
ஸ்நூக்கர் ஸ்டார்!
‘‘நேர்த்தியும் தனித்துவமும் இருந்தால் போதும். பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கரில் ஜொலிக்கலாம்’’ எனப் புன்னகைக்கிறார் பிரணவ்நாத்.

மதுரை, சேத்தனா மெட்ரிக் பள்ளியில் 11-ம் வகுப்புப் படிக்கிறார் பிரணவ்நாத். 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடந்த 16 வயதுக்குட்பட்ட பிரிவு ஸ்நூக்கர் போட்டியில், உலக அளவில் 32வது இடம், தென்னிந்திய அளவில் முதல் இடம் பிடித்துள்ளார்.
தேசிய அளவிலான போட்டிக்குத் தயாராகிவரும் பிரணவ்நாத்திடம் பேசினோம்.
“ஏழாம் வகுப்பு படிக்கும்போது தெருவில் கிரிக்கெட் விளையாடுவேன். அதைப் பார்த்த அப்பா, ‘டைம்பாஸுக்காக மட்டும் விளையாடாதே. ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுத்து, இலக்குடன் விளையாடு’ன்னு ஸ்நூக்கரில் சேர்த்துவிட்டார்.
தெரியாத விளையாட்டாக இருந்தாலும், என் மேலே கோச் வைத்த நம்பிக்கையைப் பார்த்து ஆர்வத்தோடு விளையாட ஆரம்பிச்சேன். தினமும் 5 மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன்’’ என்கிறார்.

18 வயதுக்குட்பட்ட சப் ஜூனியர், 21 வயதுக்குட்பட்ட ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவிலும் விளையாடியிருக்கிறார். மாநில அளவிலான சப் ஜூனியர் ஸ்நூக்கரில் முதல் இடம், ஜூனியர் பில்லியர்ட்ஸில் மூன்றாவது இடம், ரஷ்யாவில் நடந்த போட்டியின் மூலம் இந்திய அளவில் ஆறாவது இடம் என்று இவரது சாதனைகள் அசரவைக்கின்றன.
மதுரையின் ‘பாட் பிளாக் பில்லியட்ர்ஸ் & ஸ்நூக்கர் அகாடமி’யைச் சேர்ந்த பார்த்திப ராஜேந்திரன், “சீனியர்களைவிட மிக வேகமாகப் புரிந்துகொள்கிறார் பிரணவ். இந்த விளையாட்டில் சென்னையில மட்டும்தான் ஸ்டேட் சாம்பியன் இருப்பார்கள் என்ற நிலையை மாற்றி, முதன்முறையாக மதுரைலிருந்து இன்டர்நேஷனல் அளவுக்கு உருவாகியிருக்கிறார். ஒலிம்பிக்கில் இந்த பில்லியர்ட்ஸ், ஸ்நூக்கர் விளையாட்டைச் சேர்ப்பதற்கான ஓட்டெடுப்பு நடக்கிறது. அப்படிச் சேர்த்துக்கொள்ளப்பட்டதால், வருங்காலத்தில் ஒலிம்பிக்கில் பிரணவ் ஜொலிப்பார்’’ என்றார்.
சாதனைகள் தொடரட்டும் பிரணவ்!
- ஆர்.கணேசன்