
இரா.கலைச்செல்வன்
ஹெலென் கெல்லர் ஒருமுறை இப்படிச் சொன்னார்... “உலகின் அழகான விஷயங்களைப் பார்க்கவோ, தொடவோ முடியாது. அதை நம் இதயத்தின் மூலம்தான் உணர முடியும்!”

அப்படி உணரவைக்கும் அழகான கண்டுபிடிப்புதான், ‘பிரெய்ல் ரூபிக் க்யூப்’.
ரூபிக் க்யூப் 6 பக்கங்களையும் 6 வண்ணங்களையும் கொண்டது. ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த எர்னோ ரூபிக் என்பவர் 1974-ம் ஆண்டில் கண்டுபிடித்தார். மூளைக்கு வேலை கொடுக்கும் இந்த விளையாட்டை, வண்ணங்களைப் பார்க்க முடியாதவர்களும் விளையாடும் வகையில் கண்டுபிடித்துள்ளார், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரைச் சேர்ந்த கான்ஸ்டன்டின் டத்ஸ் (Konstantin Datz).

தொழில்துறை வடிவமைப்பு வல்லுநரான இவரை ஃபேஸ்புக்கில் தொடர்புகொண்டு பேசியபோது...
“இந்த பிரெய்ல் க்யூபில்... மஞ்சள், சிவப்பு, நீலம், வெள்ளை, ஆரஞ்சு, பச்சை போன்ற வண்ணங்களின் எழுத்துகள், பிரெய்ல் மொழியில் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் அவர்களால் வண்ணங்களை உணர முடியும். நம்மால் இதை எளிதில் உணர்ந்துகொள்ள முடியாது” என்றார்.
இந்தக் கண்டுபிடிப்பின் சிறப்பம்சம் என்ன?
“இந்த விளையாட்டு அனைவரையுமே ஈர்க்கும். ஆனால், கண் பார்வை கொண்டவர்கள் விளையாடினால், வண்ண ரூபிக் க்யூபை சேர்ப்பதைவிட பெரிய சவாலாக இருக்கும். பார்வையற்றவர்களுக்கு மூளைக்கு வேலை தரும் விளையாட்டாக அமையும்.’’
இதை விளையாடிய பார்வையற்றவர்களின் ரியாக்ஷன் என்னவாக இருந்தது?
“இதைச் சேர்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால், மிகவும் விருப்பத்துடன் சவாலை ஏற்று விளையாடினார்கள்’’ என்கிறார் டத்ஸ்.
காது கேளாதவர்களுக்காக, கையில் கட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் பேண்ட் (Smart Band) ஒன்றையும் இவர் வடிவமைத்துள்ளார்.
‘‘நாம் உபயோகப்படுத்தும், அனுபவிக்கும் பல்வேறு பொருட்களை, மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்தி மகிழ வேண்டும் என்பதுதான் என் கனவு. அதற்காக, பல்வேறு பெருட்களை வடிவமைத்துக்கொண்டே இருப்பேன்’’ என்கிறார் நெகிழ்ச்சியுடன்.