே வீரர், ரொனால்டோ.

* 2016... தன் நாட்டு மக்களுக்காகச் சாதிக்க வேண்டும் என்ற கனவையும், போர்ச்சுக்கல் அணிக்காக யூரோ கோப்பையையும் பெற்றுத்தந்து போர்ச்சுக்கல் மக்களின் ஏக்கத்தைப் பூர்த்திசெய்தார். ‘ஐயம் தி பெஸ்ட்’ என நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்.

* ஐந்து முறை பாலன் டி ஓர், நான்கு முறை கோல்டன் பூட் என அவர் வாங்கிய விருதுகளுக்கு மட்டுமே ஒரு மியூசியம் மதீரா நகரில் அமைந்துள்ளது.

* வயது 34. ஆனால், கால்களுக்கு 20 வயதைப்போல் இன்னும் துடிப்பு குறையவில்லை. யுவன்டஸ் அணி 105 மில்லியன் கொடுத்து வாங்குகிறது. ‘யுவன்டஸ் அணிக்காக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்று தர வேண்டும்’ என்று தன் அடுத்த வேட்டைக்குத் தயாராகிவிட்டார் ரொனால்டோ.

* ரொனால்டோவின் வெற்றி, கோப்பைகள் வென்றதில் இல்லை. அவரைப் பார்த்து இன்று பல பேர் பூட் அணியத் தொடங்கியிருக்கிறார்கள். அதுதான் ஒரு சாம்பியனின் வெற்றி. ரொனால்டோ ஒரு சாம்பியன்!
- கி.ர.ராம் கார்த்திகேயன்