ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியில், இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு, பெண்களுக்கான பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.
21 வது காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில் நேற்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின. 11 நாள்கள் நடக்கும் இந்தக் காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இன்று காலை நடந்த ஆண்களுக்கான பளுதூக்குதலில், 56 கிலோ பிரிவில் இந்தியாவின் குருராஜ் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்க வேட்டையைத் தொடங்கிவைத்தார்.
பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீராபாய் சாய்கோம் சானு களமிறங்கி பெண்கள் சார்பாக முதல் தங்கத்தைப் பெற்றுத்தந்தார். முதலில் 80 கிலோ, 84 கிலோ மற்றும் 86 கிலோ எனத் தொடர்ச்சியாக தூக்கி அரங்கத்தை அதிரவைத்தார். பின்னர் அவரது எடையை விட அதிகமான 103 கிலோ, 107 கிலோ மற்றும் 110 கிலோ என `கிளின் அண்ட் ஜெர்க்' பிரிவிலும் வெளுத்துக்கட்டினார். இதன்மூலம் இந்த விளையாட்டின் ஒட்டுமொத்த சாதனைகளையும் அவர் முறியடித்தார்.
மீராபாய் சானு 2014 ம் ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார். ஆனால், இன்றைய போட்டியில் அவர் 196 கிலோ எடையைத் தூக்கியுள்ளார். இதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் படைத்த சாதனையையும் முறியடித்து புது ரெக்கார்டு உருவாக்கி தங்கம் வென்றுள்ளார்.
யார் இந்த மீராபாய் சாய்கோம் சானு..?
23 வயதாகும் சானு, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். 2014 ம் ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில், பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
2017 ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினார் சானு.
மணிப்பூரைச் சேர்ந்தவர் குஞ்சுராணி தேவி ஒரு பளு தூக்கும் வீராங்கனை. பத்ம விருது பெற்ற குஞ்சுராணியைப் பற்றிப் படித்து, அவர் செயல்பாடுகளைப் பார்த்து இன்ஸ்ஃபயர் ஆனதாலேயே தானும் அத்துறைக்குள் நுழைய வேண்டும் என்கிற எண்ணம் சானுவுக்கு ஏற்பட்டதாம்.
பதினைந்து வயத்துக்குட்பட்டோருக்கான போட்டிகளில் சானு சாம்பியன் பட்டம் வென்றபோது அவருக்கு வயது 11, ஜுனியர் சாம்பியன் பட்டத்தை வென்றபோது வயது 17. கடந்த 2016-ம் ஆண்டில் தன் முன்மாதிரியான குஞ்சுராணியின் 12 வருடச் சாதனையை 192 கிலோ எடையைத் தூக்கியதன் மூலம் தகர்த்தெறிந்தார்.
2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சானு பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். வழக்கமாக, பயிற்சி செய்யும்போது கடினமான எடைகளைத் தூக்கிவந்தவர், போட்டி நடந்த அன்று கைகள் உறைந்ததினால் அவர் எவ்வளவு முயன்றும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் அவரால் பளு தூக்க முடியவில்லை. அந்தப் போட்டியில் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. ரசிகர்கள் பலரும் அவர் தோல்வியடைந்ததை விமர்சித்தனர். அதனால் மனமுடைந்த சானு போட்டியில் பங்கேற்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார். அவருடைய குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் கொடுத்த ஊக்கத்தினால் மீண்டும் கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்.
அவருடைய அதீத முயற்சியினால் 2017- ம் ஆண்டில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடித்தார்.
பிபிசிக்கு அளித்த பேட்டியொன்றில் , ``சில சமயங்களில் நான் கதவைச் சாத்திவிட்டு எனது மனம் போன போக்கில் நடனமாடுவேன். எனக்கு சல்மான்கான் படங்கள் என்றால் பிடிக்கும்'' என்று சிரித்து கொண்டே பதிலளித்திருக்கிறார்
காமன்வெல்த் போட்டிகள் மட்டுமன்றி சானு ஆசிய போட்டிகள் மற்றும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் ஆகியவற்றின் மீதும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.
இவ்வாண்டு பத்மஸ்ரீ விருது பெறும் ஒரே பெண் விளையாட்டுவீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இவர், கர்ணம் மல்லேஸ்வரிக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்தியவர் என்பதால் இவருக்குக் கூடுதல் குடோஸ்..!
Thanks: PC: International business times
Sportswallah