உலக உறுப்பு மாற்று விளையாட்டுகள் (World Transplant Games) என்பது சர்வதேச விளையாட்டு நிகழ்ச்சி. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை, `உலக உறுப்பு மாற்று சிகிச்சை விளையாட்டு கூட்டமைப்பு' ஏற்பாடு செய்கிறது.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைகளைச் செய்து கொண்டவர்கள், வாழும் நன்கொடையாளர்கள் மற்றும் நன்கொடையாளர் குடும்பங்கள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்பதுண்டு. உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதும் இந்த விளையாட்டுகளின் முக்கிய நோக்கம்.
இந்நிலையில் 2023ம் ஆண்டிற்கான World Transplant Games ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த விளையாட்டில் பங்கேற்க பெங்களூருவைச் சேர்ந்த வருண் ஆனந்த் என்ற 13 வயது சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரே இந்த போட்டியில் கலந்து கொள்ளும் இளம் இந்திய வீரர் என்று கூறப்படுகிறது.
இவருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் இருப்பது 2019ல் கண்டறியப்பட்டது. வருணின் தாய் தீபா தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை மகனுக்கு அளிக்க முன்வந்தார். பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பின்னர், சிறுநீரகம் ஒத்துப் போகிறதை அறிந்த பின்னர், தாயின் சிறுநீரகம் வருணிற்கு மாற்றி வைக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னரும் பல தடைகளைக் குடும்பத்தினர் கடக்க நேர்ந்தது. வருணின் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பின்னர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். கோவிட் தொற்றும் இவர்களை விட்ட பாடில்லை. கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து தாயும் மகனும் மீண்டனர்.

இது குறித்து வருணின் தந்தை ஆனந்த் கூறுகையில், ``சிகிச்சைக்கு இரண்டு வருடத்திற்குப் பின் 2022ல், வருண் தனது உடல் ஆரோக்கியம் மற்றும் ஸ்டாமினாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஓட்ட பயிற்சி மற்றும் படிக்கட்டுகளில் ஏறத் தொடங்கினார். ஒரு கட்டத்தில், வருண் ஒரு நாளில் 50 மாடிப்படிகள் வரை ஏறத் தொடங்கினார். அதன் பின் ஷட்டில் விளையாட்டுகளில் (Racquet sports) ஈடுபட்டார். வருணின் திறமையை உணர்ந்த பின்னர் புரொஃபஷனல் பயிற்சியில் சேர்த்தோம்'' என்று தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்புகளை பெற்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் நெட்வொர்க் நிறுவனமான `ORGAN India' அமைப்பு, உலக உறுப்பு மாற்று சிகிச்சை விளையாட்டு கூட்டமைப்பின் ஓர் உறுப்பினர் அமைப்பாக மாறியுள்ளது. வரவிருக்கும் விளையாட்டுகளில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்களின் ஸ்பான்ஸர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகிறது.
இந்த விளையாட்டுகளில் பங்கேற்பது குறித்து வருண் கூறுகையில், "விளையாட்டுகளில் பங்கேற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டபோது, எனது எதிர்காலம் மற்றும் எனது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நான் மிகவும் கவலைப்பட்டேன். ஆனால் இப்போது நடந்த அனைத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும், உங்களை நம்புவதை விட்டுவிடாதீர்கள் என்று எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்” என்றார்.