
விளையாட்டுஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி
சமீபகாலமாக விராட் கோலி பக்குவப்பட்டுவிட்டார் என எல்லோருமே நினைத்துக்கொண்டிருக்க, ஆஸ்திரேலியாவில் மீண்டும் கட்டுப்பாடற்றவராகத் தன்னை முன்னிறுத் திக்கொண்டிருக்கிறார், முன்மாதிரியாக இருக்க வேண்டிய கேப்டன் விராட் கோலி. ஆஸ்திரேலிய வீரர்களோடு வார்த்தை மோதலாக இருந்ததை, ஒரு கட்டத்தில் உடல் மோதலாக மாற்றி கிரிக்கெட் உலகையே முகம்சுளிக்க வைத்திருக்கிறார்.

எல்லாமே எக்ஸ்ட்ரா!
‘`மனுஷனுக்கு இந்த எக்ஸ்ட்ராவால்தான் பிரச்னை. எக்ஸ்ட்ரா பேசக் கூடாது, எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா கோபப்படக் கூடாது’’ என ‘பேட்ட’ ஆடியோ ரிலீஸில் ரஜினி சொன்னார். ரஜினி சொன்ன அதே எக்ஸ்ட்ரா பிரச்னைதான் விராட் கோலிக்கும். எக்ஸ்ட்ரா கோபம், எக்ஸ்ட்ரா உணர்ச்சிவசப்படுதல், எக்ஸ்ட்ரா ஆர்வம்தான் விராட் கோலி என்னும் தலைவனை வீழ்த்துகிறது. தலைவன் வீழ்ந்தால் அணியும் வீழும். தோல்விகள் தொடரும். ஆமாம், ஒரு தலைவன் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அதற்கான முன்னுதாரணமாக மாறிக் கொண்டிருக்கிறார் விராட் கோலி.

‘`அக்ரஸன் என்றால் என்னைப் பொறுத்தவரை என்னவிலை கொடுத்தாவது வெற்றி பெற்றுவிடவேண்டும். வெற்றிக்காக 120 சதவிகிதம் என்னைக்கொடுப்பேன். அது பேட்டிங்காக இருந்தாலும் சரி, ஃபீல்டிங்காக இருந்தாலும் சரி... யாரையாவது உற்சாகப்படுத்துவதற்குக் கைதட்டுவதற்காக இருந்தாலும் சரி, பென்ச்சில் உட்கார்ந்திருந்தாலும் கூட என்னுடைய அணுகுமுறை இப்படித்தான் இருக்கும்’’ என்று ஆஸ்திரேலிய தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு இந்த `எக்ஸ்ட்ரா ஆவேசம்’ பற்றிய விமர்சனங்களுக்கு பதில் சொன்னார் விராட். இவ்வளவும் இங்கிலாந்தில் 4-1 என டெஸ்ட் தொடரை இழந்தபிறகு கோலியிடம் இருந்து வந்து விழுந்த வார்த்தைகள்.
சிறந்த அணியா... சுமாரான அணியா?!
``கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி இதுதான்’’ என்று இங்கிலாந்துத் தொடருக்கு முன்பாகச் சொன்னார் கேப்டன் கோலி. அவர் வார்த்தைகளில் இன்னோர் உள்ளர்த்தமும் இருப்பதையும் புரிந்துகொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் சிறப்பான அணிக்குத் தலைமை தாங்கியிருக்கும் சிறந்த கேப்டனும் அவர்தான் என்பதே அது. கோலி அவர் தலைமையேற்று நடத்தும் அணியை மிகச்சிறப்பான அணியாக நினைக்கலாம். ஆனால், அவர் தலைமையிலான தற்போதைய அணிதான் கடந்த 15 ஆண்டுகளில் சுமாரான அணி.

சொதப்பல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள், டெஸ்ட் கிரிக்கெட்டின் தன்மைகளைப் புரிந்துகொள்ளாத மிடில் ஆர்டர், சுழலுக்கு சாதகமான பிட்சுகளில் சோபிக்காத ஸ்பின்னர்கள்தான் இங்கிலாந்தில் இந்தியா 4-1 தோல்வியைத் தழுவக் காரணம். ஆனால், இந்தத் தோல்விகளில் இருந்து ஒரு பாடத்தைக்கூட கோலி கற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான உதாரணங்கள்தான் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்திருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும்.
டெக்னிக்ஸ் வேண்டாம்!
`ஓகே... ஒரு வீரராக கோலி அக்ரசிவ்வாக இருக்கிறார்... அதனால் இந்திய அணிக்கு என்ன பாதிப்பு?’
கோலியால் சரியான ப்ளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்க முடியாததற்கு மிக முக்கியக் காரணமே அவரின் இந்த ஆட்டிட்யூட்தான். தன்னைப்போலவே வெற்றிக்காக மட்டுமே மூர்க்கமாக மோதும் 11 பேரைத்தான் தன் அணிக்குள் சேர்க்கவேண்டும் என நினைக்கிறார் கோலி. சாதுவான, அமைதியான, டெக்னிக்ஸுடன் விளையாடும் வீரர்கள் அவர் கண்முன் தெரிவதில்லை. கோலியின் அணிக்குள் ஒரு வீரர் இருக்கவேண்டும் என்றால் அவர் ஓவர் அக்ரசிவ்வாக இருந்தால் போதும். ஒரு கேட்சைப் பிடித்துவிட்டு மைதானம் முழுக்க வெறித்தனமாக ஓடினால்போதும், எதிர் அணியின் பேட்ஸ்மேனைத் திட்டினால்போதும், தொடையைத் தட்டி ‘நான் யார் தெரியுமா’ என ரசிகர்களிடம் கெத்து காட்டினால் போதும். அதனால்தான் எவ்வளவு சொதப்பினாலும் ஷிகர் தவானும், கே.எல்.ராகுலும் அணியில் இடம்பிடிக்க முடிகிறது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில், அதுவும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டெஸ்ட்டில் இடம்பிடித்திருக்க வேண்டியவர் புவனேஷ்வர் குமார். ஆனால் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவே அணியில் இடம்பிடித்தார். இதற்குக் காரணமும் தான் எதிர்பார்க்கும் அக்ரசிவ்னஸ் புவனேஷ்வர் குமாரிடம் இல்லை என்கிற முன்முடிவுதான். ‘இந்திய பெளலர்களின் வேகத்தைப் பார்த்தே மிரளவேண்டும்’ என நினைக்கிறாரே தவிர ஆடுகளத்துக்கு ஏற்ப டெக்னிக்கலாகப் பந்துவீச வேண்டும், ஸ்விங் செய்யவேண்டும் என்றெல்லாம் கோலி யோசிப்பது இல்லை. முதல் டெஸ்ட்டில், டெஸ்ட் போட்டிகளில் விளையாட எல்லாவகையிலும் தகுதியான ஹனுமா விஹாரியை விட்டுவிட்டு ரோஹித் ஷர்மாவைத் தேர்ந் தெடுத்ததும் அப்படித்தான்.
ஆர்வக்கோளாறு கேப்டன்ஸி!
ஆஸ்திரேலியத் தொடரில் கோலி ஆவேசத்தில் அடுத்தகட்டத்துக்குச் சென்றிருப்பது தெரிகிறது. முதலில் அவர் மட்டும்தான் மைதானத்தில் கண்டபடி பேசிக்கொண்டிருப்பார். இப்போது அவருக்குத் துணையாக ரிஷப் பன்ட்டையும் வளர்த்தெடுக்
கிறார். ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியிருக்கும் ரிஷப் பன்ட் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்தி ரசிக்கிறார். ``இன்னும் அவங்களை எரிச்சல்படுத்து’’ என்பதுதான் கோலி ஒரு இளம்வீரருக்குச் சொல்லித்தரும் பாடமா?

அடுத்து, அவசரம்... எல்லாவற்றிலும் அவசரம்! பிட்சைப் பார்த்த உடனே ஒரேயடியாக ‘இது வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே சாதகமான மைதானம்’ என ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கூட இல்லாமல் பெர்த் டெஸ்ட்டுக்குள் போக முக்கியக் காரணம் கோலிதான். ஆனால், வேகப்பந்துவீச்சில் வலுவான ஆஸ்திரேலியா ஸ்பின்னரோடும் வந்தது. ஸ்பின்னர் நாதன் லயான்தான் இந்தியாவை முதல் இன்னிங்ஸில் 283 ரன்களுக்குள் சுருட்டக் காரணம். ஆனால், ``அவர் ஸ்பின்னால் விக்கெட்டுகள் எடுக்கவில்லை. பிட்ச்சில் இருந்த எக்ஸ்ட்ரா பவுன்ஸைப் பயன்படுத்தித்தான் விக்கெட் எடுத்தார்’’ எனத் தோல்விக்குப் பிறகும் காரணம் சொல்கிறார் கோலி. தான் எடுத்த முடிவு தவறாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ளும் குணம் தோனியிடம் இருந்தது. டிராவிட்டிடம் இருந்தது. ஏன், கங்குலியிடம்கூட இருந்தது. ஆனால், கோலியிடம் தன் தவற்றை உணர்ந்து திருத்திக்கொள்ளும் எண்ணம் கொஞ்சமும் கிடையாது.
நரிகளின் கூட்டம்!
ரிக்கி பான்டிங் தலைமையில் இருந்த ஆஸ்திரேலிய அணியை ‘நரிகளின் கூட்டம்’ என்று சொல்வார்கள். ஆஸ்திரேலியாவின் ‘அக்ரசிவ் கிரிக்கெட்’ அப்ரோச்சை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுபோனவர் ரிக்கி பான்டிங். அப்போது இதை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுத்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம். ஆனால், தென்னாப்ரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரன் பேங்கிராஃப்ட் ஆகியோர் சிக்கியவுடன் ஆஸ்திரேலிய அணியின் மீதான நம்பகத்தன்மை இடிந்து விழுந்தது. தொடர்ந்து தோல்விகள், அவமானங்களை மட்டுமே சந்திக்க ஆரம்பித்தது ஆஸ்திரேலியா. வெற்றிதோல்விகளை விட மக்கள் மனதில் நல்ல விளையாட்டு வீரர்களாக, மனிதர்களாகப் பெயரெடுப்பதுதான் முக்கியம் என, தன்னுடைய அப்ரோச்சை மொத்தமாக இப்போது மாற்றிக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. ஆனால், கேப்டன் கோலியோ ஆஸ்திரேலியாவின் பழைய அப்ரோச்சை இந்திய அணிக்குள் திணித்துக் கொண்டிருக்கிறார்.
ரோல்மாடல்!
கிரிக்கெட் இந்தியாவில் மதம். குழந்தைகளுக்கான முன்மாதிரிகள். ஆனால் கபில்தேவைச் சொன்னதைப்போல, சச்சின் டெண்டுல்கரைச் சொன்னதைப்போல, தோனியைச் சொன்னதைப்போல இப்போது கோலியை நல்ல உதாரணமாக, குழந்தைகளிடத்தில் சொல்ல முடியாது. மிகத்தவறான முன்னுதாரணமாக மாறிக்கொண்டேயிருக்கிறார் கோலி. வெற்றிக்கான பாதையில் தோல்விகள் என்பது சாதாரணம்.தோல்வியே அடைந்துவிடக் கூடாது என நினைப்பது முட்டாள்தனம். வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பார்க்கவேண்டும் என்பதுதான் நாம் குழந்தைகளிடத்தில் சொல்லிக்கொடுக்கவேண்டிய பாடம். இதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாதவராக இருக்கிறார் கோலி.
வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒருதோல்வி எல்லாவற்றையும் மாற்றிவிடும். பதற்றப்படவைக்கும். இன்னும் மோசமான தோல்விகளை நோக்கி அழைத்துச்செல்லும். கோலி அதை நோக்கித்தான் சென்றுகொண்டிருக்கிறார்!
சார்லஸ்