ஸ்மார்ட் கிளாஸ்
Imagination Playground 3D:
லெகோ பிளாக்குகளால் கட்டடங்கள், உருவங்களை உருவாக்குவது நம் எல்லோருக்கும் பிடிக்கும். அப்படியான ஒரு ஆப் வந்தாச்சு. ராக்கெட், கோட்டை, கப்பல் என உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப தேவையான உருவங்களை இந்த ஆப் மூலம் உருவாக்கலாம். இது, இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது. முதல் நிலையில், நீங்கள் விரும்பிய பொருளை உருவாக்கலாம். ‘கிராவிட்டி மாட்’ என்கிற இரண்டாம் நிலையில் நீங்கள் உருவாக்கிய பொருள், இயற்பியல் விதிகளுக்கு ஏற்ப இயங்கும். அதாவது, முதல் நிலையில் நீங்கள் ஒரு ராக்கெட்டை உருவாக்கினால், இரண்டாம் நிலையில் அது சீறிப் பறக்கும்.

Panda Jump Seasons:
வெள்ளைப் பஞ்சுப் பந்தில், கருமையான சிறிய பந்து போன்ற கண்களைக்கொண்ட பாண்டா கரடிகளை உங்களுக்குப் பிடிக்கும்தானே... அப்படி ஒரு பாண்டா கரடியை எந்தத் தடைகளிலும் மோதிக்கொள்ளாமல், அதனைத் தாக்க வரும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றி, சரியான இலக்கில் தாவித் தாவிச் செல்ல நீங்கள் உதவ வேண்டும். இதுதான் இந்த அழகு ஆப் தரும் விளையாட்டு. குங்ஃபூ பாண்டாவின் கவனத்தை நீங்கள் சிதறடிப்பது, புதிர் வளையத்துக்குள் சிக்கிக்கொண்ட பாண்டாவைக் காப்பாற்றுவது என பாண்டாவைவைத்து விளையாடும் குங்ஃபூகள் எக்கச்சக்கமாக இதில் கொட்டிக்கிடக்கின்றன. புகுந்து விளையாடுங்கள்.
Math Tricks:
மகாகவி பாரதியாரைப் போல ‘கணக்கு எனக்கு பிணக்கு’ என்பவரா? ராமானுஜரைப் போல கணிதப் புலி ஆவதற்கு ஆசைகொண்டவரா? இரு வகையானவர்களையும் அசத்தும் ஆப் இது. இரு எண்களைக் கூட்டுவது, கழிப்பது, பெருக்குவது, வகுப்பது போன்ற எளிய செயல்களை விரைவாகச் செய்வதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ளலாம். அதே சமயத்தில், ஒரு எண்ணை பதினொன்றால் பெருக்குவது, இரண்டு எண்களைப் பெருக்குவதற்கான எளிய முறை, ஒரு எண்ணின் வர்க்க எண் (ஸ்கொயர்) காண்பது போன்ற கடினமான கணக்குகளையும் சுலபமாகச் செய்ய இந்த ஆப் உதவுகிறது.
Paper Airplanes:
ஒரு வெள்ளைத்தாளை மடித்து, அதில் விமானம் செய்து பறக்கவிட்டு, குஷியாகத் துள்ளிக் குதித்த அனுபவம் உங்களுக்கு இருக்கும். இன்னும் விதவிதமான காகித விமானங்களைச் செய்து விளையாட இந்த ஆப் உதவும். காகிதங்களை மடித்து பொருட்களை உருவாக்கும் கலையான ஒரிகாமியின் அடிப்படை மடிப்புகளைக் கற்றுத்தருகிறது. காற்றாடித் திருவிழாக்களில் செய்வது போல சிறுத்தை, டிராகன் என விதவிதமான காகித விமானங்களை அசத்தலாகச் செய்வதற்கு இந்த ஆப் கற்றுத்தருகிறது.
-இனியவன்