தொடர்கள்
Published:Updated:

“தீபிகாவைச் சந்திக்கவே முடியலை!”

 “தீபிகாவைச் சந்திக்கவே முடியலை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“தீபிகாவைச் சந்திக்கவே முடியலை!”

ஆர்.வைதேகி - படங்கள்: க.பாலாஜி

 “இவ  பெயர் ஸாரா. என் செல்லக்குட்டி. தெருவுல இருந்து எடுத்துட்டுவந்தோம். இந்தக் கருப்பியோட பெயர், பக்கு. செம வாலு!’’ வீடு கொள்ளாமல் ஓடித் திரியும் தன் நாய்க்குட்டியையும் பூனைக்குட்டியையும் அறிமுகப்ப டுத்தியபடி வரவேற்கிறார் ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பா. காமன்வெல்த்தில் வெள்ளி வென்று திரும்பியவரை வாழ்த்துகளோடு சந்தித்தேன்.

``காமன்வெல்த்ல விளையாடுறது செம ஃபீல். இந்த முறை சில்வர்தான் ஜெயிக்க முடிஞ்சது. கோல்டு மெடல் வாங்க முடியலையேங்கிறதுல எனக்கும் தீபிகாவுக்கும் ரொம்பவே வருத்தம்.  ஆனால், காமன்வெல்த்ல விளையாடிட்டு இந்தியா வந்தப்போ, ஏர்போர்ட்டுல அப்படியொரு வரவேற்பு! மக்களும் மீடியாக்களும் வாழ்த்தினதுல நெகிழ்ந்துட்டோம். மெடல் வாங்கினதுக்கு இணையான ஒரு தருணம் அது’’ சிலிர்க்கிறார்.

 “தீபிகாவைச் சந்திக்கவே முடியலை!”

``எனக்கு எட்டு வயசு இருக்கும்போது  அப்பாதான் எனக்கு ஸ்குவாஷை அறிமுகப்ப டுத்தினார். அவரே எனக்குப் பயிற்சியாளராக இருந்து வழிநடத்தினார். மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்ல விளையாட ஆரம்பிச்ச அந்த நாள்கள், எனக்கு இன்னும் நினைவிருக்கு. அப்போ பலருக்கும் ஸ்குவாஷ்னா என்னன்னே தெரியாது. டோர்னமென்ட்டுக்குப் போகணும்னா ஸ்பான்சர்ஸ் கிடைக்க மாட்டாங்க. ஆனாலும் நான் விளையாடுறதுக்கான எல்லா வாய்ப்புகளையும் அம்மாவும் அப்பாவும் ஏற்படுத்திக்கொடுத்தாங்க.

நம்முடைய கனவுகள் வேற... யதார்த்தம் வேறங்கிறது போகப் போகத்தான் புரிஞ்சது. தினம் தினம் ஒரு போராட்டம். என் பெற்றோர் எனக்காக எல்லா அரசியலையும் சமாளிச்சாங்க. எல்லாம் மெள்ள மெள்ள மாறுச்சு. தமிழகத்துல ஸ்குவாஷோடு  நானும் பிரபலமானேன்.

சடார்னு வாழ்க்கையே மாறிடுச்சு. உலகம் முழுக்கப் பயணம், மக்களுடனான சந்திப்பு,  உலகளவுல டாப் லெவல்ல உள்ள ஸ்போர்ட்ஸ் ஆள்களுடனான நட்புனு இந்த ஸ்போர்ட்ஸ் எனக்கு நிறைய கொடுத்திருக்கு. ஆனாலும் தோல்விகளையும் விபத்துகளையும் சந்திக்கிறபோது, கொஞ்சம் உடைஞ்சுதான்போறேன். அடுத்தடுத்த வெற்றிகளுக்கு, தோல்விகள் கொடுக்கற அனுபவங்கள் அவசியம்னு இப்ப புரியுது. காமன்வெல்த்ல கோல்டு மெடல் வாங்க முடியலையேங்கிற வருத்தம் ஒரு பக்கம் இருந்தாலும், எங்களுக்கு எதிரா ஆடினவங்களின் சாதுர்யத்தைப் பாராட்டாம இருக்க முடியலை’’ - வெற்றி-தோல்விகளில் வாழ்க்கைப் பாடம் பயின்றிருக்கிறார் ஜோஷ்னா.

 “தீபிகாவைச் சந்திக்கவே முடியலை!”

ஜோஷ்னாவும் தீபிகாவும் இணையும் போட்டிகள் மிரட்டலானவை. ஸ்குவாஷ் கோர்ட்டைத் தாண்டிய அவர்களது நட்பு அத்தனை அழகானது.

``தீபிகா பிறக்கிறதுக்கு முன்னாடியே அவங்க அக்காவும் நானும் திக் ஃப்ரெண்ட்ஸ். தீபிகாவைக் குட்டிப்பெண்ணாப் பார்த்திருக்கேன். ஸ்போர்ட்ஸ்ல எங்க ரெண்டு பேருக்குமே தனிப்பட்ட லட்சியங்கள் இருக்கு. ஆனாலும், ரெண்டு பேருமே எங்க சொந்த நாட்டுக்காக விளையாடுறோம். இந்தியாவுக்குப் பதக்கங்கள் ஜெயிக்கிறதுல எங்க ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான பொறுப்புஉணர்வும், ஆர்வமும் உண்டு. அதை எங்களுடைய விளையாட்டுல நீங்க பார்க்கலாம்.

ஒரு விஷயம் தெரியுமா? ரெண்டு பேரும் சென்னையில இருக்கோம்னு பேருதான். நாங்க சந்திச்சுக்கிறதே அபூர்வம். அவ்ளோ பிஸி. நாங்க அதிகமா மீட் பண்ணிக்கிறது ஸ்குவாஷ் டோர்னமென்ட்லதான். அதுக்காகவே அவகூட நிறைய விளையாடணும்னு தோணும்’’ நட்பிலக்கணம் சொல்பவர், அடுத்து ஏஷியன் கேம்ஸுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார்.

நிச்சயமா தங்கம் வெல்வீங்க!