
பெருங்கடலை வென்றவள்...
குழந்தைகள் தத்தித் தத்தி நடைபழகும் வயதிலேயே, பக்தி சர்மாவின் தாய் லீனா சர்மா, அவளை நீருக்குள் தூக்கிப் போட்டுவிட்டார்.
‘பயப்படாதே! நீந்திப் பழகுடா என் செல்லம்’ என்ற லீனா, தேசிய அளவில் நீச்சலில் சாதித்த வீராங்கனை. அந்தத் தாய்க்கு, தன் மகளை உலக அளவில் நீச்சலில் பிரபலப்படுத்தும் கனவு இருந்தது. மகளும் அந்தக் கனவை ஏற்று எதிர்நீச்சல் போட ஆரம்பித்தாள். ஆம், நான்கு வயதிலேயே ஆறடி ஆழத்தில் ஆனந்தமாக நீச்சல் அடித்தாள்.

1989-ம் ஆண்டு, மும்பையில் பிறந்த பக்தி சர்மா, ராஜஸ்தானின் உதய்பூரில் வளர்ந்தாள். அங்கே பயிற்சிகளுக்கேற்ற நீச்சல் குளங்கள் இல்லை. அதனால், சில வருடங்கள் நீச்சல் தடைபட்டது. பிறகு, ஒரு பள்ளியில் நீச்சல் குளம் கட்டப்பட்டபோது. அந்தக் குளத்தில் பக்தியின் தாய் லீனாவே தினமும் 5 மணி நேரம் பயிற்சி கொடுக்கத் தொடங்கினார். அதேசமயம், படிப்பிலும் மதிப்பெண்கள் குறைந்துவிடக் கூடாது என கண்டிப்புடன் இருந்தார். ‘எதை வேண்டுமானாலும் செய். ஆனால், 100 சதவிகித ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய். இல்லையென்றால் எதையும் செய்யாதே!’ என்பார் லீனா.
பக்தி, மாநில அளவிலான நீச்சல் போட்டிகளில் வெற்றிகளைச் சந்தித்தாள். பிறகு, தேசிய அளவிலான போட்டி ஒன்றுக்கு அனுப்பப்பட்டாள். அப்போது வயது 8. போட்டி ஆரம்பிக்கும் முன், தன்னைவிட மூத்தவர்களுடன் குளத்தில் குதிக்கத் தயாராக நின்றாள் பக்தி.
போட்டியின் நடுவர் பக்தியின் தாயாரிடம் ‘சிறுமியாக இருக்கிறாளே... இவளால் போட்டி தூரத்தைக் கடக்க முடியுமா?’ என்றார்.
பக்தி சர்மா குளத்தில் குதித்தாள். தனது முதல் தேசிய அளவிலான போட்டியில், இறுதி இடத்தையே பிடித்தாள். ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் போட்டி தூரத்தை நீந்திக் கடந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினாள்.
லீனா, ‘கடைசி என்று நினைக்காதே. 8 வயதில் இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்கிறாய்’ என உற்சாகப்படுத்தினார்.

அதன்பின், தேசிய அளவிலான பல்வேறு நீச்சல் போட்டிகளில் வென்றாள் பக்தி சர்மா. 14 வயதில் தன் தாயின் ஆலோசனைப்படி, தன் வாழ்வின் முக்கியமான முடிவை எடுத்தார். நீச்சல் குளப் போட்டிகளில் நீந்துவதற்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். ஆனால், கால்வாய், கடல், பெருங்கடல் போன்ற திறந்தவெளி நீச்சலில் (Oper water swimming) நீந்தும் வீராங்கனைகள் இந்தியாவில் மிகக்குறைவு. அந்தப் பிரிவில் சாதிக்கலாம் என்று முடிவெடுத்தார் பக்தி சர்மா.
நீச்சல் போட்டிகளுக்கான பயிற்சிகளைவிட, திறந்தவெளி நீச்சல் போட்டிகளுக்கான பயிற்சிகள் மிகக் கடுமையானவை. ஒவ்வொரு நாளும் கணக்குவழக்கின்றி பல மணி நேரம் நீச்சல் பழக வேண்டும். வெவ்வேறு தன்மைகொண்ட நீர்நிலைகளில், வெயிலோ, மழையோ, குளிரோ தாக்குப்பிடித்து நீந்த வேண்டும். அதற்கேற்ப உடல் வலிமையைப் பெருக்க வேண்டும். முனைப்புடன் களமிறங்கினார் பக்தி சர்மா.
குளிர்காலங்களில் நீச்சல் குளத்துக்கு யாரும் வரமாட்டார்கள். ஆனால், சிறப்பு அனுமதிபெற்று பக்தியும் லீனாவும் செல்வார்கள். வெப்பநிலை 5 அல்லது 6 டிகிரியே இருக்கும். பக்தி சர்மாவோ, நான்கைந்து மணி நேரம் தொடர்ந்து பயிற்சி எடுப்பார்.

திறந்தவெளி நீச்சல் போட்டிகளில் பங்கேற்ற பக்தி, ஆரம்பத்தில் தோல்விகளையே சந்தித்தார். சில போட்டிகளில் பந்தய தூரத்தை முழுவதும் கடக்க முடியாமல் விலகினார். ஆனால், அதையெல்லாம் தோல்வியாக நினைக்கவில்லை. அடுத்தடுத்த இலக்குகளை நோக்கி நீந்திக்கொண்டே இருந்தார்.
2006-ம் ஆண்டில், இங்கிலீஷ் கால்வாயை நீந்திக் கடந்தார். பக்தி, லீனா, பிரியங்கா என்று மூவரணி இந்தச் சாதனையைச் செய்தது. தாயும் மகளும் இணைந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்தது, புதிய உலக சாதனையாகப் பதிவானது.
சுவிச்சர்லாந்தில் வருடந்தோறும் நடைபெறும் மிகப்பெரிய நீச்சல் மாரத்தான் போட்டி, லேக் ஜூரிச் ஸ்விம் (Lake Zurich Swim). அதில் வெற்றிபெற்றார் பக்தி. 2007-ம் ஆண்டு, மெக்ஸிகோ வளைகுடா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் என ஒரே ஆண்டில், அமெரிக்காவின் மூன்று முக்கியப் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார். அதே ஆண்டில் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்து சாதனை படைத்தார்.
அடுத்த கடுமையான இலக்கு, பனிப்பாறைகள் மிதக்கும் ஆர்டிக் பெருங்கடலில் நீந்துவது. 2010-ம் ஆண்டு, 33 நிமிடங்களில் 1.8 கி.மீ ஆர்ட்டிக் பெருங்கடலில் நீந்திக் கரையேறினார் பக்தி.
ஆர்ட்டிக்கைவிட கொடுமையானது அண்டார்டிகா. சில ஆண்டுகள் கடினமான பயிற்சிகள் மேற்கொண்ட பக்தி, 2015-ம் ஆண்டில், அண்டார்டிகாவின் கடலில் குதித்தார்.
1 டிகிரி செல்ஷியஸில் உறையவைக்கும் குளிர். அதிக அடர்த்தியான நீர். ஒவ்வொரு அடியும் நீந்துவதற்குக் கடினமாகவே இருந்தது. விட்டுவிடலாம் என்று உடல் சொன்னது. ‘விடாதே... இது உன் வாழ்வின் கனவு’ என்று மனம் உந்தித் தள்ளியது.

தன்னுடனே ஒரு பெங்குவின் நீந்தி வருவதைக் கண்டார் பக்தி. உற்சாகம் தொற்றிக்கொண்டது. 41.14 நிமிடங்களில் 2.28 கிலோமீட்டரை நீந்திக் கடந்தார். ‘அண்டார்டிக் கடலில் அதிக தூரம் நீந்திய முதல் ஆசியப் பெண்’ என்ற புதிய உலக சாதனையுடன் கரையேறினார்.
‘உலகின் ஐந்து பெருங்கடல்களிலும் மிகக்குறைந்த வயதிலேயே நீந்திய முதல் ஆசியப் பெண்’ என்ற சாதனையும் பக்தி வசம்தான். இந்தச் சாதனையை உலக அளவில் நிகழ்த்திய முதல் பெண்ணும் பக்திதான்.
2010-ம் ஆண்டில், தேசிய அளவில் சாகசத்துக்காக வழங்கப்படும் ‘டென்சின் நார்கே விருது’, பக்திக்கு வழங்கப்பட்டது. இன்னும் பல விருதுகளையும் பக்தி பெற்றிருக்கிறார்.
தற்போது, பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், நிறுவனங்களுக்குச் சென்று, தன் அனுபவத்தால் தன்னம்பிக்கை உரைகள் ஆற்றிவருகிறார்.
2020-ம் ஆண்டு நடைபெறப்போகும் டோக்கியோ ஒலிம்பிக்கில், திறந்தவெளி நீச்சலில் இந்தியாவுக்கு பதக்கம் வாங்கிக்கொடுக்கும் முனைப்புடன் இப்போது நீந்திக்கொண்டிருக்கிறார்.
பக்தி சர்மா – இந்தியாவின் நம்பிக்கை.
- முகில்