தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

மெர்சல் பெண்கள்!

மெர்சல் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மெர்சல் பெண்கள்!

ஸ்போர்ட்ஸ் ஸ்டார்ஸ்

எலீனா இசன்பயேவா  போல்வால்ட்  ரஷ்யா

2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவுக்குத் தடைவிதிக்கப்பட்டதால், இசன்பயேவா பங்கேற்கமுடியாமல் போனது. “நான் இல்லாத இந்த ஒலிம்பிக்கில், போல்வால்டில் யார் தங்கம் வென்றாலும் அது உண்மையான தங்கம் கிடையாது” என்று அறிவித்தார் இவர். அதை அகம்பாவத்தால் வந்த வார்த்தைகளாக மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், இவர் இல்லாமல் வாங்கிய அந்தத் தங்கத்துக்கு உண்மையில் அர்த்தம் இல்லைதான். ஏனெனில், போல்வால்ட் அரங்கில் 28 சாதனைகள் படைத்து தன்னிகரில்லா வீராங்கனையாக விளங்கியவர் இவர். போல்வால்ட் வரலாற்றில் முதன்முதலாக 5 மீட்டர் உயரத்தைத் தாண்டியவரும் இவர்தான். முறியடிக்கப்படாமலிருக்கும் பல உலக சாதனைகளுக்குச் சொந்தக்காரரும், மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவரும் இவர்தான்.

  பிளம்பர் அப்பாவுக்குப் பிறந்த எலீனா, கடந்த ஆண்டு ஓய்வுபெறுவதாக அறிவித்தார். 5.06 மீட்டர் தாண்டிய இவரது உலக சாதனை முறியடிக்கப்பட இன்னும் 20 ஆண்டுகள்கூட ஆகலாம்!

மெர்சல் பெண்கள்!

செரீனா வில்லியம்ஸ்  டென்னிஸ் அமெரிக்கா

சந்தேகமே இல்லை... 21-ம் நூற்றாண்டின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனை செரீனாதான். 14 வயதானபோதே புரஃபஷனல் டென்னிஸ் அரங்கினுள் நுழைந்தார். “தரவரிசையில் 200-வது ரேங்குக்கு மேல் இருக்கும் எந்த ஆணையும் எங்களால் வீழ்த்திட முடியும்” என்று தன் சகோதரி வீனஸோடு இணைந்து 16 வயதிலேயே சவால்விட்டவர் இவர். அன்று அந்த சவாலில் தோற்றிருந்தார். ஆனால், இந்த இருபது ஆண்டுகளில் பல ஆண் வீரர்களே வியக்கும் வகையில், 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்,

நான்கு ஒலிம்பிக் மெடல்கள் வென்று மெர்சல் காட்டியுள்ளார். இப்போது விளையாடிவரும் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளவர் இவரே.

319 வாரங்கள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா, நிறவெறியால் தாக்கப்பட்டவர், போதை மருந்து உட்கொள்ளாத போதும் மீடியாவால் சாடப்பட்டவர். இவை எதுவும் இவரை தடுக்கவில்லை. மனபலம்கொண்டு அனைத்தையும் தாண்டி இன்னும் ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குழந்தை பெற்றெடுத்தவர், அதன்பின்னும் கிராண்ட்ஸ்லாம் ஃபைனல் வரை முன்னேறி அசரடித்தார். செரீனாவின் உறுதிகண்டு மொத்த விளையாட்டு உலகமும் வியந்துகிடக்கிறது.

நிகோலா ஏடம்ஸ் பாக்ஸிங் இங்கிலாந்து

அம்மாவை அடிக்க அப்பா கை ஓங்கியபோதெல்லாம், அவரைக் காப்பாற்ற பிளாஸ்டிக் கத்தியோடு அன்று குறுக்கே நின்ற அந்த தைரியமான சிறுமிதான் இன்று பாக்ஸிங் அரங்கின் குயின். 2012 ஒலிம்பிக்ஸில் பெண்கள் பாக்ஸிங் அறிமுகப் படுத்தப்பட, அதில் முதல் தங்கத்தை வென்று வரலாறு படைத்தார். அரையிறுதியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மேரி கோம் தோல்வியடைந்தது இவரிடம் தான்.

13 வயதில் கையில் க்ளவுஸோடு பாக்ஸிங் செய்யத் தொடங்கிய ஏடம்ஸ் இப்போது டபுள் ஒலிம்பிக் சாம்பியன். ஆம்... ரியோ ஒலிம்பிக்கிலும் தங்கம் இவருக்கே. லேடீஸ் பாக்ஸிங்கின் மைக் டைசன் என்றும் இவரைக் கூறலாம். ஏனெனில், இப்போது புரஃபஷனல் பாக்ஸிங்கிலும் கால் பதித்துள்ளார். இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளிலும் வெற்றி. அதில் மூன்று நாக் அவுட். மக்களின் அமைதி, மனநலம் போன்ற விஷயங்களில் அக்கறை செலுத்தும் ஏடம்ஸ், விளையாட்டு வெற்றிகளைத் தாண்டி ஒரு பெண்ணாகவும் பலவகையில் ரோல் மாடலாக விளங்குகிறார்.

- மு.பிரதீப் கிருஷ்ணா