
பிட்ஸ் பிரேக்

பாலோ குரேரோ
ஊக்கமருந்து தடையிலிருந்து மீண்டு உலகக் கோப்பைக்குள் நுழைந்திருக்கிறார் பெரு நாட்டின் வீரர் பாலோ குரேரோ. தகுதிச்சுற்றுப் போட்டியின்போது கோகெய்ன் பயன்படுத்தியது தெரியவர, 2018 நவம்பர் வரை தடைசெய்யப்பட்டார் குரேரோ. அவர் பிறப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்பு கடைசியாக உலகக் கோப்பையில் விளையாடியது பெரு. இப்போது மீண்டும் தகுதி பெற்றிருக்கிறது.

ஆனால், அவருக்குத் தடை. அந்தத் தடையை எதிர்த்து ஃபிஃபாவில் இவர் மேல்முறையீடு செய்ய, வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்க, ஒரு வழியாகத் தடையை இடைக்காலமாக நீக்கியுள்ளது ஃபிஃபா. பெரு அணியின் டாப் ஸ்கோரரான குரேரோ இன்னமும்கூட அந்நாட்டு மக்களின் பெரிய நம்பிக்கைதான்!

பால் போக்பா
தன் ஆட்டத்தைவிட, தன் ஹேர்ஸ்டைலுக்கு அதிக ரசிகர்கள் கொண்டவர் பால் போக்பா. ஃபிரான்ஸ் மற்றும் மான்செஸ்டர் யுனைடட் அணியின் நடுகளத்தில் பட்டையைக் கிளப்பும் இவர், வாரத்துக்கு ஒரு ஹேர்ஸ்டைல் மாற்றுவார். மொஹாவ்க், சைட் பார்ட், ஸ்பைக் என ஸ்டைல்களை மட்டும் மாற்றாமல் தன் டி-ஷர்ட்டுக்கு ஏற்ப, கலர்களையும் மாற்றிக்கொண்டே இருப்பார். அவ்வப்போது தலையில் பெயர்களும் எழுதிக்கொள்வார். இவரது விதவித கெட்டப்களை வைத்து ஒரு புகைப்படக் கண்காட்சியே வைக்கலாம். உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரில் மனிதர் எந்தெந்த கெட் அப்களில் வந்து கலக்குவார் என்று பார்க்க அவரது ரசிகர்கள் கலர்களும் கத்தரிக்கோலுமாக வெயிட்டிங்!

தாமஸ் முல்லர்
உலகக் கோப்பை வந்துட்டா சின்ராச கையில் புடிக்க முடியாது. கிளப் போட்டிகளில் சுமாராக விளையாடினாலும், உலகக்கோப்பையில் டாப் கியர் எடுத்துவிடுவார் தாமஸ் முல்லர். 2010 உலகக்கோப்பையில் 5 கோல்கள் அடித்து, ‘சிறந்த இளம் வீரர்’ விருது வாங்கியவர், 2014 உலகக்கோப்பையிலும் 5 கோல்கள் அடித்து ஜெர்மனி, கோப்பை வெல்ல உதவினார். தற்போதுள்ள வீரர்களில் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்துள்ளவர் இவர்தான். கோல்டன் பூட், கோல்டன் பால், உலகக்கோப்பையில் அதிக கோல்கள் என விருதுகளையும் சாதனைகளையும் ரஷ்யாவில் தன்வசப்படுத்தக் காத்திருக்கிறார்.
தொகுப்பு: மு.பிரதீப் கிருஷ்ணா

லூயிஸ் சுவாரஸ்
கடந்த உலகக் கோப்பையில் இத்தாலி வீரர் சீலினியைக் கடித்து பெரும் பரபரப்பை உண்டாக்கினார் பல்வாள்தேவன் சுவாரஸ். ஏற்கெனவே 2010, 2013 ஆண்டுகளில் அதேபோல் இரண்டு வீரர்களைக் கடித்து தண்டனை பெற்றிருந்ததால், `எனக்கு இதெல்லாம் புதுசில்ல' என்று கூலாகக் கடந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பல்லை வைத்துக்கொண்டு சும்மாதான் இருக்கிறார். இந்த முறை உருகுவே அணியின் மிகமுக்கிய ஆயுதம் இவரே. சீனியர் ஆகிவிட்டதாலும் குட் பாயாகவே இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

ஆண்ட்ரே இனியஸ்டா
2010 உலகக் கோப்பை ஃபைனலின் வெற்றி நாயகன் இனியஸ்டாமீது மீண்டும் நம்பிக்கை வைத்துள்ளது ஸ்பெயின். ஸ்பெயினை எதிர்த்து விளையாடும் அணிகள் வெற்றி பெறவேண்டுமெனில் இவருக்கு மட்டும் தனி ஸ்கெட்ச் போடவேண்டும். மிட்ஃபீல்டில் ஆதிக்கம் செலுத்தி மொத்த மேட்சையும் தன் கன்ட்ரோலில் வைத்திருக்கும் வித்தகன். அணியின் சீனியர் வீரர் இவர்தான். கேப்டன் செர்ஜியோ ரமோஸ், ஜெரார்டு பிக்கே, டியாகோ கோஸ்டா என ஆங்க்ரி பேர்டு வீரர்கள் அணியில் அதிகம் இருப்பதால், அவர்களைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பும் மிஸ்டர் கூல் இனியஸ்டாவிடம்தான்.