Published:Updated:

பேட்டிங் மோசம், பீல்டிங் படுமோசம்... பஞ்சாப் பரிதாபங்கள்! - சுருட்டிய சன்ரைசர்ஸ் #SRHvKXIP

20 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள். எல்லாப் புகழும் பஞ்சாப் அணியின் பீல்டர்களுக்கே. 'பந்தை எல்லாம் எதுக்கு பாஸ் பிடிச்சுகிட்டு அசிங்கமா...?' என கோட்டை விட்டார்கள்.

பேட்டிங் மோசம், பீல்டிங் படுமோசம்... பஞ்சாப் பரிதாபங்கள்! - சுருட்டிய சன்ரைசர்ஸ் #SRHvKXIP
பேட்டிங் மோசம், பீல்டிங் படுமோசம்... பஞ்சாப் பரிதாபங்கள்! - சுருட்டிய சன்ரைசர்ஸ் #SRHvKXIP

ஒரு பக்கம் 200 ரன்களை சேஸ் செய்து சென்னை அணி கெத்து காட்டுகிறது. இன்னொரு பக்கம் 130-ஐ டிபென்ட் செய்து மிரட்டுகிறது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி. டி20 போட்டிகளில் பவுலர்களுக்கு வேலையே இல்லை என்ற நிலையை மாற்றி முழுக்க முழுக்க பவுலலிங்கை நம்பியே வெற்றியைக் குவிக்கிறது ஹைதராபாத்.

ஹைதராபாத்தின் பேட்டிங் மோசம் என நினைத்தாரோ என்னவோ டாஸ் ஜெயித்த அஸ்வின் பீல்டிங்கை தேர்வு செய்தார். பஞ்சாப் அணியில் கெயிலும் அங்கித் ராஜ்புத்தும்  இடம் பெற்றிருந்தார்கள். மார்க்கீ பிளேயராக இருந்தாலும் சொதப்பிய யுவராஜ் சிங் டக் அவுட்டில் உட்கார வைக்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் எந்த மாற்றமும் இல்லை. முதல் ஓவர் ராஜ்புத் பவுலிங். அணியின் ஒரே பேட்டிங் நம்பிக்கையான கேன் வில்லியம்சன் ஷார்ட் பாலை லெக் சைட் அடிக்க முயன்று லீடிங் எட்ஜில் வெளியேறினார். அந்த ஓவர் ஒரே ஒரு ரன்தான். 3-வது ஓவர் திரும்பவும் ராஜ்புத். இந்த முறை பெவிலியன் திரும்பியது ஷிகர் தவான். 

மறுபக்கம் ஸ்ரன் தன் ஓவரில் பவுண்டரி கொடுத்துக்கொண்டிருந்தார். 5-வது ஓவர் திரும்பவும் ராஜ்புத். மேட்ச்சுக்கு முன்பே, அவுட்டானா அங்கீத் பால்லதான் அவுட்டாகணும் என முடிவு செய்துவிட்டு களமிறங்கியிருப்பார்கள் போல. இந்த முறை சாஹா நடையைக் கட்டினார். இந்தப் பக்கம் ராஜ்புத் விக்கெட் எடுக்க அந்தப் பக்கம் ஸ்ரன் பவுண்டரி கொடுக்க, இப்படியாக பவர்ப்ளே முடிந்தது.

அஸ்வினும், முஜிப் ரஹ்மானும் விரல் வித்தை காட்ட பந்தைக் கையிலெடுத்தார்கள். அதிக வெற்றி பெற்றது முஜிப்தான். எக்கச்சக்க டாட் பால்கள். நான்கு ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். களத்தில் செட்டிலாகியிருந்த ஷகிப்பையும் பெவிலியனுக்கு அனுப்பினார். மறுபக்கம் நக்கிள் பால் ஸ்பெஷலிஸ்ட்டான ஆன்ட்ரூ டை இறுக்கிப் பிடிக்க ரன் எடுக்க முடியாமல் தத்தளித்தது ஹைதராபாத். மூழ்கும் டைட்டானிக்கை காப்பாற்ற கடைசிநேரம் வரை சக்கரத்தைச் சுற்றிக்கொண்டிருப்பாரே ஒரு கேப்டன்.. அதுபோல ஒற்றையாளாக பேட்டை சுற்றிக்கொண்டிருந்தார் மனீஷ் பாண்டே. 51 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த அவரும் அங்கீத்தின் கடைசி ஓவரில் அவுட். இறுதியாக களமிறங்கிய நபி, 'நான் மட்டும் என்ன தக்காளித் தொக்கா?' என அங்கீத் பாலில் அவுட்டாக, இந்தத் தொடரின் முதல் ஐந்து விக்கெட் இன்னிங்ஸ் அங்கீத்துடையது!

20 ஓவர்கள் முடிவில் 132 ரன்கள். இதில் ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் க்ரெடிட் எடுத்துக்கொள்ள எதுவுமே இல்லை. எல்லாப் புகழும் பஞ்சாப் அணியின் பீல்டர்களுக்கே. 'பந்தை எல்லாம் எதுக்கு பாஸ் பிடிச்சுகிட்டு அசிங்கமா...?' என எக்கச்சக்கமாக கோட்டை விட்டார்கள். நான்கு ஈஸி கேட்ச் ட்ராப்கள், ஏராளமான மிஸ் பீல்டிங், இதுபோக ஓவர் த்ரோ வேறு! நேற்றைய ஆட்டம் முழுவதும் 'பந்தை அவர் பிடிக்கவில்லை, பந்துதான் அவரை பிடித்திருக்கிறது' மோடிலேயே சென்றது!

பஞ்சாபின் நம்பிக்கைக்குரிய ஓபனிங் ஜோடி சேஸ் செய்ய களமிறங்கியது. கடோத்கஜன் கெயில் இதற்கு முன்னால் நான்கு முறை சந்தீப் சர்மாவின் பந்தில் அவுட்டாகியிருப்பதால் அவரை வைத்து ஓபனிங் ஸ்பெல் தொடங்கினார் கேன் வில்லியம்சன். இன்ஸ்டன்ட் பலன். 'பந்து வரட்டும், பந்து வரட்டும்' என ரொம்பவே தடவினார் கெயில். டார்கெட் கம்மி என்பதால் ராகுலும் அட்டாக் ஆட்டம் ஆடவில்லை. இரண்டாவது ஓவரில் நபி பந்தில் ஒரு சிக்ஸ் பறக்கவிட்டார் கெயில். மூன்றாவது ஓவர் மறுபடியும் கட்டை. நான்காவது நபி ஓவரில் 16 ரன்கள். வில்லியம்சன் முகத்தில் டென்ஷன் தெரிகிறது. Time for a bowling change!

நபிக்கு பதில் வந்த கவுலும் ரன்களை வாரிக்கொடுக்கிறார். டார்கெட் கம்மியாக இருக்கும்போது 30 ரன்களுக்குள் குறைந்தது மூன்று விக்கெட்களாவது வாங்கினால்தான் பேட்ஸ்மேன்களின் மேல் பிரஷர் போடமுடியும். ஆனால், 7 ஓவர்கள் முடிவில் 53 ரன்கள், விக்கெட் இழப்பின்றி. ரஷீத் கானை கொண்டுவருகிறார் கேன்! சர்ரென அவர் உள்ளே இறக்கிய பந்து ராகுலை ஏமாற்றி ஸ்டம்ப்பை தகர்க்கிறது. A Magical delivery! அடுத்த ஓவரில் பஸில் தம்பி ஆபத்தான கெயிலை காலி செய்கிறார். கேன் முகத்தில் தெளிவு பிறக்கிறது. கமான் பாய்ஸ் கமான் பாய்ஸ் என கைதட்டி உற்சாகப்படுத்துகிறார். A captain to watch out for!

கெயில் அவுட்டான 9-வது ஓவரில் இருந்து 14-வது ஓவர் முடியும் வரை வெறும் 25 ரன்கள்தான் எடுத்தது பஞ்சாப். மயாங்க் அகர்வாலும் கருண் நாயரும் இந்த கேப்பில் நடையைக் கட்டியிருந்தார்கள். 15-வது ஓவரின் முதல் பாலை சிக்ஸ் பறக்கவிட்டார் பின்ச். அடுத்த பாலையும் அதே போல் தூக்க, மனீஷ் பாண்டே சொதப்பாமல் கேட்ச் பிடித்தார். யுவராஜுக்கு பதில் களமிறங்கிய மனோஜ் திவாரி மேல்தான் மொத்த பிரஷரும். ஆனால், ஹைதராபாத் பவுலர்கள்  அவரை பெண்டு நிமிர்த்தினார்கள்.

பிரஷர் அதிகமாவது தெரிந்து நேராக பந்தை காலுக்கு இறக்கி, பேடில் படும் பாலுக்கெல்லாம் அப்பீல் செய்துகொண்டே இருந்தார்கள். இது ஒருவகையான உளவியல் தாக்குதல்தான். இந்தப் பிரஷர் தாங்கமுடியாமல் பேட்ஸ்மேன் தூக்கியடிக்க முயற்சி செய்வார்கள். அப்படித்தான் செய்தார்கள் பஞ்சாப் பேட்ஸ்மேன்களும். மனோஜ் திவாரி, டை, ஸ்ரன், அஸ்வின் என அடுத்தடுத்து நடையைக் கட்ட, இறுதியாக களமிறங்கிய முஜிப் மட்டும் கொஞ்ச நேரம் போக்கு காட்டினார். ஒரே ஒரு விக்கெட் கையிலிருக்கும்போது க்ரீஸில் இருக்கும் டெயில் எண்டர்கள் சேஸ் செய்வதெல்லாம் உலக அதிசயம். எனவே எதிர்பார்த்தபடி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன்ரைஸர்ஸ் அணி. இந்தத் தொடரில் மூன்றாவது முறையாக குறைந்த ஸ்கோரை டிபென்ட் செய்திருக்கிறது அந்த அணி. பஞ்சாப் அணிக்கோ, பேட்டிங், பீல்டிங் என கவலை தரக்கூடிய விஷயங்கள் ஏராளமாக உள்ளன. தொடரின் முக்கிய கட்டத்தில் இவ்வளவு சொதப்பல்கள் நல்லதல்ல அஸ்வின்!