Published:Updated:

180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!

180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!
180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்!

வாய்ப்பு கிடைத்ததிலிருந்து சர்ச்சைக்கும் குறைவில்லை. ஃபிஃபா அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

`உலகக்கோப்பை வரலாற்றில், ரஷ்யா உலகக்கோப்பைதான் சிறந்தது!' என்று ஃபிஃபா அறிவித்துள்ளது. 1962-ம் ஆண்டு பிரேசில் அணிக்குப் பிறகு, எந்த நடப்பு சாம்பியன் அணியாலும் கோப்பையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ரஷ்ய உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, முதல் சுற்றிலேயே முடிந்துபோனது. வித்தியாசமான பல விஷயங்கள் இந்த உலகக்கோப்பையில் அரங்கேறின.

பந்தைத் தக்கவைத்து ஆடும் அணிகளுக்கு, சம்மட்டி அடி இந்த உலகக்கோப்பையில் கிடைத்துள்ளது. ரஷ்யாவுக்கு எதிராக 79 சதவிகித அளவுக்குப் பந்தைத் தக்கவைத்து ஆடிய ஸ்பெயின், முடிவில் தோல்வியையே தழுவியது. நேரெதிராக பிரான்ஸ் அணி, பெல்ஜியத்துக்கு எதிரான அரை இறுதியில் 36 சதவிதமும், குரோஷியாவுக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 34 சதவிகிதமே பந்தைத் தக்கவைத்திருந்தது.

இந்த இரு ஆட்டங்களிலும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. பந்தைத் தக்கவைப்பதைவிட அதை வைத்து என்ன செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது என்று பிரான்ஸ் அணி இந்த உலகக்கோப்பையில் உணர்த்தியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக அரையிறுதியில் நான்கு ஜாம்பவான் அணிகள் இல்லாமல் நடந்திருக்கிறது. பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய அணிகள்தாம் அவை. இதில், இத்தாலி உலகக்கோப்பைக்குத் தகுதி பெறவில்லை.

அடுத்த உலகக்கோப்பை, கத்தாரில் நடைபெறுகிறது. கத்தார் என்ற குட்டி நாடு, பல இந்திய இளைஞர்களுக்குக் கனவு தேசம். கத்தாருக்கு, உலகக்கோப்பை கால்பந்து தொடரை இங்கு நடத்திவிட வேண்டும் என்ற ஒரு கனவு இருந்தது. இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற பெரிய நாடுகளுடன் மல்லுக்கட்டி போட்டியை நடத்தும் உரிமையை 2010-ம் ஆண்டு கத்தார் பெற்றது. சர்வசாதாரணமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பம் வீசும் நாடு, கத்தார். இந்த வெப்பத்தில் 90 நிமிடம் ஓடுவது என்பது கால்பந்து வீரர்களின் உயிருக்கேகூட ஆபத்தாக முடியலாம். `மைதானத்துக்கு மேலே, செயற்கையாகக் குளிரூட்டப்பட்ட மேகங்களை உருவாக்கி போட்டி நடக்கும் மைதானத்தில் குளுமையை ஏற்படுத்துவோம், மைதானம் முழுக்கக் குளிரூட்டப்படும்'  என்றும் கத்தார் வாக்குறுதி அளித்திருந்தது. இப்படியெல்லாம் பல வித்தைகள் புரிந்து, உலகக்கோப்பையை நடத்தும் வாய்ப்பைப் பெற்றது கத்தார்.  

வாய்ப்பு கிடைத்ததிலிருந்து சர்ச்சைக்கும் குறைவில்லை. ஃபிஃபா அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுத்ததாகவும் கத்தார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஸ்டேடியம் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டவர்களில் இதுவரை 4 ஆயிரம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இறந்துள்ளனர். சர்ச்சைகளைத் தாண்டி உலகக்கோப்பையை வெற்றிகரமாக நடத்திக்காட்ட, கத்தார் முனைப்பு காட்டிவருகிறது. கத்தாரில், சர்வதேசத் தரத்திலான  ஒன்பது கால்பந்து மைதானங்கள் கட்டப்பட்டுள்ளன. கலீபா சர்வதேச மைதானம்தான் கத்தாரின் முதல் உலகக்கோப்பை மைதானம். 

வழக்கமாக ஒவ்வோர் உலகக்கோப்பை தொடரும் ஜூன், ஜூலையில்தான் நடத்தப்படும். வெப்ப நாடான கத்தாரில் நவம்பர், டிசம்பரில் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2022-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 18-ம் தேதி வரை கத்தார் உலகக்கோப்பை தொடர் நடைபெறும் என்று ஃபிஃபா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தச் சமயத்தில் கத்தாரில் வெப்பம் குறைவாக நிலவும். உலகக்கோப்பை தொடரை நடத்திய மிகப்பெரிய நாடு ரஷ்யா என்றால், மிகச்சிறிய நாடு என்ற பெருமையை கத்தார் பெறும். ஒரு எல்லையிலிருந்து இன்னோர் எல்லைக்கு 180 கிலோமீட்டர்தான் தொலைவு. 25 லட்சம்தான் மக்கள்தொகை. இதுவரைக்கும் உலகக்கோப்பைத் தொடரில் கத்தார் விளையாடியதில்லை. போட்டியை நடத்தும் நாடு என்ற சிறப்பு அந்தஸ்த்துடன் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பையில் கத்தார் களம் இறங்கும். 

எண்ணெய் வளமிக்க இந்த நாடு, உலகக்கோப்பையை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டுவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்களை வைத்து மிகப்பெரிய அளவில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன. கௌரவமிக்க உலகக்கோப்பைத் தொடரை நடத்தப்போகும் முதல் அரபு நாடு, கத்தார். 2021-ம் ஆண்டுக்குள் அனைத்து மைதானங்களும் தயாராகிவிடும். உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக நடைபெறும் கான்ஃபடரேஷன் கோப்பை 2021-ம் ஆண்டு நடைபெறும். 

180 கிலோமீட்டருக்குள்தான் அனைத்து மைதானங்களும் இருப்பதால், ரசிகர்கள் எளிதாகச்  சென்று வரலாம். அந்த வகையில் கத்தார் உலகப்போட்டி, ரசிகர்களுக்கு சற்று வித்தியாசமான அனுபவத்தைத் தரும். 2026-ம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரில் 48 அணிகள் பங்கேற்கும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 32 அணிகள் பங்கேற்கும் கடைசி உலகக்கோப்பை தொடராகவும் கத்தார் தொடர் அமையும்.

அரபு நாடானா கத்தாரில் மதுவுக்குத் தடை உள்ளது. உலகக்கோப்பை சமயத்தில் மதுவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது குறித்தும் கத்தார் அரசு ஆலோசித்துவருகிறது.  உலகக்கோப்பை கால்பந்து தொடரை நேரில் பார்க்க ஆசைப்படும் இந்தியர்களுக்கும் கத்தார் போட்டி நல்ல வாய்ப்பாக அமையும். 

அடுத்த கட்டுரைக்கு