பொது அறிவு
Published:Updated:

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!
பிரீமியம் ஸ்டோரி
News
சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!

கு.ஆனந்தராஜ் - படங்கள்: ரா.வருண் பிரசாத்

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!

யப்பன்தாங்கலில் இருக்கும், ‘பசங்க 2’ படத்தில் நடித்த குறும்புக்கார சுட்டியான ஸ்ரீவைஷ்ணவி வீட்டுக்குப் போயிருந்தோம். வீட்டுச் சுவர் முழுக்கவும் கிறுக்கல்கள். ஓர் இடம் விடாம, எட்டாத உயரத்துலகூட சேர் போட்டு ஏறி நின்னு கிறுக்கி வெச்சிருந்ததைப் பார்த்து இதெல்லாம் யாரோட வேலைன்னு கேட்டா, ‘`நான்தான் அங்கிள் கிறுக்கினேன்” என்று உற்சாகமாய்ச் சொல்கிறார் ஸ்ரீ வைஷ்ணவி.

தமிழ் சினிமாவின் குழந்தை நட்சத்திரங்கள் லிஸ்ட்டில் இப்போது முக்கியமான இடத்தில் இருப்பவர், ஸ்ரீவைஷ்ணவி. ‘பசங்க 2' படத்தில், ஃப்ரெண்டுகளுக்குப் பேய்க் கதையும், பிரின்ஸிபாலுக்கு ராமாயணத்தில் ஹல்க், ஸ்பைடர்மேன் வரும் கதைகளையும் சொல்லும் க்யூட் இளவரசி.

‘‘எனக்கு ஒரு நிமிஷம்கூடச் சும்மா இருக்கிறது பிடிக்காது. நடிப்பு, சமையல், ஸ்லோகம், யோகா என எல்லாத்திலும் புகுந்து வருவேன். வீட்டுல என்னோட கிறுக்கல்கள் இல்லாத இடமே கிடையாது. எங்க வீட்டைப் பார்த்துதான், ‘பசங்க 2' படத்துல, சூர்யா சாரின் வீட்டுப் பசங்க சுவர் முழுக்கக் கிறுக்குற மாதிரியான சீன் வெச்சாங்க. இதோ, இதுதான் என்னோட டிராயிங் போர்டு’’ என வீட்டுச் சுவரில் இருக்கும் கிறுக்கல்களை குஷியோடு காட்டினார் ஸ்ரீவைஷ்ணவி.

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!

``மூணு வயசுல இந்த வீட்டுக்குக் குடிவந்தோம். அப்போ இருந்தே சுவரில் கிறுக்கிட்டுதான் இருக்கா. கதவு, ஜன்னல், சேர், டேபிள்னு எதையும் விட மாட்டா. தோணும் விஷயங்களை எல்லாம் எழுதிக் கிறுக்கி வைப்பாள். இதுக்காக ஒருநாள்கூட நாங்க திட்டினதே இல்லை’’ என்கிறார் வைஷ்ணவியின் அப்பா.

``நான் கொஞ்சம் வளர்ந்த பிறகு, `எவ்வளவு கிறுக்கினாலும் ஏன் திட்டாம இருக்கீங்க?'னு அப்பா அம்மா கிட்ட கேட்டேன். அதுக்கு அவங்க ‘எங்க சின்ன வயசுல, இந்த மாதிரியான வாய்ப்பு கிடைக்கலை. எங்க பேரன்ட்ஸும் அதை அனுமதிக்கலை. உனக்குப் பிடிச்ச விஷயங்களைச் சுதந்திரமா செய்யவிட்டா, உன்னோட தனித்திறமைகள் வெளியே வரும். அதனால், உனக்குத் தோணும் விஷயங்களைச் சந்தோஷமா எழுது'னு என்கரேஜ் பண்ணினாங்க. என்னைப் பார்த்து, தம்பி கிருஷ்ணாவும் என்னைவிட சூப்பரா சுவர்ல வரைஞ்சு... ஸாரி, கிறுக்கி விளையாடுறான்.’’ என்று புன்னகைக்கிறார் ஸ்ரீவைஷ்ணவி.

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!

‘இப்படி வீட்டுச்சுவர் முழுக்க கிறுக்கி வெச்சிருக்காங்களேனு உங்களுக்குக் கோபம் வரலையா?’னு, வைஷ்ணவியின் அம்மா அமுதாவிடம் கேட்டோம்... ‘‘இவ ரெண்டு வயசுலேர்ந்து தரையில ஏதாவது கிறுக்கிக்கிட்டே இருப்பா. கொஞ்சம் வளர்ந்து நடக்க ஆரம்பிச்சப்புறம் கைக்கு எட்டுற வரைக்கும் சுவரில் கிறுக்க ஆரம்பிச்சுட்டா. இதை வெறும்  கிறுக்கல்கள்னு பார்க்காமல்,   இதன் மூலம் அவளோட ‘க்ரியேட்டிவிடி வளரட்டும்’னு அதை அழிக்காமல் அப்படியே விட்டு வெச்சுட்டோம்.’’ என்கிறார். ``எங்க வீட்டுக்கு வரும் உறவினர்கள், நண்பர்களோட  சுட்டிகளும் இந்தச் சுவரைப் பார்த்துட்டு, தங்கள் பங்குக்குக் கிறுக்குவாங்க, அதையும் நாங்க என்கரேஜ் பண்ணுவோம்.  எங்க வீட்டுக்கு வர்றவங்க எல்லோரும், சுவர் முழுக்கக் கிறுக்கி இருக்கிறதை ‘ஒயிட் வாஷ்’ பண்ணக்கூடாதான்னு கேப்பாங்க. நாங்க  குழந்தைகளோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கிறதைச் சொன்னதும், ‘ஹை... ஐடியா நல்லா இருக்கே, நாங்களும் முடிஞ்சவரை ஃபாலோ பண்ணுறோம்’னு சொல்வாங்க.’’ என்றார் வைஷ்ணவியின் அம்மா.

‘‘இப்போ நான் ஃபோர்த் ஸ்டாண்டர்டு முடிச்சுட்டேன். எதிர்காலத்துல பைலட், டீச்சர், ஹீரோயினு மூணு ஆசை இருக்கு. இதுல எது நடந்தாலும் சந்தோஷம்தான்’’ என்று புன்னகைக்கிறார் ஸ்ரீவைஷ்ணவி.

கிரியேட்டிவிட்டி வளரும்!

சுவரில் கிறுக்கலாம் தப்பில்லை!


“சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்குமே தங்கள் வேலை, படிப்பு, திறமை தொடர்பான செயல்பாடுகளைப் பற்றி அவ்வப்போது ஏதேனும் சில விஷயங்கள் நினைவில் வந்து போகும். அந்தத் தருணங்களில், பெரியவர்கள் பேனா - பேப்பர், செல்போன் என ஏதாவது ஒன்றின் வாயிலாகக் குறிப்பெடுக்கலாம். ஆனால், அது குழந்தைகளுக்குச் சாத்தியமில்லை. அதனால், தாங்கள் நினைக்கும் விஷயங்களைச் சுவரில் எழுதி, கிறுக்கி மகிழ்வது, குழந்தைகளுக்கு எளிமையானதாக இருக்கும். அதைப் பெற்றோர் இன்முகத்துடன் வரவேற்றால், நிச்சயமாகக் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி வளரும். ஓரளவுக்கு மெச்சூரிட்டி வரும் வரை, தான் நினைப்பதை ஏதோ ஒரு வகையில் பேசவோ, எழுதவோ நினைப்பது குழந்தைகளின் இயல்பான விஷயம்தான். ஆரம்பத்தில்,  சுவரில் கிறுக்கி எழுதத் தொடங்கி, படிப்படியாக முறையான வடிவில் எழுதி, வரையப் பழக்கப்படுத்தலாம்.  குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்த பிறகு, சுவரில் எழுதுவதைத் தவிர்க்கச் செய்ய வேண்டும். மேலும், நம்ம வீட்டுச் சுவரில் எழுதுவதுபோல, உறவினர் வீட்டில், பள்ளியில் கிறுக்கினால் பெரிய பிரச்னை ஏற்படும் என்பதையும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டியது பெற்றோர் பொறுப்பு” என்கிறார், குழந்தைகள் நல அரசு மருத்துவர் கோபாலகிருஷ்ணன்.