2018 ஸ்பெஷல்
சினிமா
Published:Updated:

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!
பிரீமியம் ஸ்டோரி
News
அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!

விளையாட்டு

ஹெல்மெட் இல்லாமல் ஹூக் அடிப்பார். ஆஃப் டிரைவ்களில் அதிர வைப்பார். கிரீஸில் ரிலாக்ஸாக நின்று பெளலர்க ளைக் கதறவிடுவதை ஒரு கலை போலவே செய்வார். இவர் இல்லாத `ஆல் டைம் ஃபேவரிட்’ அணியைத் தேர்ந்தெடுப்பது சிரமம். சர் விவியன் ரிச்சர்ட்ஸ், 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர், இப்போது ஆன்டிகுவா மருத்துவக் கல்லூரியின் அம்பாசிடர். சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம். 

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!

“1983 உலகக் கோப்பை பற்றிய நினைவுகள்...”

“அது மிகவும் மோசமான நினைவு. மறக்க நினைக்கும் கனவு. அப்போது எல்லா அணிகளும் ஒரே ஹோட்டலில்தான் தங்கியிருந்தன. ஃபைனலன்று இரவு திடீரென்று தபேலா சத்தம் கேட்டது. ஓட்டலுக்கு உள்ளே, வெளியே ஒரே கொண்டாட்டம்தான். அந்த சத்தம் நிற்கவே இல்லை. அந்த ஞாயிற்றுக்கிழமை சோமர்செட் நகரில் ஒரு மேட்ச் இருந்தது. அதனால் எப்படியாவது தூங்கவேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அந்தத் தபேலா சத்தத்தால் தூங்க முடியவில்லை. மிகவும் நல்ல இசைதான். ஆனால், அப்போது இருந்த மனநிலையில், அதை சகித்துக்கொள்ள முடியவில்லை. அன்று முழுவதும் அந்த சத்தம் என்னைத் தூங்கவிடவில்லை. இப்போதும்கூட எனக்கு அந்தத் தபேலா சத்தம் கேட்பதுபோல் இருக்கிறது” (பலமாகச் சிரிக்கிறார்).

 “யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றது. அந்த வெற்றிக்கான ‘X Factor’ என்று எதை நினைக்கிறீர்கள்?”

“கபில்தான்... அவர்தான் இந்திய அணியின் முகத்தை மொத்தமாக மாற்றியவர். மிகவும் தீர்க்கமான வீரர். என்னைப் பொறுத்தவரை அவர்தான் வெற்றிக்கான எண்ணத்தை விதைத்திருப்பார். அப்போதைய இந்திய அணி அவ்வளவு தைரியமான அணி இல்லை. வீரர்கள் எளிதில் தளர்ந்துவிடுவார்கள். அதற்குமுன் அவர்களிடம் பெரிதாகப் போராட்ட குணத்தைப் பார்த்ததில்லை. ஆனால், கபில் அதையெல்லாம் மாற்றினார். களத்தில் வீரர்களைச் சோர்ந்துபோக விடமாட்டார். மொத்த அணியின் திறனையும் ஒற்றை ஆளாகத் தூக்கி நிறுத்தினார். நிச்சயம், அவர்தான் 1983 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல முக்கியக் காரணம்.”

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!

“ஃபைனலில், நீங்கள் அடித்த அந்த ஷாட்டை கபில் பிடித்துவிடுவார் என்று நினைத்தீர்களா?”

“உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், அந்த இடத்தில் அமர்நாத், கவாஸ்கர் போன்றவர்களில் யாரையாவது பார்த்திருந்தால், ‘நிச்சயம் எனக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது’ என்று நினைத்திருப்பேன். ஆனால், அந்த இடத்தில் கபில்தேவைப் பார்த்த நொடியே ‘எனக்கு வாய்ப்பு இல்லை’ என்பதை முடிவு செய்துவிட்டேன். அவர் கேட்ச்சைப் பிடிப்பதற்கு முன்பே என் கிளவுஸ்களைக் கழற்றி நடக்கத் தொடங்கிவிட்டேன். ரசிகர்கள் எழுப்பிய பெருஞ்சத்தம், அவர் அதைப் பிடித்துவிட்டார் என்பதை உறுதி செய்தது. கபில் நிச்சயம் அதைத் தவறவிடமாட்டார் என்று எனக்குத் தெரியும்.”

“2019 உலகக் கோப்பை பற்றி உங்கள் எதிர்பார்ப்பு என்ன, யார் உங்கள் வெற்றியாளர்?’’

“இங்கிலாந்து மிகவும் பலமாக இருக்கிறது. சொந்த மண்ணில் நடப்பதால், முன் எப்போதையும்விட நல்ல வாய்ப்பு இருக்கிறது. எப்போதுமே அரையிறுதி, இறுதிகளில் வந்து வீழ்ந்துவிடுவார்கள். இந்தமுறை முயற்சி செய்தால் கோப்பையை வெல்லலாம். அதேபோல இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் பலமாக இருக்கின்றன. எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலியாவையும் இந்தப் போட்டியிலிருந்து விலக்கிவிட முடியாது. ஆரோக்கியமான போட்டி இருக்கப்போகிறது. ”

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!“இந்த உலகக் கோப்பையில் ஜொலிக்கப்போகும் ஒரு பேட்ஸ்மேன், ஒரு பௌலர்?!”

“ஆல்ரவுண்டர்கள்தான் இந்த உலகக் கோப்பையில் ஜொலிப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்போது நிறைய ஆல்ரவுண்டர்கள் மிகச் சிறப்பாக ஆடுகிறார்கள். அந்த வகையில் என்னுடைய முதல் சாய்ஸ் ஆண்ட்ரே ரஸல். அவர் உலகக் கோப்பையில் விளையாடினால், நிச்சயம் அசத்துவார். பென் ஸ்டோக்ஸ், ஹர்திக் பாண்டியா, மேக்ஸ்வெல் போன்றவர்களும் பட்டையைக் கிளப்புவார்கள்.”

“வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டி-20 தொடர்களில் விளையாடுவதும், போர்டுக்குள் இருக்கும் சிக்கல்களும்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரச்னையா?”

“இந்த விஷயத்தில் வீரர்களைக் குறைசொல்ல முடியாது. நிர்வாகம் சரியாக இருந்திருந்தால், அவர்கள் யாரும் தேசிய அணிக்கு விளை யாடாமல் இருந்திருக்க மாட்டார்கள். கிரிக்கெட் சங்கம் சரியாக வேலை செய்திருக்கவேண்டும். அணியின் பிரச்னைகள் எதையுமே நிர்வாகம் இதுவரை கண்டு கொள்ள வில்லை. பயிற்சியாளர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். மிகப்பெரிய மாற்றம் தேவை.”

“வெஸ்ட் இண்டீஸ் அணியின் உலகக் கோப்பை வாய்ப்பு பற்றி...”


“அதிர்ஷ்டம் இருந்தால் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதிக்கு முன்னேறும். முன்னேறும் என்று நம்புவோம் (சிரிக்கிறார்). ஆனால், அதற்குமுன் மாற்றவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு நல்ல பயிற்சியாளரை முதலில் நியமிக்க வேண்டும். அணியின் தேவை என்ன என்பதை சரியாக ஆலோசித்துச் சரிசெய்ய வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அப்போதுதான் மற்ற அணிகளோடு சரிசமமாகப் போட்டியிட முடியும். அதற்கு அதிர்ஷ்டமும் கொஞ்சம் கைகொடுக்கும் என்று நம்புகிறேன்.”

“இப்போதைய இந்திய அணி பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?”

“உலகின் மிகவும் வலுவான அணி. வீழ்த்த முடியாத அணி. நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளனர். மிகவும் ஃபிட்டாக இருக்கிறார்கள். அப்போதெல்லாம் இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்புவார்கள். ஆனால்,  இன்றைய வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். மிகச் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். ஒரு அணிக்குத் தேவையான அனைத்துமே இந்திய அணியிடம் இருக்கிறது. விராட் கோலி வேறு இருக்கிறார்... வேறு என்ன வேண்டும் ஒரு சிறந்த அணிக்கு?”

“விராட் கோலி...”

“நான் அவரின் ரசிகன். சவால்களை மிகவும் விரும்புகிறார். அதைத்தான் நான் விரும்புகிறேன். அதுதான் அவரை மற்ற வீரர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. எல்லோரும் அவருடைய ஆட்டிட்யூடைக் குறைசொல்கிறார்கள். அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன். உங்கள் கன்னத்தில் ஒருவர் அறைந்தால், இன்னொரு கன்னத்தைக் காட்டுவீர்களா என்ன? நிச்சயம் இல்லை. கண்டிப்பாக நாம் அவர்களைத் தாக்கவேண்டும். இதுநாள்வரை, எதிரியின் கன்னத்தைப் பதம்பார்த்துக்கொண்டே இருந்தவர்களை (ஆஸ்திரேலிய அணி), யாரேனும் எதிர்த்துத்தானே ஆகவேண்டும். நாங்களும் அவர்களை எதிர்த்திருக்கிறோம். இப்போது விராட் அதைச் செய்கிறார். அதனால் அவரை எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது.
 
“ஆனால், இப்போதெல்லாம் வீரர்கள் ஸ்லெட்ஜ் செய்தாலோ, ஓவர் ரியாக்ட் செய்தாலோகூட ரசிகர்கள் அவர்கள்மீது பாய்கிறார்களே?!”


“அது கிரிக்கெட்டுடன் ஒன்றிப்போனது. இதற்கு முன்பும் இருந்திருக்கிறது. இனியும் இருக்கும். அது எல்லை மீறினால்தான் தவறு. எதிரணி வீரர்களை பர்சனலாகத் தாக்குவது, குடும்பத்தை இழிவு படுத்திப் பேசுவது போன்ற செயல்களை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், மற்ற சின்னச் சின்னத் தகராறுகள், வாக்குவாதங்கள் இருக்கத்தான் செய்யும். ஆரோக்கியமான மோதல்கள் நிச்சயம் விளையாட்டுக்கு நல்லது.”

``இந்தியப் பயணம் எப்படி இருக்கிறது?’’

``நான் முதலில் இங்கு வந்தபோது மெட்ராஸாக இருந்தது. இப்போது சென்னையாக மாறியிருக்கிறது. கல்கத்தாவைக் கொல்கத்தா என்கிறார்கள்; பாம்பேயை மும்பை என்கிறார்கள். நகரங்களின் பெயர்கள் மாறியிருந்தாலும் ஊர்கள் அப்படியேதான் இருக்கின்றன. ஒவ்வொரு ஊரின் உணவுகளையும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் ஹைதராபாத்தில் பிரியாணி சாப்பிட்டேன். ரொம்பப் பிடித்திருந்தது. இங்கும் (சென்னை) பிரியாணி சாப்பிடப்போகிறேன்!’’

தா.ரமேஷ், மு.பிரதீப் கிருஷ்ணா - படம்: பா.காளிமுத்து 

அடுத்த உலகக்கோப்பை ஆல்ரவுண்டர்களுடையது!

விவியன் ரிச்சர்ட்ஸ் ஃபேவரிட்

பி
ரீமியர் லீக் கால்பந்தாட்டப் போ ட்டிகளின் மிகப்பெரிய ரசிகர் ரிச்சர்ட்ஸ். லிவர்பூல் அணிதான் இவரது ஃபேவரிட். கடந்த சில ஆண்டுகளாக கோப்பை வெல்லாத அந்த அணி, இந்த முறை புள்ளிப் பட்டியலின் முதலிடத்தில் இருப்பதால், ‘கோப்பை எங்களுக்கே’ என்று அடித்துச் சொல்கிறார்.

“உங்களுக்குப் பிடித்த சூப்பர் ஹீரோ” யார் என்ற கேள்விக்கு விவியன் சொன்ன பதில் - முகமது அலி!

தன் முதல் சர்வதேச சதத்தை அடித்த மைதானம் என்பதால் டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் மீது உணர்வுபூர்வமான பிணைப்பு கொண்டவர்.

இன்றைய பௌலர்களில், விவியனை மிகவும் கவர்ந்தவர் - பும்ரா!

காட்ஃபாதர் சீரிஸ் படங்களின் தீவிர ரசிகர். மூன்று பாகங்களையும் ஏராளமான முறை பார்த்திருக்கிறார்.