Published:Updated:

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே! ஏன், எப்படி? #VikatanExclusive #INDvsSL

கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே! ஏன், எப்படி? #VikatanExclusive #INDvsSL
கொல்கத்தா டெஸ்ட்டில் இந்தியா தடுமாறுவது நல்லதே! ஏன், எப்படி? #VikatanExclusive #INDvsSL

“யுவராஜ் ஏன் டீம்ல இல்லை?''

தேர்வுக் குழுத் தலைவர்: “2019-ம் ஆண்டு உலகக்கோப்பைக்குத் தயாராகுற மாதிரி அணியைத் தேர்வுசெஞ்சிருக்கோம்."

“அணியில் மூத்த ஸ்பின்னர்கள் ஏன் இல்லை?"

பயிற்சியாளர்: “உலகக்கோப்பையைக் கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது."

“ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு ஏன் அதிக வாய்ப்பு கொடுக்கிறீர்கள்?"

கேப்டன்: “உலகக்கோப்பை போன்ற தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது முக்கியம். ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான் அணியின் ட்ரம்ப் கார்டு."

இப்படி மூத்த வீரர்களைக் கழட்டிவிட்டது, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கியது, மிடில் ஆர்டரில் அடிக்கடி பரிசோதனை செய்வது என, தேர்வுக்குழுத் தலைவரிலிருந்து கேப்டன் வரை `உலகக்கோப்பை... உலகக்கோப்பை...' என்று மனப்பாடம் செய்திருந்தவர்கள், அந்த உலகக்கோப்பைத் தொடர் எங்கு நடக்கப்போகிறது என்பதை மட்டும் மறந்துவிட்டனர்போலும். விளைவு, ‛நாம் சப்ப டீம்’ எனக் கருதிய  இலங்கையிடம் பேரடி வாங்கியிருக்கிறது இந்திய அணி.

மழையின் தொந்தரவைத் தாண்டி இந்தப் போட்டி தொடங்கியதே பெரிய விஷயம். மழை ஒருபுறம் வந்து போய்க்கொண்டிருக்க, நம் பேட்ஸ்மேன்கள் மழைக்கு சவால்விடத் தொடங்கிவிட்டனர். மழை முடிந்து களம் திரும்புவது, சிறிது நேரத்தில் அவுட்டாகி பெவிலியன்  திரும்புவது என இதுவே வாடிக்கையானது. முதல் பந்தியிலேயே ராகுல் அதைத் தொடங்கிவைக்க, தவான், கோலி, ரஹானே அவரைப் பின் தொடர்ந்தனர். இன்ஃபார்ம் பேட்ஸ்மேன்கள் என ஒருநாள் தொடரில் கொண்டாடப்பட்ட மூன்று வீரர்களும் ஒற்றை இலக்கத்திலேயே வெளியேறினர். கேப்டன் கோலியோ, ரன் கணக்கைத் தொடங்கவே இல்லை.

அணியை மீட்டெடுப்பதற்காகவே நேர்ந்துவிடப்பட்ட புஜாரா மட்டும் ஒருபுறம் போராடிக்கொண்டிருக்க, அஸ்வினும் அவசரப்பட்டு மோசமான ஒரு ஷாட் அடித்து நடையைக்கட்டினார். 74 ரன், 5 விக்கெட்கள். அதில் புஜாரா அடித்தது மட்டும் 47 ரன். அவுட்டான 5 பேட்ஸ்மேன்களும் சேர்ந்து எடுத்த ரன் 16. ஸ்கோர் போர்டைப் பார்த்தவர்களுக்கு இந்தியாவின் சரிவைவிட, “என்னடா... இலங்கை இந்தப் போடுபோடுதா!" என்ற ஆச்சர்யம்தான். ``நம்ம பேட்டிங் மோசமா... இல்லை இலங்கை பௌலிங் சூப்பரா" எல்லா ரசிகர்களின் மனதிலும் இதே கேள்விதான். ஆனால், இதற்கான பதில் இரண்டுமே இல்லை. பிட்ச்... ஈடன் கார்டனின் பிட்ச்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் போட்டிகளைப் பார்த்தால் ரணகளமாக இருக்கும். சுனில் நரைன், பியூஷ் சாவ்லா, குல்தீப் யாதவ் என மூன்று ஸ்பின்னர்களைக் களமிறக்குவார் கம்பீர். அதோடு நிற்குமா, ஷகிப் அல் ஹசன் என்கிற உலகத்தர ஆல்ரவுண்டர் ஒருவர் இருப்பார். போதாகுறைக்கு யூசுப் பதான் வேறு. ஒரு ஐ.பி.எல் போட்டியில் ஸ்பின்னர்கள் மட்டும் 18 ஓவர்கள் வீசிய நிகழ்வெல்லாம் நடந்தது உண்டு. அப்படிப்பட்ட பிட்ச் அது. ஸ்பின்னர்களின் சொர்க்கப் பூமியாக விளங்கியது ஈடன் கார்டன். பெங்கால் கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக கங்குலி மாறிய பிறகு அது மாறிவிட்டது. அவர் செய்த மாற்றம், இந்திய அணியின் இந்தத் தடுமாற்றத்துக்கு வழிவகுத்துவிட்டது.

கிரிக்கெட், விளையாடும் 22 பேரால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடிய விளையாட்டு அல்ல. ஆடும் மைதானமும் வெற்றி-தோல்வியில் மிகப்பெரிய பங்கு வகிக்கும். ஒவ்வொரு நாட்டு ஆடுகளமும் ஒவ்வொரு வகையிலானது. இங்கிலாந்து ஆடுகளங்கள் அதிகம் ஸ்விங் ஆகக்கூடியவை. இங்குதான் அடுத்த உலகக்கோப்பை நடக்கப்போகிறது. முதல் ஓவரிலிருந்து, பனியே இருந்தாலும் கடைசி ஓவர் வரை ஸ்விங் ஆகும் அந்த ஆடுகளங்களில்தான் கோப்பைக்காக இந்தியா போராட வேண்டும். ஆனால்....

எப்படியான மைதானங்களில் இந்தியா ஆடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பருக்குப் பிறகு இந்த இலங்கைத் தொடர் வரை இந்தியாவில் ஆறு தொடர்கள் விளையாடியுள்ளது. மூன்று முறை மட்டுமே வெளிநாடுகளில் விளையாடியுள்ளது. அதில் ஒன்று சாம்பியன்ஸ் டிராஃபி. இன்னொன்று இலங்கைத் தொடர். ஆஸ்திரேலியா, இலங்கை பக்கம் போய் வெகுநாள்களாகிவிட்டது. இப்போதுதான் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணப்படவுள்ளோம். இந்தியாவிலேயே விளையாடுவது இருக்கட்டும், ஆடுகளங்களாவது வித்தியாசமானவையாக இருக்கின்றனவா, இல்லை.

இதுதான் உண்மையான பிரச்னை. வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்கள் செல்லாததுகூட பிரச்னை அல்ல. ஆஸ்திரேலியாவில் வெற்றி பெற்றுவிட்டால், இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆடிவிடலாம் என்றில்லை. இங்கிலாந்து மைதானங்களைச் சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியே ஆஷஸ் தொடரைப் பறிகொடுத்ததெல்லாம் நிகழ்ந்திருக்கிறது. சிக்கல் நமது மைதானங்களின் தன்மையில்தான். புனே, கான்பூர், நாக்பூர் என இன்னும் அதே ஸ்பின்-ஃப்ரண்ட்லி பிட்ச்கள். அஸ்வினும் ஜடேஜாவும் மட்டும் பந்து வீசினாலே இந்தியா வெற்றி பெற்றுவிடலாம். போதாகுறைக்கு குல்தீப், சாஹல், அமித் மிஷ்ரா, ஜெயந்த் யாதவ், அக்சர் படேல்... டெஸ்ட் போட்டிகள் மூன்று நாளில் முடிவதும், விளையாடவரும் அணிகள் ஒயிட்வாஷ் ஆவதும் வாடிக்கையாகிவிட்டன.

குல்தீப், சாஹல் இருவரும் ஒருநாள் போட்டிகளில் அஸ்வின் - ஜடேஜா இணையை ஓரங்கட்டிவிட்டனர். வந்த புதிதிலேயே ஜொலிக்கிறார்களே! ஆடுகளத்தின் உதவி இல்லாமலா இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் சுத்தமும் சோபிக்காத அந்த இரு ஸ்பின்னர்களும், இலங்கை டெஸ்ட் தொடரில் பட்டையைக்கிளப்புகின்றனரே! ஆடுகளங்கள் சுழலுக்கு உதவாமலா, இன்னும் எத்தனை நாள்கள்தான் இந்தியா இப்படியான ஆடுகளங்களில் விளையாடிக்கொண்டிருக்கப்போகிறது, எல்லாவற்றையும் உலகக்கோப்பை மனதில்கொண்டு செய்துகொண்டிருக்கும் அணி நிர்வாகம், அந்த ஆடுகளங்களின் தன்மையைப் பற்றி அறியத் தவறிவிட்டதா? 

இங்கிலாந்து ஆடுகளங்களைப்போல் இங்கு உள்ள ஆடுகளங்களில் சிலவற்றை மாற்றியமைக்கத் தோன்றவில்லையா, அணி வீரர்கள் மட்டும் தயாராக இருந்தால் போதுமா. அந்த உலகக்கோப்பையின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கப்போவது ஒரே ஒரு ஸ்பின்னர். குறைந்தபட்சம் 30 ஓவர்களையாவது வேகப்பந்துவீச்சாளர்கள் வீசியாக வேண்டும். அவர்களை சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களிலேயே ஆடவைத்துவிட்டு, அங்கு சோபிக்கவில்லை எனக் குற்றம்சாட்டப்போகிறோமா. இத்தனை ஆண்டுகள் நிகழ்ந்தது என்னவோ அதுதான். ஆனால், எதையும் `ப்ரோ ஆக்ட்டிவா'கச் சிந்திக்கும் இந்தப் புதுக் கூட்டணியாவது இதைப் பற்றி யோசிக்க வேண்டாமா? 

கங்குலி யோசித்தார். சில மாதங்களுக்கு முன் ஈடன் ஆடுகளத்தை இங்கிலாந்து ஆடுகளம்போல் மாற்றினார்கள் க்யூரேட்டர்கள்.  சுழலுக்குச் சாதகமாக, சுத்தமாக பெளன்ஸ் ஆகாமலிருந்த ஈடன் பிட்சின் தரம் இப்போது நம் கண்முன் தெரிகிறது. சுரங்கா லக்மல் வீசிய முதல் ஓவர்... ஒரு சோற்றுப் பதம். மழையால் தடைப்பட்ட பிறகு ஆட்டம் தொடங்குகிறது. `ஈரப்பதம் அதிகமாக இருக்கும். பந்து எகிறாது'. இதுதான் அனைவரின் கணிப்பு. ராகுலும் இந்த நம்பிக்கையில்தான் களம்கண்டார். என்ன ஆச்சர்யம்... பந்து ராகுலின் இடுப்புக்கு மேலே எகிறியது. இலங்கைக்கு எதிராக தன் கடைசி இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்தவர் முதல் பந்திலேயே டக். அடுத்து வந்த புஜாரா, அந்த ஐந்து பந்துகளில் இரண்டு முறை தப்பிப்பிழைத்தார். ஒரு பால் இன் ஸ்விங் ஆகி ஸ்டம்பைப் பதம்பார்க்க வருகிறது. அடுத்த பால் அவுட் ஸ்விங் ஆகி பேட்டை உரசப் பார்க்கிறது. பௌலிங் செய்வது மெக்ராத்தோ என்றுகூடத் தோன்றியது. அதிலும், அந்தக் கடைசிப் பந்து... சான்ஸே இல்லை!

ஒருவகையில் இந்தத் தடுமாற்றம் இந்திய அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று. இங்கிலாந்து ஆடுகளத்தில் விளையாட நம் அணி தயாரா என்று `Self evaluate' செய்துபார்க்க, இது ஒரு நல்ல வாய்ப்பு. இந்தப் போட்டியில் ஒருவேளை இந்திய அணி தோற்றாலும், பௌலிங்கில் மிரட்டி வெற்றி பெற்றாலும் அடுத்த போட்டியை எதிர்நோக்குவது மட்டும் போதாது. ஏனெனில், இன்று அஸ்வினும் ஜடேஜாவும் விக்கெட் வீழ்த்துவது நமக்கு எந்த வகையிலும் உலகக்கோப்பையை வெல்ல உதவாது. கோப்பையை வெல்ல வேண்டுமானால், புவனேஷ்வர் குமாரும் ஷமியும் விக்கெட் வீழ்த்தத் தொடங்க வேண்டும். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்விங்குக்குச் சாதகமான ஆடுகளங்களில் அதிகம் ஆட வேண்டும். 

புனே பிட்ச் பராமரிப்பாளர் இரண்டு பௌலருக்குச் சாதகமாக ஆடுகளத்தைத் தயார்செய்வதாகச் சொல்லி சஸ்பெண்ட் ஆனார். இரண்டு தனிப்பட்ட பௌலர்களுக்குச் சாதகமாக ஓர் ஆடுகளத்தை மாற்ற முடியுமெனில், நம் அணிக்காக, நம் உலகக்கோப்பைக் கனவுக்காக நாட்டிலிருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட ஆடுகளங்களில் நான்கு அல்லது ஐந்தையாவது மாற்றலாம்தானே!