Published:Updated:

`எழுந்து நடப்பதே கஷ்டம் என்றார்கள்... உலகின் 7 சிகரங்களில் ஏறிவிட்டேன்!’ - காலின் ஓ பிரடி

`எழுந்து நடப்பதே கஷ்டம் என்றார்கள்... உலகின் 7 சிகரங்களில் ஏறிவிட்டேன்!’ - காலின் ஓ பிரடி
`எழுந்து நடப்பதே கஷ்டம் என்றார்கள்... உலகின் 7 சிகரங்களில் ஏறிவிட்டேன்!’ - காலின் ஓ பிரடி

``நான் கிட்டத்தட்ட செத்து சுண்ணாம்பாகி இருந்தேன். டாக்டர்கள் இனி எழுந்து நடப்பதே ஆச்சர்யம் என்கிறார்கள். வாழ்க்கை முழுக்க வீல்சேரிலேயே கழிந்துவிடுமோ எனப் பதற்றமாக இருக்கிறது. ஆனால், என் தாய் நம்பிக்கையிழக்கவில்லை."

து ஒரு தீவு. அங்கிருந்தது ஒரேயொரு மருத்துவமனை. அதுவும் பாடாவதி மருத்துவமனை. உடம்பு முழுக்க 25 சதவிகித தீக்காயங்களுடன் படுத்திருக்கும் அந்த இளைஞனைச் சுற்றிலும் குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன எலிகள். முழங்காலில் கொப்பளங்கள். பாதம் முழுக்கத் தீப்புண். காலை நகர்த்த முடியாத அளவு இரு கால்களிலும் தோல்கள் உறிந்து, பிய்ந்து தொங்குகின்றன. பார்க்கவே கோரமாக இருக்கிறது. வலி பின்னியெடுக்கிறது. மருத்துவமனையில் சேர்த்து, 24 மணி நேரத்துக்குப் பின் நினைவுதிரும்புகிறது. கண் விழித்துப் பார்த்தபோது டாக்டர்கள் சொன்னது தெளிவாகக் கேட்கிறது. `உயிர் பிழைச்சாலும் எந்திருச்சு நடக்கிறது கஷ்டம்.’ ஆனால், அவர் பிழைத்தார். எழுந்தார். நடந்தார்... எவரெஸ்ட் வரை..! 

வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் ஜீரோவிலிருந்து தொடங்கலாம் என்பதற்குச் சாட்சியாக பலரைப் பார்த்திருப்போம். காலின் ஓ பிரடி (Colin O'Brady) அப்படியொருவர். அமெரிக்காவின் போர்ட்லேண்ட் பகுதியில் பிறந்த காலினுக்கு, அவரது ஜீனிலேயே ஸ்போர்ட்ஸ் கலந்திருந்தது. இளம் வயதிலேயே Cascadia எனும் பசிபிக் நார்த்வெஸ்ட் பகுதியில் உள்ள சின்னச் சின்ன மலைகளில் ஏறுவதைப் பழக்கி வைத்திருந்தார் அவரது தந்தை. மலையேறப் பழகிய கால்கள் களம் காணாமல் இருக்குமா. பள்ளிப் பருவத்தில் காலின் கால்பந்தில் கில்லி. நீச்சல் கைவந்த கலை. கால்பந்து, நீச்சல் இரண்டிலும் தேசிய அளவில் நல்ல ரேங்கிங். நீச்சலில் சாதிக்க வேண்டும் என்பதற்காகவே Yale பல்கலைக்கழகம் அவரைச் சேர்த்துக்கொண்டது. அங்கு 2006-ல் இளங்கலை பொருளாதாரம் படித்து முடித்தார். 

`அட்வெஞ்சர்’ - பிரடியின் ஹாபி என்பதால் டிகிரி முடித்ததும், சர்ஃபிங் போர்டை முதுகில் கட்டிக்கொண்டு டிரிப் கிளம்பி விட்டார். தாய்லாந்து அருகே ஒரு தீவில் இருந்தபோதுதான் அந்த விபத்து நடந்தது. பூர்வகுடிகள் இரவில் தீயை மூட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதைப் பார்த்துக்கொண்டிருந்த காலின், 22 வயதுக்கே உரியத் துடுக்குடன், கீழே தீ எரிந்து கொண்டிருக்க, மேலே கயிற்றில் நடக்க ஆரம்பித்தார். கயிறு அறுந்து கீழே விழுந்தார். உடம்பெங்கும் பற்றி எரிந்தது தீ. சுற்றியிருந்தவர்கள் கத்துகிறார்கள். கதறுகிறார்கள். பதற்றத்தில் தீயை அணைக்க, கடலில் சென்று விழுந்தார் காலின். தீப்புண்ணுடன் உப்பு நீரும் சேர்ந்துகொள்ள காந்தல் கொளுந்துவிட்டது. அது ஒரு தீவு என்பதால், அங்குள்ள மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. இருந்தாலும், வேறு வழியில்லை. 3 நாள்கள் அங்கேயே சிகிச்சை எடுத்தார். தகவலறிந்து அவரது தாய் அங்கு விரைந்தார். 

``என் நிலைமையைப் பார்த்து என் தாய் உள்ளுக்குள் கதறியிருப்பார். ஆனால், அந்த மருத்துவமனையில் இருந்த 5 நாள்களும், முகத்தில் புன்னகையுடன் எனக்குப் பணிவிடை செய்தார். அதுகூடப் பரவாயில்லை. அடுத்து அவர் கேட்டதுதான் உச்சம். `காலின், இங்கிருந்து கிளம்பியதும் அடுத்து என்ன செய்யப் போகிறாய்?...’

எனக்கு ஆச்சர்யம். நான் கிட்டத்தட்ட செத்து சுண்ணாம்பாகி இருந்தேன். டாக்டர்கள் இனி எழுந்து நடப்பதே ஆச்சர்யம் என்கிறார்கள். வாழ்க்கை முழுக்க வீல்சேரிலேயே கழிந்துவிடுமோ எனப் பதற்றமாக இருக்கிறது. ஆனால், என் தாய் நம்பிக்கையிழக்கவில்லை. 3 நாள்கள் கழித்து `நான் டிரையாத்லானில் கலந்துகொள்ளப் போகிறேன்’ எனச் சொன்னேன். கட்டியணைத்துக்கொண்டார். கதகதப்பாக இருந்தது. ஒரு தாயிடமிருந்து மட்டுமே கிடைக்கும் கதகதப்பு அது. அங்கிருந்து வெகு விரைவில் வீட்டுக்கு வந்துவிட்டோம். 

`டிரையாத்லானில் பங்கேற்கலாம். ஆனால், இப்போது...’ எனச் சொல்லிவிட்டு, சமையலறையில் இருந்த ஒரு நாற்காலியை எடுத்து அதை என் வீல் சேருக்கு அருகே வைத்தார் அம்மா. `வீல்சேரிலிருந்து எழுந்து அந்த சேரில் உட்கார்’ என்றார். நான் அந்த ஒரு அடியை எடுத்து வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பின் முதல் அடியை எடுத்து வைத்தேன். மறுநாள் அந்த நாற்காலியை இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி வைத்தார். 5 அடி எடுத்து வைத்தேன். அடுத்தநாள் நாற்காலி இன்னும் அதிக தூரம் சென்றது. 10 அடி எடுத்து வைத்தேன். பல வாரங்களுக்குப் பின் நடக்க ஆரம்பித்தேன். ஜாக்கிங் போனேன். இல்லை இல்லை பறக்க ஆரம்பித்தேன். 

விபத்து நடந்து 18 மாதங்கள் கழித்து, சிகாகோ டிரையாத்லானில் பங்கேற்றேன். மிசிகன் ஏரியில் ஒரு மைல் தூரம் நீச்சல். 25 மைல் தூரம் பைக் ரைடிங். அடுத்த 6.2 மைல் தூரம் ஓட்டம். ஒரு வழியாக இலக்கை அடைந்துவிட்டேன். அதுவும் முதல் ஆளாக... ஆம், 4,000 பேர் பங்கேற்ற அந்தப் போட்டியில் நான்தான் முதல் ஆள். இன்று சாதித்துவிட்டேன். ஆனால், அன்று என் தாய் மட்டும் அந்தக் கேள்வியைக் கேட்காமல் இருந்திருந்தால், நான் என்னவாகியிருப்பேன்..?’’ - எனக் கலங்கும் காலின், அமெரிக்காவில் இன்றைய இளைஞர்களின் பெரும் இன்ஸ்பிரேஷன். 

`வாழ்க்கை என்பது பின்னவுடைகளால் நிறைந்தது.’ `இதுவும் கடந்து போகும்.’ `எல்லாவற்றையும் கடந்து முன்னேறும் சக்தி நமக்கு இருக்கிறது.’  `one step at a time’ இதுதான் அவரது தாரக மந்திரம். இந்த மந்திரம்தான்,  `இனிமேல் எழுந்து நடப்பதே சிரமம்’ என்ற சூழலில் இருந்தவரை, அமெரிக்கா சார்பாக, 6 கண்டங்களில், 25 நாடுகளில் டிரையாத்லான் போட்டிகளில் பங்கேற்க வைத்தது. பெயர் வாங்கிக் கொடுத்தது. டிரையாத்லான் வீரர் என்பதால் மட்டும் காலின் புகழ்பெறவில்லை. அடுத்த 6 ஆண்டுகளில் அவர் நிகழ்த்தியதுதான் அல்ட்டிமேட் சாதனை. 

The Explorers Grand Slam என்பது, 7 கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரத்தின் உச்சியைத் தொட்டு, பூமியின் வட, தென் துருவங்கள் வரை பயணிக்கும் ஒரு வகையான சாதனை. அரிதினும் அரிதான இந்தச் சாதனையை இதுவரை 46 பேர் மட்டுமே படைத்துள்ளனர். அதில் காலின் ஓ பிரடியும் ஒருவர் என்பது பெருமைக்குரிய விஷயமல்ல. ஏனெனில், பெண்களும் எவெரஸ்ட் சிகரத்தைத் தொட்டிருக்கிறார்கள். உலகின் 7 சிகரங்கள், இரு துருவங்களை அதி விரைவில் கடந்தவர் (132 நாள்கள்) என்பதே காலின் தன் கரியரில் செய்த உச்சபட்ச சாதனை. இதற்கான காரணகர்த்தா அவரது காதலி ஜெனா. 

காலின், டிரையாத்லான் போட்டிகளில் தீவிரமாகப் பங்கேற்றபோது அவருக்கு ஸ்பான்சர்கள் கிடைத்தது. அந்த 6 ஆண்டுகளில் காலின் உடன் இணைந்து, The Explorers Grand Slam சாதனைக்காக 18 மாதங்களாக நிதி சேர்க்கும் முயற்சியில், பயணங்களுக்கான திட்டமிடலில் ஈடுபட்டார் ஜெனா. டிரையாத்லானில் சாதிக்க எப்படித் தாயின் வார்த்தைகள் உற்சாகம் அளித்ததோ, சிகரங்கள் தொடும் சாதனையில் காதலியின் வார்த்தைகள் அதே அளவு உற்சாகம் கொடுத்ததாகச் சொல்கிறார் காலின். 

இனி சிகரம் நோக்கி...

முதல் பயணம்... அன்டார்டிகா. ``ஒரு சிறு விமானம் எங்களை அன்டார்டிகாவில் இறக்கிவிட்டுச் சென்றது. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது. எங்குப் பார்த்தாலும் பனி. கடுங்குளிர். எப்படியெனில்... ஒரு கப்பில் வெந்நீரை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அது பனிக்கட்டிகளாகக் கீழே விழும். சராசரி வெப்பநிலையே மைனஸ் 40 டிகிரி.  அதற்கு முன் என் வாழ்நாளில் அதுபோன்ற குளிரை அனுபவித்ததில்லை. இதையெல்லாம் சமாளித்து பயணம் தொடர்ந்தது. அடுத்த வாரம் பூமியின் தென் துருவத்தை அடைந்துவிட்டேன்’’ எனப் பெருமிதமாகச் சொல்லும் காலின், அடுத்த இலக்குகளை `ஜஸ்ட் லைக் தட்’ எனக் கடந்துவிட்டார். 

அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மெளன்ட் வின்சன் (Mount Vinson) சிகரம், பூமியின் தெற்கு மற்றும் மேற்கு அரைகோளத்தில் இருக்கும் உயரமான சிகரமான Aconcagua, ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரமான கிளிமஞ்சாரோ என, மற்ற சிகரங்களை விறுவிறுவெனக் கடந்துவிட்டார். 100 நாள்களில், ஒன்பதில் ஏழு இடங்களைக் கடந்தாலும் அடுத்த இரு சிகரங்கள்தாம் மலையேறுபவர்களின் சிம்மசொப்பனம்.

எஸ், அவரது அடுத்த இலக்கு எவரெஸ்ட். உடம்பு உறையும் அந்த அனுபவத்தைக் காலின் வார்த்தைகளில் கேட்டால்தான் நன்றாக இருக்கும். ``3 வாரங்களாக எவரெஸ்ட் சிகரத்தின் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்தோம். மொத்தம் 4 கேம்ப். 4வது கேம்ப்பில் இருக்கும்போது என் கால்களில் இருந்த தசை பனிக்கட்டி போல உறைந்திருந்தது. கண்கள் குழிக்குள் இருப்பது போல உள்வாங்கிவிட்டது. கண்ணம் சுருங்கி விட்டது. கடல் மட்டத்திலிருந்து 26,000 அடி உயரத்தில் இருக்கிறோம். அங்கு மனிதனால் நீண்ட நேரம் இருக்க முடியாது. அங்கிருந்து நள்ளிரவு கிளம்ப வேண்டும். எனக்கு உள்ளூரப் பதற்றம். சேட்டிலைட் போன் மூலமாக என் காதலிக்கு போன் செய்தேன்...’’- எனச் சொல்லிவிட்டு ஒரு கேப் விடுகிறார் காலின்.

காலின் காதலி ஜெனா ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன். ஆனாலும், உள்ளூர அவளுக்கும் பயம். இருந்தாலும் அவள் அதைக் காட்டிக்கொள்ளவில்லை. `இன்று இரவு பலரும் எவரெஸ்ட் சிகரத்துக்குச் செல்கிறார்கள். அதில் நீயும் ஒருவர் என்பதால் என்ன பயன் காலின்? யோசி. வருவதை எதிர்கொள். போ... உன்னால் முடியும்’ - காதலியின் வார்த்தை உடம்பை முறுக்கேற்றியது. தலைக்கு மேலே ஒரு டார்ச் லைட்டை கட்டிக்கொண்டு அந்த இருட்டில் நடக்கத் தொடங்கினார். நேரம் செல்லச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அடிவயிற்றைக் கலங்கடித்தது. பனியிலும் வியர்த்தது. ம்ஹும்... முடியவில்லை. ஒரு மனிதன் தன் இரு கைகளையும் முழங்கால்களில் முட்டுக்கொடுத்து நடக்கிறான் என்றால், அவன் என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆம், காலின் அந்த நிலையில்தான் நடந்தார். நிமிர்ந்து ஒரு அடி எடுத்து வைப்பதே பெரும்பாடாக இருந்தது. 10 அடி தூரம் 10 மைல் போலத் தெரிந்தது. உடம்பு சோர்ந்தது. கிறுகிறுத்தது. 

இதுபோன்ற தருணங்களில்தாம் உடம்பை மனது வழிநடத்த வேண்டும். தன் மனம் சொல்வதை அப்படியே கேட்டார் காலின். ``அப்போது, என் மனதில் ஒரு போராட்டம். ஒருபுறம் என் தாயின் வார்த்தைகள். one step at a time... மறுபுறம் என் காதலியின் வார்த்தைகள். I Know You can do it... இரண்டுமே பாசிட்டிவ் எனர்ஜி. தீ விபத்துக்குப் பின் வீல்சேரிலிருந்து எடுத்து வைத்த அந்த முதல் அடியை நினைத்துக்கொண்டேன். உடம்பில் இருந்த சோர்வு காணாமல் போய்விட்டது. புத்துணர்ச்சி கிடைத்தது. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் சிகரத்தின் உச்சியில் கொண்டுபோய்விட்டது போல இருந்தது. பல மணி நேரம் இப்படியே நடந்தேன். ஒரு கட்டத்தில் உச்சியைத் தவிர பார்ப்பதற்கு வேறு எதுவுமே இல்லை. ஆம், உலகின் உயரமான சிகரத்தை எட்டிவிட்டேன்’’ எனக் காலின் சொல்லும்போதே நமக்கும் எதையோ சாதித்த திருப்தி. 

காலினும் அதே திருப்தியில்தான் உச்சியிலிருந்து திரும்பி, முகாமுக்கு வந்ததும் வராததுமாக ஜெனாவுக்கு கால் செய்தார். ஆனால், அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ``கேம்ப்புக்கு வந்து ஒரு மணி நேரம் கூட இருக்காது. ஜெனாவுக்கு கால் செய்தேன். அப்போது அவள் சொன்னதை இந்த ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன். `ஓகே...கேம்ப் வந்துட்டியா? சூப்பர். அப்டியே கிளம்பு. லேட் பண்ணாதே...’ -  என அவள் சொன்னதை இப்போது நினைத்தாலும் பீதியாகிறது. 

எவரெஸ்ட்டிலிருந்து தாமதிக்காமல் கிளம்பி, இன்னும் ஒரு வாரத்தில் டெனலி சிகரத்துக்குப் போய்விட்டால், இரண்டு உலக சாதனைகளை முறியடிக்கலாம் என்பது அவளது பிளான். `பூட்ஸை அணிந்துகொள். கீழே முகாமில் ஒரு ஹெலிகாப்டர் காத்துக்கொண்டிருக்கிறது. அதில் காத்மாண்டு சென்றுவிடு. அங்கே, குளிப்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ நேரமில்லை. அங்கிருந்து மாலை விமானம் மூலம் துபாய்க்குச் சென்று, சியாட்டில் வழியாக அலாஸ்காவில் உள்ள Anchorage சிகரத்துக்குப் போய்விடு. பிளான்படி எல்லாம் நடந்தால், 3 நாளில் டெனலி சிகரத்தை எட்டி விடலாம்’ என அவள் கேப் விடாமல் சொல்லிவிட்டாள். எனக்குதான் பெண்டு நிமிர்ந்துவிட்டது!’’  

ஜெனா திட்டப்படியே காலின் டெனலிக்கு வந்துவிட்டார். ஆனால், நூறு மணி நேரம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய களைப்பு துளி கூட குறையவில்லை. ஆனாலும், டெனலிதான் கடைசி இலக்கு. ஆசுவாசத்துக்கு நேரமில்லை. ரெஸ்ட் எடுத்தால், 129 நாள்கள் பட்ட கஷ்டம் எல்லாம் வீணாகிவிடும். 3 நாள்கள் மட்டும் உயிரைக் கையில் பிடித்து நடந்தால்... ஓர் உலக சாதனை காத்திருக்கிறது. சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். இந்த ஒட்டுமொத்த பயணத்திலும் அந்த 3 நாள்கள்தான் நிறையவே சவாலாக இருந்தது என்கிறார் காலின். 

`அலாஸ்காவில் மணிக்கு 50 மைல் வேகத்தில் குளிர்காற்று வீசியது. மைனஸ் 60 டிகிரி வெப்பநிலை. எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் என்னை நெட்டித் தள்ளியது. ஒருவழியாக, 2016 மே 27-ம் தேதி மாலை பெனலி சிகரத்தின் உச்சியில், அடி எடுத்துவைத்துவிட்டேன். என் கடைசி இலக்கை அடைந்துவிட்டேன். ஆம், The Explorers Grand Slam-ல் உலக சாதனை படைத்துவிட்டேன்’’ - ஒவ்வொரு முறையும் காலின் இந்தக் கதையைச் சொல்லி விட்டு, உங்களுக்கும் இதேபோல பல சவால்கள் இருக்கலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், என ஒரு வார்த்தையைச் சொல்லி முடிப்பார். 

அது... One step at a time towards your goal.

பின் செல்ல